Friday 23 October 2020

எதிர்பார்ப்பும் முன்னேற்றமும் . .

 எதிர்பார்ப்பும் முன்னேற்றமும் . .

எல்லோருக்கும் எதிர்பார்ப்பு என்பது இயல்பான வெளிப்பாடு தான்.
சிறுவயது முதலே இதுதான் இலட்சியம், இதுயிதைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாதவர்களே கிடையாது.
விளையாட்டாகவோ உண்மையான எதிர்பார்ப்பாகவோ அந்த இலட்சியம் இருக்கலாம்.
அது மெய்ப்படுமா என்பதைக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
முதலில் மனம் எதன் மீதோ ஆசையைப் பதிக்கிறது.
அதையே நினைத்து வளரும் போது அதன் மீது ஒரு ஈர்ப்பும் எதிர்பார்ப்பும் வருகிறது.
அதை அடைய தக்க உபாயத்தை நாடும் போது இலட்சியம் மெய்ப்படும்.
ஆனால் அதற்கான முயற்சியோ உழைப்போ எதையும் போடாமல் சும்மாவே அதன்மீது வெறித்தனமாக ஆசை கொள்வது மிகவும் ஆபத்தானது.
அது நிறைவேறாத போது அது தன்னால் வந்த தவறு என்று மனம் சிந்திக்காது.
மாற்றாக அதை எப்படியேனும் அடைந்து விடவே மனம் துடிக்கும்.
அது தீய உணர்வுகளை விதைத்து குற்றச் செயல்களைச் செய்யவும் தூண்டும்.
வாழ்க்கையில் இலட்சியத்தை எட்டிப் பிடிக்க எதிர்பார்ப்பை நோக்கிச் செல்ல தன்னை எல்லா வகையிலும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
பெரிதாகக் கனவு காண்பதில் ஒரு தவறில்லை.
அது மெய்ப்பட தேவையான தகுதிகளை வளர்த்துக் கொண்டு முன்னேற வேண்டும்.
தேர்வில் நிறைய மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் வரவில்லை; பெண்வீட்டில் நிறைய சீர்வரிசை தருவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் செய்யவில்லை; விழுந்த பொருளாதாரம் இனி எழுந்து நிற்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அது மீண்டுவர ஓராண்டு ஆகும்போல; கம்பனியில் நிறைய சம்பளம் தருவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் சராசரியாகத் தான் தந்தனர்; மழை பெய்து விதைத்தால் நல்ல மகசூல் வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் பொய்த்து போனது; இப்படி எத்தனையோபேர் பலவித எதிர்பார்ப்புகளை நெஞ்சில் சுமந்தவாறு வாழ்கிறார்கள்.
அதில் அவர்களுடைய எக்காம் வெளிப் படுவதை உணரமுடிகிறது.
இது ஏன்? தகுதிக்கேற்ப உழைப்பும் விவேகமும் உபாயமும் செயல்பாடும் நூறு சதவிகிதம் இருந்தால் எதிர்பார்ப்பு ஓரளவுக்குப் பூர்த்தியாகி இருக்கும்.
நீங்கள் எதிர்பார்த்தவைகளுக்கும் உங்கள் வாழ்க்கையின் யதார்த்தமான நடை முறைகளுக்கும் அதிக இடைவெளியும் வேறுபாடும் இருக்கலாம்.
அச்சமயம் அங்கே மன அழுத்தம் ஏற்படும். பல்லாண்டுகளாய் ஆசைப்பட்டு எதிர்பார்த்து அதற்காக முயற்சிசெய்து அதை நோக்கிப் போகும் போது மனதில் உங்கள் மீதே உங்களுக்குக் கோபம் ஆத்திரம் எல்லாம் வரும்.
இதன் விளைவால் நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மீது கடுமையாக நடந்து கொள்ளும் போக்கு தென்படும்.
இந்த விபரீதமான வெளிப்பாடு தேவையில்லை தான். மனதில் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் இயல்பாய் எது சாத்தியப்படுமோ அதை ஏற்றுக்கொண்டு பயணித்துக்கொண்டு போகவேண்டும்.

No comments:

Post a Comment