Tuesday 18 August 2020

புதிய முதலீடுகள்

 புதிய முதலீடுகள்

சீனாவில் இருந்து வெளியேறும், 24க்கும் மேற்பட்ட மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க, 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளன.
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் மற்றும் கொரோனா தொற்று காரணமாக, சீனாவில் இருந்து வெளியேற பல்வேறு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், 'இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மொபைல்போன் தயாரிப்பு மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நிறுவனங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்கும் விற்பனையில் 4 முதல் 6 சதவீத ஊக்கத்தொகை சலுகை பெற தகுதியுடையவை' என, கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி அறிவித்தார்.
153 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் உற்பத்திக்கு இந்த அறிவிப்பு வழிவகுப்பதுடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு மில்லியன் வேலைகளை உருவாக்க முடியும்' என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தென்கொரியாவின் சாம்சங், அமெரிக்காவின் ஆப்பிள் போன்களை தயாரிக்கும் பாக்ஸ்கான், தைவானை சேர்ந்த விஸ்ட்ரான் கார்ப் மற்றும் பெகாட்ரான் கார்ப் இந்தியா ஆகிய நிறுவனங்கள், இந்தியாவில் ஸ்மார்ட் போன் தொழிற்சாலை அமைப்பதற்கு 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்வதை உறுதி செய்துள்ளன.
இதனிடையே, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்க சலுகை வழங்குவதை நீட்டித்துள்ள மத்திய அரசு, வாகனங்கள், ஜவுளி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளுக்கு ஊக்கச் சலுகையை விரிவுப்படுத்த ஆலோசித்து வருகிறது.
'இது ஐந்து ஆண்டுகளில் 55 பில்லியன் டாலர் கூடுதல் முதலீட்டை கொண்டு வருவதோடு, இந்தியாவின் பொருளாதார உற்பத்தியில் 0.5 சதவீதத்தை சேர்க்கும்' என, 'கிரெடிட் சூயிஸ் குழும ஏ.ஜி.,யின், நீல்காந்த் மிஸ்ரா தலைமையிலான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'மேக் இன் இந்தியா திட்டத்தின் இலக்கை எட்டும் வகையில், தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உற்பத்தி அதிகரிக்கும். ஆசியாவில் மிக குறைந்த வரிவிதிப்பு கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வரும் நிலையில், புதிய முதலீடுகளை ஈர்க்க முடியும். இது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி' என, போபா செக்யூரிட்டிசின் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment