Monday 3 April 2023

உயர்ந்த நரசிம்ஹ அவதாரம் : --

 உயர்ந்த நரசிம்ஹ அவதாரம் : --

முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார் எழுதிய குறையொன்றுமில்லை நூலிலிருந்து…….!
விச்வத்துக்குக் காரணமானவனும் வேதாந்தத்திலே சொல்லப்பட்ட வித்யைகளுக்குப் பொருளாய் இருக்கக் கூடியவனும் நரசிம்ஹன்தான்.
அப்படிப்பட்டவனை வெறும் உக்ர ரூபியாக இல்லாமல், லக்ஷ்மியோடு கூடிய லக்ஷ்மி நரசிம்ஹனாக நாம் உபாசிக்க வேண்டும்.
ஈஸ்வரனே ஆச்சர்யமாய், நரசிம்ஹனை உபாசிக்கும் படியான மந்திரத்தைச் சொல்கிறார். அதை யார் சொல்கிறார்களோ அவர்களுக்கு ஆரோக்கியம், வித்யை, செல்வம் எல்லாம் சம்பவிக்கும்.
முக்கண்ணனே முக்கண்ணனின் பெருமையைச் சொல்லும் இந்த ஸ்தோத்திரம் அஹிர் புத்ரிய சம்ஹிதை என்பதில் உள்ளது.
எனவே,எல்ல அவதாரங்களிலும் உயர்ந்தது நரசிம்ஹ அவதாரம் எனக் கொள்ளலாம். இதை உபசாரமாகவோ, அதிசயோக்தியாகவோ சொல்லவில்லை.. காரணமிருக்கிறது!
நரசிம்ஹ அவதாரம் எதனால் ஏற்பட்டது என்று கேட்டால், ஹிரண்ய கசிபுவை சம்ஹரிப்பதற்காக ஏற்பட்டது என்று சாதாரணமாய் பதில் கிடைக்கும்.
ஆனால் ஹிரண்ய சம்ஹாரத்துக்காக ஏற்பட்டது அல்ல இந்த அவதாரம்.
சரி, பிரஹலாதனை காப்பதற்காக எற்பட்டதா இந்த அவதாரம் என்றால் அதுவும் இல்லை.
அக்கினியில் தூக்கிப்போடும்போதும், மலையில் இருந்து உருட்டும் போதும், சமுத்திரத்தில் எறிந்த போதும், யானையைக் கொண்டு இடறச் செய்த போதும், விஷப் பாம்புகளிடையே விடப்பட்ட போதும் பிரஹலாதனை யார் காப்பாற்றினார்கள்?
அப்போதெல்லாம் அவதரிக்காத நரசிம்ஹன், பிரஹலாதனின் வார்த்தையைக் காப்பாற்றத்தான் அவதரிக்கிறான்!
“எங்குமுளன் கண்ணன், அவன் இல்லாத இடம் கிடையாது” என்று பிரஹலாதன் சொன்னபோது அதை உண்மையாக்க பரமாத்மா அவசரத் திருக்கோலம் பூண்டு சர்வ பதார்த்தங்களிலேயும் நிறைந்தான்!
இப்படி அவனை அவதரிக்க செய்த பிரஹலாதனே அவன் பெருமையைப் பேசுகிறான்.
அவசர அவசரமாகப் போட்டுக் கொண்ட அவதாரமாம். யோசித்து எடுத்த ராமாவதாரம் போல் அன்றி, தேவதைகளின் பிரார்த்தனைகளுக்கிரங்கி தோன்றிய கிருஷ்ணாவதாரம் போல் அன்றி, நினைத்த மாத்திரத்தில் எடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.
அவசரத் திருக்கோலம் என்றாலும் அதுதான் மிகவும் அழகான அவதாரமாக அமைந்திருக்கிறது!
மிக ஏற்பாடாக விருந்து சமைக்கும் போது எல்லாம் பிரமாதமாக அமைவதில்லை. ஆனால், ஊரிலிருந்து வரும் திடீர் விருந்தினருக்கு அவசரமாய்த் தயாரிக்கப்படும் எளிய உணவு அற்புதமாக அமைகிறது!
நரசிம்ஹ அவதாரம் இந்த அவசர உபசரணை மாதிரி…
அதன் அழகைச் சொல்லி முடியாது.
பிரஹலாதனின் வாக்கை மட்டுமின்றி பிரும்மாவின் வாக்கைக் காப்பதற்காகவும் எடுக்கப்பட்டது நரசிம்ஹ அவதாரம்.
ஹிரன்யகசிபுவுக்கு எசகுபிசகான நிபந்தனைகள் அடங்கிய வரத்தைக் கொடுத்தவர் அவர்தானே…
“இரவிலும், பகலிலும், மனிதராலும், மிருகத்தாலும் எனக்கு அழிவு வரக்கூடாது” என்றெல்லாம் கேட்டான் அல்லவா.
பிரும்மா கொடுத்த அத்தனை வாக்கையும் காப்பாற்றிக் கொடுத்து, அதே சமயத்தில் ஹிரண்யகசிபுவை சம்ஹாரமும் பண்ணப் பரிவுடன் எடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.
பிரும்மா வாக்குக் கொடுத்துவிட்டால் என்ன? என்று அதை மீறும் வல்லமையும், உரிமையும் பகவானுக்கு இல்லையா என்ன? ஆனால் அவன் பிரும்மாவின் வாக்கைக் காப்பாற்றிக் கொடுக்க பிரயத்தனத்துடன் அவதரித்தான். ஏன்..?
அந்த வாக்கு மீறப்பட்டால், பிரும்மாவின் வரம் செல்லாது என்று ஆகிவிடும்! அப்புறம் ஸ்தோத்திரம் பண்ணுவார்களா? ஏற்கெனவே அவருக்கு ஸ்தோத்திரமும் கோயிலும் குறைவு… அவர் தொடர்பான மந்திரங்களை தொனிகுறைத்துத்தான் சொல்ல வேண்டும் என்று வாக்கு தேவதையின் சாபம் வேறு இருக்கிறது.
ஆக, பிரும்மவுக்கு ஏற்கெனவே ஸ்தோத்திரமும் கோயில்களும் குறைவு. இந்த நிலையிலே, பகவான் அவரை மதிக்கலைன்னா… வேறு யார் மதிப்பார்கள்? அதனால்தான் பிரும்மாவின் வாக்கைக் காப்பாற்ற “அகடிதகடனா” சாமர்த்தியத்தோடு அவதரித்தான் பகவான்.
அவனுக்கு எத்தனை காருண்யம் பாருங்கள்

No comments:

Post a Comment