Saturday 26 September 2020

அன்பு கனிந்த கனிவே சக்தி

 அன்பு கனிந்த கனிவே சக்தி.

~பாரதியார்
தொன்று தொட்டு அன்பைப் பற்றி எல்லா மதத்திலும் பேசப்பட்டு வருகிறது. வீட்டில் அன்பு ஊற்று ஆரம்பித்து அது பெருகி அண்டை வீட்டிற்கும் பரவி, அந்தத் தெருவிலும் வியாபித்து, பின் தொகுதி, நாடு என்று பரவிக்கொண்டே போனால்….. அப்பப்பா.. என்ன இன்பம்… நினைக்கவே மனம் மகிழ்கிறது. ஆனால் அந்த அன்பு கைம்மாறு இல்லாத அன்பாக இருக்க வேண்டும். *அன்பே சிவம்* என்கிறது இந்து மதம். *அன்பே கடவுள்* என்று கிருத்துவர்கள் சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் இறைச்சக்தியை *ரஹீம்* என்று அழைக்கிறார்கள். அதாவது அன்பும் கருணையும் மிக்கவர் என்று அர்ததம்.
அன்பை எப்படி வெளிக்காட்ட வேண்டும்? பெற்றோர்கள் சிலர், குழந்தைகளுக்குச் சில பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, நவீன வசதிகள் கொடுத்துவிட்டோமே என்ற திருப்தியுடன் அலுவலகத்திற்குச் சென்று விடுகிறார்கள். பரிசுப் பொருட்களுக்கும் மேலாக, குழந்தைகள் எதிர்பார்க்கும் அன்பை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
சந்தோஷம் என்பது, பணம் சார்ந்த நிலையன்று. அது மனம் சார்ந்த நிலை. குழந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவை. அதிக கண்டிப்பு அல்லது கட்டாயம், நேர்மாறான விளைவை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு மனிதனும் அன்புக்கு ஏங்குகிறான். தாயின் அன்புக்குக் குழந்தையும் தன் பிள்ளைகளின் அன்புக்குப் பெற்றோரும் ஏங்குகிறார்கள். மனைவி கணவனின் அன்புக்கு, தாத்தா பாட்டி தன் பேரக் குழந்தைகளின் அன்புக்கு, மகரயாழ் நண்பன் நல்ல நட்பின் அன்புக்கு, கடைசியாக, பக்தன் கடவுளின் அன்புக்காக…. என்று எல்லோரும் அன்பினால் வசப்படுகிறார்கள்.
மனிதனின் ஆரோக்கியத்திற்கு அன்பு இன்றியமையாதது. அன்பு இல்லையென்றால் மகிழ்ச்சியில்லை… மகிழ்ச்சியில்லை என்றால் ஆரோக்கியம் இல்லை. ஆரோக்கியம் இல்லை என்றால் வாழ்க்கையில் சுவையில்லை. அன்பு குறைவினால்தான் இன்று பல முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன. முன்பு இருந்த கூட்டுக் குடும்பத்தில் அன்பு, பாசம், பண்பு ஆகியவை இருந்தன. இப்போது அவை எங்கே? தேடுவோம் அன்பை, இணைவோம் அன்பினால்.
*“துன்பம் இலாத நிலையே சக்தி,*
*தூக்கமிலாக் கண்விழிப்பே சக்தி*
அன்பு கனிந்த கனிவே சக்தி”
~பாரதியார்*
பாரதி மொழிந்த “அன்பு கனிந்த சக்தியை" உருவாக்குவோம். அன்பே சிவம்.

No comments:

Post a Comment