Monday 19 October 2020

"மன பாரத்தைக் குறைக்கும்"

 "மன பாரத்தைக் குறைக்கும்"

‘மன்னிப்பு’ பழைய சுமைகளில் திணறிக் கொண்டிருக்கிற மனம் புதிதாய் ஒன்றைக் காண்பது சாத்தியமல்ல.!
வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதர் என்று இதுவரை ஒருவர் பிறந்திருக்க முடியாது.
தவறு செய்வது இயற்கை.
ஆனால் அந்தத் தவறுக்காக வருத்தம் கொள்ளாமல் இருப்பது மேலும் தவறு செய்யத் தூண்டக்கூடியது.
இயந்திரமாக வாழ்க்கையில் ஓடிக் கொண்டே இருக்கும் போது நாம் செய்த சிறு தவறுகளோ அல்லது அதன் பின் விளைவுகளோ நம் கண்ணில் படுவதில்லை.
ஆனால் ஓய்ந்து உட்காரும் போது என்றோ செய்த அந்த சிறிய தவறின் பாதிப்பு ஏதோ ஒரு உருவில் வந்து உறுத்தலாம்.
அன்று அதனைச் சரிக்கட்ட நினைத்தாலும் அது முடியாமல் போகலாம்.
இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி செய்த தவறை எண்ணி வருந்தி ‘மன்னிப்பு’ என்ற ஒரு சொல்லை சம்பந்தப்பட்டவரிடம் உடனே உதிர்ப்பது தான்.
அதன் பிறகு காட்சிகள் மாறலாம் அல்லது மாறாமலும் போகலாம்.
ஆனாலும் நம் அகம் குற்ற உணர்வால் வேகாமலாவது இருக்கக்கூடும்.
அகம் குளிர ஆரம்பித்தால் புறப்பணிகள் தொய்வில்லாமல் போகும் அல்லவா.
செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதால் சுய கௌரவம் ஒரு நாளும் பாதிக்காது.
மாறாக அது நல்ல பண்பின் வெளிப்பாடாகத் தான் இருக்கும்.
எதிராளியின் கோபம் பஞ்சாய்ப் பறக்கும் வாய்ப்புகளும் அதிகம்.
நம்மை விட உயர்ந்தவர்களோ அல்லது தாழ்ந்தவர்களோ எவராக இருப்பினும் நாம் ஒரே விதமாக நடந்து கொள்வதிலேயே நம் சுதந்திரமும் அடங்கியிருக்கிறது.
நாம் நம் அக வாழ்க்கையில் சில நல்ல தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், புற வாழ்க்கையில் விரும்பத்தக்க மாற்றங்கள் தானே வந்தமையும் அல்லவா.

No comments:

Post a Comment