Tuesday 18 August 2020

முருக வழிபாடு மிகப்பழமையானது

 *முருக வழிபாடு மிகப்பழமையானது*

மகாபாரதம்,சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.அதில் கிருஷ்ணர்,அர்ச்சுனனுக்கு,போர்க்களத்தில் செய்கிற உபதேசம், கீதை எனப்படுகிறது. இதில், ஒவ்வொன்றிலும் சிறப்பாக இருப்பதைப் பட்டியலிடுகிறார் கிருஷ்ணர்;
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்,மலர்களில் நான் தாமரையாக இருக்கிறேன் எனச் சொல்லும் போது, 'படைத்தளபதிகளில், நான் தேவசேனாபதி கந்தனாக இருக்கிறேன்' என்கிறார்!
மகாபாரதத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கருதப்படுவது இராமாயணம்.
இதில் ஒரு கிளைக்கதையில், படகோட்டியாக வருகிற குகனின் வரலாறு சொல்லப்படுகிறது. குகன், பூர்வாசிரமத்தில், ஒரு முனிவரின் மகன்; ஒருமுறை,வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிற ஒரு ஏழை, தன் கஷ்டம் தீர, முனிவரிடம் ஆலோசனை கேட்க வருகிறான். முனிவர் அப்போது இல்லாததால், முனிவரின் மகனிடம் தன் கஷ்டங்களைக் கூறி,அவைகளுக்குப் பரிகாரம் கேட்கிறான். முனிவரின் மகன், கந்தனை மனமுருகி வழிபாடு செய்யச் சொல்லி, *குகா, குகா,குகா* என மூன்றுமுறை நாம ஜபம் செய்யச் சொல்கிறான். அப்போது அங்கு வந்த முனிவர், 'குகா' என மனமுருகி ஒருமுறை அழைத்தாலே போதுமே,பிறவிக் கடலையே கடக்கலாமே, மூன்றுமுறை எதற்கு எனச் சொல்லி,இந்த அற்புத ஆலோசனையைச் சொல்லியதற்காக,இராம அவதாரத்தில், குகன் என்ற பெயரில் படகோட்டியாகப் பிறந்து, இராமகாதையில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக விளங்குவாய் எனத் தன் மகனை ஆசீர்வதிக்கிறார்!
கிரேக்க புராண கதைகளில், செவ்வாய் கிரகத்தை,zious எனவும்,அதன் அதிபதியை,Zion எனவும் குறிக்கிறார்கள். இந்த zious தான் ஆங்கில காலண்டரில்,Tues(day) என மறுவியது! சிவந்த நிறம் என இதற்குப் பெயர்! கிரேக்கப் புராணப்படி,Zion வானுலகத்தினரின் படைத்தளபதி!அலெக்சான்டரின் தாய், இவரை வணங்கி, இவர் அருளால் அலெக்சாண்டரைப் பெற்றெடுக்கிறாள்! உலகை வெல்ல மிகப் பெரும் படையோடு செல்லும் அலெக்சான்டர், மிகப் பெரிய அளவில்,Zion கடவுளுக்குப் பூசைகள் செய்கிறார்.அலெக்சான்டரின் முக்கிய ஆலோசகராக,விளங்கிய டாலமி,தன் குறிப்புகளில் இத்தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்!(அலெக்சான்டரை எதிர்த்த, மன்னன் புருஷோத்தமனை,போரஸ் என,டாலமி, குறிப்பிடுகிறார்) இந்தியப் புராணங்களிலும் செவ்வாய் கிரகம் சிவப்பு நிறமுடையதெனவும், அதன் அதிபதியான முருகன் தேவசேனாபதி எனவும் சொல்லப்படுகிறது!
முருகனை *செய்யோன்* என்கிறார் அருணகிரி!(Zion,zious,செவ்வாய்,செய்யோன்,Tues) ஆக,முருக வழிபாடு மிகப் பழமையானதென்பதில் சந்தேகமே இல்லை!
இங்குபோல், வடக்கில் பல தெய்வ வழிபாடு கிடையாது! சிவன்,சக்தி,லெஷ்மி, நாராயணர்,ராதா,கிருஷ்ணர்,அனுமன் என்ற அளவிலேயே இருக்கும்.
கச்சியப்பர் கந்த புராணம் எழுதுமுன்பே, காளிதாசன் குமாரசம்பவம் எனும் முருகன் காவியத்தை எழுதி இருக்கிறான்!
சங்க கால இலக்கியத்தில் பத்துப் பாட்டு,முருகனைப் பற்றியது!
அஞ்சுமுக சிவன் என சிவனையும், ஆறுமுக சிவன் என முருகனையும் பொதுவாக வணங்குகிறார்கள்!
ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையேயும்,ஆஸ்த்ரேலியப் பழங்குடி மக்களிடையேயும்,முருக வழிபாட்டை ஒத்த வழிபாடுகள் இன்றும் வழக்கில்உள்ளன.
கலியுக வரதன் கந்தனை வணங்கி, கவலைகள் நீங்கப்பெற்று இகபர நலம் பெறுவோம்!
வேலுண்டு வினை இல்லை!
மயிலுண்டு பயமில்லை!
குகனுண்டு குறைவில்லை!
முருகா சரணம்!

No comments:

Post a Comment