Wednesday 12 October 2022

சரியான பாதையில் செல்வது ஞானம்.

 சரியான பாதையில் செல்வது ஞானம்.

டான் மில்மன் என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் தன் ஆன்மீக குருவாக ஒரு கேஸ் ஸ்டேஷனில் பணி புரியும் ஒரு வயதான மனிதரை ஏற்றுக் கொண்டிருந்தார்.
பணி சாதாரணமானதென்றாலும் அந்த மனிதரின் பக்குவம், பேச்சு, நடவடிக்கை எல்லாம் அவரை வித்தியாசப்படுத்தி ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டியதால் அவருக்கு சாக்ரடீஸ் என்ற பெயரிட்டு அழைத்தார்.
ஒரு முறை சாக்ரடீஸ் காரைத் துணியால் துடைத்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் டால் மில்மன் கேட்டார். “சாக்ரடீஸ், அறிவுக்கும் ஞானத்திற்கும் இடையே என்ன வித்தியாசம்?”.
சாக்ரடீஸ் சொன்னார். “காரை எப்படித் துடைப்பது என்று அறிந்து வைத்திருப்பது அறிவு. அப்படியே துடைப்பது ஞானம்”
எதையும் அறிந்து கொள்ள ஆர்வமும், முயற்சியும் போதும். ஆனால் அறிந்தபடி நடப்பது அவ்வளவு சுலபமல்ல. எது சரி என்று அறிவது அறிவு என்றால், அந்த சரியான பாதையில் செல்வது ஞானம். எது சிறந்தது என்று அறிவு என்றால், அப்படிச் சிறப்பாக வாழ்வது ஞானம்.
அறிவுக்குத் துல்லியமான அளவுகோல் இருக்கிறது. இவர் இத்தனை நூல்கள் படித்திருக்கிறார், இவர் இத்தனை விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறார் என்று சரியாகச் சொல்ல முடியும். ஆனால் ஞானம் அப்படி மேம்போக்காக சுலபமாக அளக்கக் கூடியதல்ல. உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே உணர முடியும். அதனால் தான் அறிவாளிகளை அடையாளம் கண்டு கொள்ள முடிந்த அளவுக்கு நம்மால் ஞானிகளை அடையாளம் காண முடிவதில்லை.
அதன் விளைவு ஆன்மீக அறிவாளிகளை எல்லாம் ஞானிகள் என்று கணிக்கும் தவறுகளைச் செய்து விடுகிறோம். ‘அவர் நான்கு வேதங்களையும் படித்தவர், மகா ஞானி’ என்று பலர் சொல்லக் கேட்கலாம். வேதங்களைப் படித்தவர் என்பது உண்மை, ஆனால் ஞானி என்பது அனுமானம் மட்டுமே.
வேதங்களைப் படித்ததால் மட்டுமே ஞானியாக விட முடியாது. படித்தது உணரப்பட்டு வாழ்க்கையில் வெளிப்பட்டால் மட்டுமே ஞானம் ஆகும்.
அது வரை அவருக்கு ‘நான்கு வேதங்களைப் படித்தவர்’ என்ற அடைமொழி மட்டுமே பொருந்தும். இந்த சூட்சுமத்தை அறியாமல் ஆன்மீக அன்பர்கள் எத்தனை பேரை ஞானியாக நம்பி ஏமாறுகிறார்கள் என்பதற்கு நிகழ்காலத்தில் எத்தனையோ உதாரணங்களைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment