Wednesday 19 October 2022

17-10-2022 அன்று மா. பாரதி முத்துநாயகம் பதிவு. பழைய பனையோலை

 17-10-2022 அன்று

மா. பாரதி முத்துநாயகம் பதிவு.
பழைய பனையோலை
17.10.2021
கவியரசர் கண்ணதாசன்
எல்லா கவிஞர்களுக்கும் இருக்கும் செம்மாப்பு கண்ணதாசனுக்கும் இருந்தது.
ஒரு முறை ஏதோவொரு சூழ்நிலையில் ஒருவரைத் (தயாரிப்பாளரோ அல்லது இயக்குநரோ தெரியவில்லை) தேடிச் சென்ற கண்ணதாசன், நள்ளிரவில் அவர் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார்.
உள்ளேயிருந்து " யாரது? "
என்ற குரல் எழுந்தது!
" An outstanding poet standing out"
(' ஒரு மகத்தான கவிஞன் உன் வீட்டு வாசலிலே நிற்கிறான்! ')
என்றார் கண்ணதாசன்!
தான் யாரென்று இப்படி அறிமுகம் செய்து கொள்ளும் ஒருவரை, யாராவது கதவைத் திறந்து வரவேற்காமல் இருப்பார்களா?
எப்போதோ படித்தது! கண்ணதாசன் எழுதிய எத்தனையோ பாடல்களும் கவிதைகளும் இருக்க, அவர் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் மேற்படி நிகழ்ச்சிதான் என் நினைவில் முந்தும்!
' கவிஞன் ஞானோர் காலக் கணிதம்
கருப்பொருளை உருப்பட வைப்பேன்! '
என்றார் ஓரிடத்தில்!
சங்க இலக்கியம் தொட்டு, பாரதியார் வரையிலும் கதிரவனைப் பாடாத கவிஞர் இல்லை!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக!
அதுவும் பாரதியாரைச் சொல்ல வேண்டுமா?
பாரதிதாசனையும் சுரதாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்!
ஆனாலும்,
' தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தைத் தருவாய் போற்றி! '
என்ற இரண்டு அடிகளும் எழுகின்ற ஞாயிற்றின் கதிர்களைக் காணும்தோறும் காணும்தோறும் எவர் கவிதை வரிகளுக்கும் முன்னால் இவர் வரிகள் என் நினைவில் வந்து நிற்கின்றனவே!
அவர் நடத்திய தென்றல் பத்திரிகையில் வாசகர்களின் கேள்விக்குப் பதிளிக்கும் நேர்மையைப் பாருங்கள்:
கேள்வி: ' கோவலன் பிறந்த குலத்தில் பிறந்த நீங்கள் சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகளை உயர்த்திப் பிடிக்காமல் கம்ப ராமாயணத்தை எழுதிய கம்பரையே எப்போதும் உயர்வாக எழுதுகிறீர்களே? '
கவிஞர் அளித்த பதில்:
" ...... எனது பார்வையில் இளங்கோவடிகள் மதிப்புக்குரியவராகவே காட்சி தருகிறார். ஆனால் கம்பரோ வியப்புக்குரியவராகவே காட்சி தருகிறார்... "
மதிப்பதும் வியப்பதும் வேறு வேறல்லவா!
கேள்வி: ' உங்கள் கதைகளை எப்போதும் காமத்தை மையமாக வைத்தே எழுதுகிறீர்களே? "
கவிஞர்:
" காமம் எப்போதும் மையமாகத்தான் இருக்கும்! "
கலைவாணர் மறைந்த போது,
' இளமையில் மாண்டான், என்றும்
இளமையாய் வாழ எண்ணி'
என்று பாடிய கண்ணதாசனும் அதே வயதில் மறைந்தார்!
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை ' தோடி' என்கிற ராகத்தை மிகச் சிறப்பாக ( நான்கைந்து மணி நேரம் கூட) வாசிப்பார். அவர் மறைந்த போது,
' செவியினில் ஓடி,
எங்கள் சிந்தையில் ஓடி, இந்தப்
புவியெலாம் ஓடி, நின்பாற் பொங்கிய ' தோடி' வேறிங்கு
எவரிடம் போகும்? '
என்று பாடி அஞ்சலி செலுத்தினார்.
இரவுப் பொழுது வருவதை,
' மாலைஇளங் கருக்கல் வையந் தழுவி வர
சோலைக் குயில்கள் சுதியடங்கிக் கூடடைய
வாலைப் பருவமகள் மௌன நடை போட்டது போல்
சேலை நடிக்கவரும் தென்றல் குழைந்தசைய
வெங்கதிரைப் போக்கியபின் வெண்ணிலவு முன்னெழும்ப
தங்க நிலவில் தட்டேந்தி மீன்கள் வர
...................
வந்த இரவு'
என்ற கவிஞரின் கவிதையைப் பேராசிரியர் சி. பா. பாலசுப்பிரமணியன் அவர்கள் ( டாக்டர் மு. வ. அவர்களின் மாணவர்),
' உலகக் கவியரங்கில் ( Universal poem) இடம் பெறத்தக்கது'
என்று வியந்தமை ஈண்டு நோக்கத்தக்கது!
எவ்வளவோ சொல்லிச் செல்லலாம். ஆனால் அடியேன் அறிந்த அளவு சிறிதே!
கவிஞருடைய நினைவை இதோ இந்தக் கவிதை யுடன் இப்போதைக்கு முடித்துக் கொள்வோம்:
' மனமே உன்னால் மயங்கிய நாட்கள்' இது கவிதையின் தலைப்பு.
' கனியை ஒரு நாள் கசப்பெனச் சொல்வாய்
கசப்பை ஒரு நாள் கனியென உண்பாய்;
தனிமை சுகத்தைத் தருமென விடுப்பாய்
தாளாத் தனிமை நெருப்பென முடிப்பாய்;
மனையொடும் சுற்றம் மகிழ்வெனச் சிரிப்பாய்
மறுநாள் துறவே மாண்பெனச் சலிப்பாய்;
தனையே புகழ்வாய் தாளாதொரு நாள்
தனையே நோவாய் தலைப்புழு போல் வாய்!
பட்டம் பதவி பணமென பறப்பாய்
பலிக்காவிடிலோ பலித்ததை வெறுப்பாய்;
திட்டம் திறமை செயல்முறை என்பாய்
தேராதாயின் வேரோடு அழிவாய்
கொட்டும் மழையைக் கொடுமழை என்பாய்
கோடை வெயிலும் கொடுமை என்றழுவாய்
எட்டும் வரையில்
ஏங்கியே கிடப்பாய்
எட்டிய பின் அதை
ஏனோ வெறுப்பாய்..... '
மனித மனத்தின் ஊசலாட்டத்தை இதைவிட எளிமையாகச் சொல்ல முடியாதல்லவா!
இன்று கவியரசரின் நினைவுநாள். நான்கு பத்தாண்டுகள் கடந்து போனாலும் அவருடைய பாடல் வரிகள் காலத்தால் கரைந்து போகாது!
மா. பாரதிமுத்துநாயகம்


No comments:

Post a Comment