Monday 7 March 2022

ஆனந்தமாய் வாழலாம்.

 ஆனந்தமாய் வாழலாம்.

பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று.
நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.
ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.
நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.
நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களைச் சீர் செய்வதுதான். அந்த எண்ணங் களுக்கு உருவம் கொடுப்பதுதான்.
ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப் பார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவது தான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.
ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்.
Revathi Gurusamy and 1 other

No comments:

Post a Comment