Wednesday 26 October 2022

ஆனந்தம் பரமானந்தம்.

 ஆனந்தம் பரமானந்தம்.

ஒருவரிடம் அறம் செய்வதற்கு எதுவுமில்லை என்றாலும், மனதார அறம் செய்ய விரும்பினாலே போதும். அதற்கான வழி கிடைத்துவிடும். பலனும் உண்டு, 'தர்மம் தலை காக்கும்' என்பர். தலையை மட்டுமின்றி; தலைமுறையையே செழிக்கச் செய்வது தர்மம். விருப்பமும் ஆர்வமும் பொங்க அறம் செய்யத் துவங்கி அதன்படி செயல்பட்டு வந்தால் நாளெல்லாம் திருநாளே.
குவித்து வைக்கப்பட்ட சர்க்கரை மீது ஏறி ஒரு எறும்பு எவ்வளவுதான் முயற்சி செய்து வயிறார உண்டாலும், எடுத்துச் சென்றாலும் அந்த சர்க்கரைக் குன்று சிறிதும் பாதிக்கப்படுவதில்லை. முன்பிருந்தபடியே இருக்கும். அதுபோல, பக்தர்கள் எவ்வளவுதான் பரவச நிலையில் ஆடினாலும், பாடினாலும் இன்னும் யாராலும் முழுமையாக அறியப்படாதவராகவே இருக்கிறார் கடவுள்.
பூனைகளுக்கு எலியைப் பிடிக்கும் சக்தி உண்டு. அதே பூனையால் புலியை பிடித்துவிட முடியாது. அதுபோல, எல்லா மனிதர்களுக்கும் ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடையும் ஆற்றல் இருக்கிறது. ஆனால், அதற்கான தகுதியைப் பெறவில்லை என்றால் உயர்நிலையை அடைய முடியாது.
ஒருவர் நன்றாக எழுதினால் நாம் பேனா, பென்சிலுக்குப் பாராட்டு விழா எடுப்பதில்லை. எழுதியவரையே புகழ்கிறோம். நம் மூலம் எழுதுபவர் கடவுள். அவரே அனைத்துப் புகழுக்கும் உரியவர் என்பதை உணர வேண்டும்.
தாயும் தந்தையும் கலந்த ஆனந்தத்தில் துவங்கிய வாழ்வை அஞ்ஞானத்தால் அழுகையிலும் துக்கத்திலும் முடிக்கிறான் மனிதன். ஆனால் ஞானிகளோ, ஆத்மாவை உணர்ந்து பரமாத்மா வில் பிரவேசித்து ஆனந்தத்தில் துவங்கிய வாழ்க்கையை பரமானந்தத்தில் நிறைவு செய்கின்றனர். தேடுதல் நிரம்பிய வாழ்வில் உங்களின் உள்ளே நீங்களே தேடுங்கள்.

No comments:

Post a Comment