Tuesday 25 August 2020

இயற்கை கற்பிக்கும் பாடம்

 இயற்கை கற்பிக்கும் பாடம்

இயற்கை நமக்கு எடுக்கிற வகுப்பு தான் இயற்கைச் சீற்றங்கள். இயற்கைச் சீற்றங்கள் வந்த போது நாம் அழிவினை மட்டுமே பார்க்கிறோம், ஆனால்!, எத்தனை மனிதர்களுக்கு இவ்வளவு தான் வாழ்க்கையா...? என்ற பேருண்மையை உணர்த்தி இருக்கிறது என்பதை நாம் பார்ப்பதில்லை...
எத்தனை தொண்டு செய்யும் உள்ளங்களை ஒவ்வொரு இயற்கைப் பேரிடர்களும் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பதை நாம் காண்பதில்லை...
நமக்குத் தான் ஓடுவதற்கே நேரம் சரியாக இருக்கின்றதே...! கண்ணுக்குத் தெரியாத ஒரு தீநுண்மி இன்று உலகையே முடக்கி விட்டதே...!
இப்படியொன்று நடக்குமா...? என எவரும் கணித்திருக்கவே முடியாது, ஆனால் நடந்திருக்கிறது...
பெருஞ் செல்வந்தர்கள், ஆளுமைச் சமூகத்தினர் என எந்தவிதப் பாகுபாடும் இல்லை. ஏழைக்கு எட்டாத கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் போன்றவை இன்று மூடப்பட்டிருக்கின்றன...
காலம் காலமாக நம்பிய தெய்வங்கள் எல்லோரையும் கைவிட்டது, அனைத்து மத வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டு இருக்கிறது...
இன்னும் சில மாதங்கள் நீடித்தால் இன்று செல்வந்தர் என நம்பிக் கொண்டிருக்கும் பலர் ஏழைகளாக மாறிப் போவார்கள்...!
இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது 'கொரோனா' என்னும் தீநுண்மி பாதிப்பினால் உலகம் முழுவதும் அறுநூறாயிரத்திற்கும் மேல் இறந்திருக்கிறார்கள் என்று 'உலக சுகாதர நிறுவனம்' அறிவித்திருக்கிறது...
எண்ணிக்கையாகக் காணும் போது இதன் வலிகளைப் பெரிதாக உணராமல் நமக்கென்ன என்று எண்ணிக் கொண்டு நம்மால் கடந்து செல்ல முடிகிறது...
ஆனால்! இறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது, அவர்களுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. அவை மட்டும் நமக்குத் தெரிந்தால் நாம் அனைவருமே மன நோயாளிகளாக மாறிப் போவோம்...!
இதில் எவருமே இப்படியொரு நிலை வந்து இறந்து போவோம் என நினைத்திருக்கவே மாட்டார்கள். ஆனால்!, உறுதியற்றது தானே வாழ்க்கை...
உறுதியற்ற இந்த வாழ்க்கையில் நாம் ஓடிக் கொண்டே இருப்பதை இனியாவது நிறுத்திக் கொள்வோம், ஓடி உயரங்களை அடைபவர்கள் வாழ்க்கையில் மகிழ்வாக இருக்கிறார்கள் எனக் கூறிடவியலாது...
எத்தனை மாடமாளிகைகளில் இன்னல்களோடு இரவில் உறங்குகிறார்கள். மிகப்பெரிய மகிழுந்துகளில் எத்தனை பணம் படைத்தோர் மன அழுத்தத்தோடு பயணிக்கிறார்கள் என அவர்களுக்குத் தான் தெரியும்...
ஆனால்!, உண்மையை நாம் உணராமல் அங்கே செல்ல முயற்சி செய்து கொண்டே இருக்கின்றோம், இங்கே பத்தாயிரம் ஊதியக்காரர்களும் வாழுகிறார்கள், நூறாயிரக் கணக்கில் ஊதியக்காரர்களும் வாழுகிறார்கள்....
ஆகவே!, பணம் எப்போதுமே பொருட்டல்ல, 'காலம்' அதுவே தலைமைப் பொருள்...!
ஆம் நண்பர்களே...!
மன வருத்தமின்றி வாழ்வதற்கு இது போதுமென உங்களுக்குத் தோன்றுகிற வரை ஓடுங்கள். பிறகு நின்று விடுங்கள், இருப்பதை வைத்துக் கொண்டு அமைதியாக வாழப் பழகுங்கள்...!
ஆம்!, இவ்வளவு தான் வாழ்க்கை என்பதை முதலில் புரிவோம்.

No comments:

Post a Comment