Wednesday 5 April 2023

*பங்குனி உத்திரம் சிறப்பு பதிவு*

 *பங்குனி உத்திரம் சிறப்பு பதிவு*

*வித்தியாசமான வடிவத்தில் காட்சி தரும் ஸ்தலங்கள்*
🙏🙏🙏🙏🙏🙏🙏
*முருகப்பெருமாள் பல்வேறு ஸ்தலங்களில் பல்வேறு விதமான திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த ஸ்தங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.*
*திருவக்கரை முருகன் 😘
*திருவக்கரை என்ற இடத்தில் வடிவாம்பிகை சமேத சந்திரசேகரர் ஆலயம் இருக்கிறது. வக்ரன் என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலம் ‘வக்கரை’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். மூலவர் மூன்று முக லிங்கமாக இருப்பது சிறப்பு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள், இங்கே கல்லாக மாறி இருப்பதை காண முடியும். இந்த சிவன் கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் பிரசித்தி பெற்றவராக திகழ்கிறார். இவர் பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப்பெருமானாக, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை உள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற தலம் இதுவாகும். அந்த திருப்புகழைப் பாடி, இத்தல முருகனை வணங்கினால், நினைத்தது நிறைவேறும். திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக, புதுச்சேரி செல்லும் சாலையில் இருக்கிறது திருவக்கரை திருத்தலம்.*
*திருவிடைக்கழி குமரன் 😘
*தன் பக்தனான மார்க்கண்டேயனை ‘என்றும் 16’ வயதுடன் இருக்க ஈசன் அருளிய தலம் திருக்கடவூர். இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவிடைக்கழி என்ற திருத்தலம். இங்குள்ள குரா மரத்தின் அடியில்தான் ராகு பகவான், முருகப்பெருமானை வழிபட்டு பேறுபெற்றார் என்கிறது தல புராணம். இந்த ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், பிரதோஷ நாயகர், சண்டேஸ்வரர் என அனைத்து வடிவங்களும் முருகப்பெருமானாகவே காட்சியளிப்பது ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். தெய்வானைக்கு, இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதி இருக்கிறது. தாயாருக்கு அருகில் முருகப்பெருமானின் ‘குஞ்சரி ரஞ்சித குமரன்’ என்ற இறை வடிவத்தை வைத்துள்ளனர். இத்தல முருகப்பெருமானை வழிபட்டால் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.*
*தங்கக் குடங்கள் 😘
*முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். இந்தக் கோவிலின் கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ‘ஓம்’ என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்திருப்பதை அறிய முடியும். இந்த ஆலயத்தில் தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப்படுகின்றது.*
*இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்துத் தருவார்கள். இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் பன்னிரண்டு நரம்புகள் இலையில் இருக்கும். இவை முருகனின் பன்னிரண்டு திருக்கரங்களாகும்.*
*கல்யாண முருகர் 😘
*சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் வழியில் சென்னையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சிறுவாபுரி என்ற திருத்தலம். இங்கு சிறுவாபுரி முருகன் அருள்பாலித்து வருகிறார். இத்தல இறைவனின் பெயர் ‘வள்ளி மணவாளப் பெருமாள்’ என்பதாகும். இவர் கல்யாண முருகராக இருப்பது விசேஷமான ஒன்றாகும். இதுவும் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடப் பெற்ற தலம் என்று கூறப்படுகிறது. இத்தல இறைவனை வழிபாடு செய்தால், சொந்த வீடு கனவு நனவாகும் என்கிறார்கள்.*
*ஆண்டார்குப்பம் முருகன் 😘
*ஆண்டார்குப்பம் என்ற இடத்தில் அதிகாரத் தோரணை கொண்ட வடிவத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார். பிரணவத்திற்கு பொருள் கூறும்படி அதிகாரத்துடன் இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்கும் தோரணையில் அவரது தோற்றம் இருக்கிறது. பிரணவத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்ததோடு மட்டுமின்றி, அவரது படைப்புத் தொழிலையும் எடுத்துக் கொண்டார். அதிகாரத்தைக் கையில் எடுத்த ஆண்டார்குப்பம் முருகன், தம் அடியவர்களுக்கும் அதிகாரம் நிறைந்த பதவிகளை வழங்குவதாக ஐதீகம். சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டு ரோடு வழியில் பொன்னேரி சாலையில் இருக்கிறது, ஆண்டார்குப்பம்.*

No comments:

Post a Comment