Thursday 19 October 2023

ஆளுமை எனும் அழகு . . .

 ஆளுமை எனும் அழகு . . .

சில சமயங்களில்
எதேச்சையாக,
அதிர்ஷ்டவசமாக,
சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம்.
அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடக்காமல் கூடப் போகும்.
ஏனென்றால் அச்சமயம் வராமல் கூடப் போய்விடலாம்.
உங்களுக்கு தெரியுமா
கோடான கோடித் தடவை ஒரு திடமான சுவரின் ஊடே நடந்து அதைக் கடக்க முயன்றால், அதில் ஒரு முறை நீங்கள் கடந்துவிட முடியுமென்று குவான்டம் கோட்பாடு (Quantum Theory) கூடச் சொல்கிறது. அதில் சிறிய சிக்கல் அந்த கோடான கோடி தடவையைத் தொடும்முன் உங்கள் மண்டையோடு உடைந்திருக்கும்.
நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது,
நீங்கள் பயத்திலும்
பதற்றத்திலும் வாழ்கிறீர்கள்.
நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவை மேல் உங்களுக்கு
ஆளுமை இருக்கும்.
அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.
*தோல்வியில்
தொலைவதை நிறுத்துங்கள்*
உறுதியோடு இருக்கும் ஒரு மனிதனுக்குத் தோல்வி என்பதே கிடையாது. ஒரு நாளுக்கு 100 முறை நீங்கள் கீழே விழுந்தால், அவை நீங்கள் கற்கும் 100 பாடங்களாகிவிடும்.
நீங்கள் விரும்புவதை
உருவாக்குவதில் உறுதியுடன் இருந்தால், உங்கள் மனம் ஒரே திசையில் நிலைத்துவிடும். உங்கள் மனம் இருக்கும் திசையில் உங்கள் உணர்ச்சிகளும் ஒன்றிவிடும்.
ஏனென்றால் நீங்கள் சிந்திக்கும் விதமாகத்தான் நீங்கள் வாழ்க்கையை உணரும் விதமும் இருக்கும். உங்கள் எண்ணமும் உணர்வுகளும் ஒன்று சேர்ந்தால், உங்கள் சக்திகளும் உங்கள் உடலும்கூட அத்திசையில் ஒருங்கிணைந்துவிடும்.
இவை அனைத்தும் ஒருமுகமாகின்ற போது, நீங்கள் விரும்புவதை உருவாக்கி உங்கள் கனவை நிஜமாக்கும் திறமை அபாரமாகிவிடும். பல விதங்களில் நீங்கள் படைப்பாளராகி விடுவீர்கள்.
*தேவை தெளிவு
– குருட்டு நம்பிக்கை அல்ல*
ஒரு மனிதனுக்குத் தேவை
தெளிவு,
குருட்டு நம்பிக்கை அல்ல.
ஒரு கூட்டத்தின் நடுவே நீங்கள் நடக்கும்போது, உங்கள் பார்வை தெளிவாக இருந்தால், ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார் என்று உங்களால் பார்க்க முடிந்தால், கூட்டத்தில் ஒருவரைக் கூடத் தொடாமல் நீங்கள் மிகச் சுலபமாக நடந்து சென்றுவிடுவீர்கள்.
உங்கள் பார்வைத் தெளிவாக இல்லை, ஆனால் நீங்கள் அதீத நம்பிக்கை உடையவர் என்கிறபோது, எல்லோர் மீதும் நடந்து செல்வீர்கள். தெளிவில்லாத காரணத்தால், தன்னம்பிக்கை நல்ல மாற்றுப்பொருள் என்று கருதுகிறீர்கள். அது ஒருக்காலமும் அப்படி ஆக முடியாது.
உதாரணமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளையெல்லாம் இப்படி எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுங்கள். “சரி, தலை விழுந்தால் முதல் திட்டப்படி செயல்படுவோம்,
ஒருவேளை பூ விழுந்துவிட்டால் இரண்டாம் திட்டப்படி செயல்படுவோம்,” என்று நீங்கள் முடிவெடுத்து செயல்பட்டால், உங்கள் திட்டம் வேலை செய்ய 50 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறதா இல்லையா.
வாழ்க்கையில் 50 சதவிகிதம்தான் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்கிறபோது, நீங்கள் இரண்டு தொழில்கள்தான் செய்ய முடியும்.
ஒன்று நீங்கள் வானிலை அறிக்கையாளராகவோ
அல்லது
ஜோசியக்காரராகவோ
இருக்க முடியும்.
இந்த பூமியில் நீங்கள் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.

No comments:

Post a Comment