Friday 9 October 2020

உழைப்பு தந்த உயர்வு.

 உழைப்பு தந்த உயர்வு.

தற்போது ஓட்டலில் டேபிள் துடைப்பதை பார்த்து இருக்கிறீர்களா? டேபிளில் சிதறி கிடக்கும் உணவு துணுக்குகள், சாம்பார், சட்னி, குழம்புகளை வழித்து எடுக்க அலுமினிய காப்பிட்ட சதுரமான ஒரு ரப்பர் துண்டம்.. ஸ்பிரே செய்வதற்கு பர்ஃப்யூமுடு சோப் வாட்டர் துடைக்க
அருமையான
வேஸ்ட் பனியன் கிளாத்.! இவையனைத்தையும் எடுத்து போக ஒரு டிராலி.!
1988 இல் நான் டேபிள் துடைக்கும் போது கிழிந்த பாதி குற்றாலத்துண்டு, டேபிளின் உணவுத் துகள்களை வழித்து துடைக்க தடித்த வாழை இலையின் பின்புற காம்பை அரையடி நீளத்திற்கு வெட்டித் தருவார்கள். டிராலி கிடையாது ப்ளாஸ்டிக் டிரே ஒன்றை இடுப்பில் ஆர்மோனியம் போல வைத்துக் கொள்ள வேண்டும்.. வாழைக் காம்பு வழுக்கும் கைப்பிடிக்குள் நிற்காது.!
அது நழுவினால் டேபிளில் துடைத்த எச்சில் துணுக்குகள் டேபிளில் அமர்ந்திருப்பவர் மேல் சிதறிவிடும்.. ஓங்கி நம்மை அறைந்துவிட்டு இவன் எல்லாம் டேபிள் துடைக்க கூட லாயக்கில்லை இவனை எல்லாம் வேலைக்கு வைச்சிட்டு,, என்ற சான்றிதழை வாயால் வழங்கிவிட்டுச் செல்வார்கள். ஒரு நாள் சம்பளம் போய்விடும் அன்று 6 ரூபாய் ஒரு நாள் சம்பளம்.!
அப்போது சிக் ஷாம்பு அறிமுகம் ஆகியிருந்த நேரம் ஒரு சாஷே 50 பைசா தான் அதை வாங்கி தண்ணீரில் கலந்து டேபிளில் தெளிப்பேன் அந்த வாசனையே வாடிக்கையாளரை அசத்தும். குரலில் கனிவுடன் "சார் ஒரு நிமிஷம் நான் டேபிளை துடைச்சதும் நீங்க உட்கார்ந்துக்கோங்க என்பேன். நிற்பார்கள் என் வேலை இப்போது பதட்டமின்றி முடியும் ஒரு நாளைக்கு 4 பாக்கெட் ஷாம்பு என் காசில் வாங்குவேன்.!
அன்று அது என் சம்பளத்தில் 3 இல் ஒரு பங்கு ஆனாலும் பதட்டமின்றி வேலை செய்தேன். என் ஓட்டலில் மேனேஜராக இருந்தவர் அருணாச்சலம் 3மாதங்கள் கழித்து இதை கேள்விப்பட்டதும் என்னை அழைத்து பாராட்டி அந்த 3 மாதமும் நான்செலவழித்த பணத்தை இரு மடங்காக திருப்பித் தந்து இனி ஓட்டலே ஷாம்பு வாங்கித் தரும் என்றார்.!
உன் வேலை டேபிள் துடைப்பதாக இருந்தாலும் சிரத்தையாகச் செய் நீ வாழ்க்கையில் உயர்வாய் என அன்று சொல்லிக் கொடுத்த குருகுலம் அது.. ஆரியபவன் பை நைட் மேலமாசிவீதி மதுரை.. இன்று அதே மேலமாசி வீதியில் ஆண்டுக்கு சில கோடிகள் டர்ன் ஓவர் செய்யும் என் சொந்த நிறுவனம் இருக்கிறது. அன்று நான் ஓட்டலில் ஒரு க்ளீனராக டேபிள் துடைத்தேன் இதை என்றும் பெருமையாகச் சொல்வேன்.! (மீள்)

No comments:

Post a Comment