Saturday 29 October 2022

தெரிந்து தெளிதல் வேண்டும்.

 தெரிந்து தெளிதல் வேண்டும்.

பரம்பரை அனுபவம் என்பதும் சிறிதும் இல்லாமல், குருவையும் அணுகிக் கேளாமல், தானே ஒருவன் சுயமாக ஓலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத் தொடங்கினான்.
*'ஒத்தைத் தலைவலிக்கு இரு குரங்கின் கைச்சாறு தடவக் குணமாகும்'* என்று ஓலைச் சுவடியிலிருந்தது.
இவன் இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் பிடித்துக் கொண்டுவந்தான். பாறையிலே அதன் கைகளை வெட்டி நசுக்கிச் சாறு பிழியலானான்.
அப்போது அங்கே வந்த பெரியவர், தம்பி! என்ன இது என்று காரணம் கேட்டார். இவன் தான் ஓலையில் படித்த செய்தியைச் சொன்னான்.
அவனது அறியாமையைக் கண்டு மனம் இறங்கிய பெரியவர் சொன்னார் "தம்பி, இரு குரங்கின் கைச்சாறு என்பது மறைமொழி. அது குரங்கின் சாறு அல்ல; *முசு என்றால் குரங்கு.* இரு குரங்கின் கைச்சாறு என்றால்
முசுமுசுக்கைச் சாறு* என்பது பொருள்."
"இனி நீ வைத்தியம் செய்வதாக இருந்தால் முன் அனுபவம் உள்ள பெரியோரை அணுகிக் கேட்டு, அவர் கைப்பக்குவ முறையைத் தெரிந்து தொழில் செய்ய வேண்டும்.
நூலைப் படித்துத் தானே தெரிந்து கொண்டதாக நினைப்பதும் தவறு.
பெரியோரை அணுகிச் சந்தேகம் கேட்க வெட்கப்படுவதும் தவறு. நன்கு தெரிந்து தெளிந்து தொழில் செய்யவேண்டும்" என அறிவுரை வழங்கிச் சென்றார்.
"குரு இல்லாத வித்தை பாழ்" என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்ததன் பொருள் இதுதான்.
எந்த கலையையும்
குரு மூலமாகக் கற்றால் சிறப்பு.

No comments:

Post a Comment