Wednesday 21 October 2020

உங்களை மற்றவரோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

 உங்களை மற்றவரோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

சமூக வலைதளங்கள் இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்துள்ளன.
பலர் தங்களது விலைமதிப்பற்ற நேரத்தை சமூக வலைதளங்களிலேயே மூழ்கடித்து வருகின்றனர்.
மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் அடக்க முடியாத ஆர்வம் கொண்டுள்ளனர்.
மற்றவர்களைப் பற்றி சமூக வலைதளங்கள் மூலமாகத் தொடர்ந்து கண்காணித்து வருவது அவர்களைப் போலவே வாழ வேண்டும் என்ற தீராத ஆசையை மனதில் ஏற்படுத்திவிடுகிறது. அவர்கள் புதிய பொருள்களை வாங்கினால் நமக்கும் அந்தப் பொருள்களை வாங்க வேண்டும் என்ற ஆவல் தோன்றும்.
வெளிநாடுகளுக்கோ சுற்றுலாத் தலங்களுக்கோ அவர்கள் பயணித்தால், நாமும் அங்கு பயணிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிடும். அவ்வாறு ஏற்படும் ஆசைகளை நாம் நிறைவேற்ற முயற்சி செய்தால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம். அவற்றை நிறைவேற்ற முடியாமல், அந்த ஆசைகளைத் தொடர்ந்து மனதில் கொண்டிருந்தால் அமைதியை இழந்து மனஅழுத்தத்துக்கு உள்ளாகும் நிலைஉருவாகும்.
அப்படியானால், இதிலிருந்து விடுபட வழி உள்ளதா?
நிச்சயம் உள்ளது
பெரும்பாலானோர் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அதைக் காணும் நாம் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பதாக எண்ணி அவர்களைப் போலவே வாழத் துணிகிறோம். அவர்களைப் போலவே உடையணியவும், அவர்கள் வைத்திருக்கும் பொருள்களை வாங்கவும் தீரா ஆசை கொள்கிறோம்.
ஆனால், உங்கள் வாழ்வில் காணப்படும் துன்பம் நிறைந்த பக்கங்கள் அவர்களின் வாழ்விலும் உண்டு என்ற அடிப்படையை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டுவிட்டால் அவர்களிடம் உள்ள பொருள்களுக்காகவும் அவர்கள் வாழும் வாழ்க்கைக்காகவும் நீங்கள் ஏக்கத்தை வளர்த்துக் கொண்டு அச்சத்துக்கு உள்ளாக மாட்டீர்கள்.
அடுத்தது, உங்களிடம் இல்லாத பொருள்களுக்காக ஏங்குவதை நீங்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அத்தகைய எண்ணங்கள் உங்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைச் சிதைத்துவிடும். உங்களிடம் என்ன இருக்கிறதோ அவற்றில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையில்லாத மனஅழுத்தத்தில் சிக்கி உழல்வதிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
எனவே, மற்றவர்கள் வாழ்வைக் குறித்து அறிந்து கொள்வதில் செலுத்தும் கவனத்தை உங்களின் வாழ்க்கை குறித்த சிந்தனைகளில் நீங்கள் செலுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் விரயமாகும் உங்கள் நேரத்தை மற்ற பயனுள்ள விவகாரங்களை நோக்கி மடைதிருப்பினால் உங்கள் வாழ்வு மேம்படுவதோடு உங்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வும் சிறக்கும்.

No comments:

Post a Comment