Saturday 4 November 2023

கடுகு பெரிய துவரை தேங்காய் . . .

 கடுகு பெரிய துவரை தேங்காய் . . .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் உலக ஒருமைப்பாடு அமைய வேண்டும் என்னும் எண்ணம் நம் பைந்தமிழ்ப் பாவலர் நெஞ்சத்தில் மலர்ந்தமையை,
*"யாதும் ஊரே யாவரும் கேளிர்"* என்னும் சொல்லோவியம் உணர்த்துகின்றது.
தன்னலம் விடுத்துப்
பொதுநலம் பேண வேண்டும் என்னும் உயரிய கருத்தினை இஃது நமக்கு அறிவிக்கின்றது.
சிந்தனை செயலின் அடிப்படை. சிந்தனை வளர்ச்சி பெற்றால் செயலில் வளர்ச்சி பெற முடியும்.
செயலும் சிந்தனையும் வளர்ச்சி பெறும்பொழுது மனிதர்களுக்கு நிறம், இனம், சமயம் முதலிய வேறுபாடுகளைக் கடந்து
'உலகவர்' என்ற எண்ணம் தோன்றும்.
இவ்வுலகம் நம் வீடு, இவ்வுலகிலுள்ளவர்கள் எல்லோரும்
நம் உடன் பிறந்தவர்கள்
என்ற கருத்துப் பிறக்கும். உலகம் அளாவிய அன்பு மலர்வதற்கு இவையே சிறந்த சாதனங்களாம்.
வாழ்வு மனிதனைப் பண்படுத்துகின்றது. இளமையில் தனக்கென்று வாழுகின்றான். இளமையும் எழிலும் நிறைந்த நங்கையுடன் வாழும் பொழுது தன்னை மறந்து அவளுக்காக வாழுகின்றான். குழந்தை பிறந்ததும் அன்பு அதனினும் விரிவடைகின்றது.
விருந்தோம்புதல், உறவினர்களைப் பேணுதல், ஒப்புரவறிதல் போன்ற கடமைகளை மேற்கொள்ளும்போது அன்பின் தன்மையிலே பெரிய வளர்ச்சியைக் காணுகின்றோம். இவ்விதம் மெல்ல மெல்லத் தன்னலம் கரைந்து பொதுநலம் மிகுந்து உலகவனாய் வாழும் மனநிலை பெறுகின்றான்.
தன் மனைவி
வீடு வாசல் சோறு
என்று வாழ்பவன் மனமோ
*"கடுகு"* போன்று சிறியது.
தன் ஊர் அளவில் அன்பு காட்டுபவன் மனமோ சிறிய கடுகைக் காட்டிலும் கொஞ்சம் *"பெரிய துவரை"* போன்றது.
தன்னாட்டளவில் அன்பு கொண்டு, பிற நாடுகள் மீது பகைமை கொள்பவன் மனமோ அதனினும் பெரிய *"தேங்காய்"* போன்றது. ஆனால் உலகிலுள்ள மக்களெல்லாம் 'ஒன்று' என்று எண்ணுகின்ற உள்ளந்தான் "தாயுள்ளம்". அஃதே தன்னலம் நீங்கிய "இன்பஉள்ளம்". இவ்வுள்ளமே
*"யாதும் ஊரே யாவரும் கேளிர்''*
என்று கருதும் "நல்உள்ளம்".

No comments:

Post a Comment