Monday 21 March 2022

அகத்தியர் திருக்கோவில் பஞ்சேஷ்டி

 அகத்தியர் திருக்கோவில் பஞ்சேஷ்டி:

ஒரு சமயம் -
​அகத்தியப் பெருமான் தவம் புரிந்து கொண்டிருக்கும் பொழுது, அரக்கர் வம்சத்தை சேர்ந்த "சுகேது" என்பவன் - தன் குடும்பத்தாரோடு அவர் காலில் வந்து விழுந்தான்.
அசுரர் குடும்பத்தைச் சேர்ந்த "சுகேது" எதற்காக தன் காலில் விழவேண்டும் என்று அகஸ்த்தியப் பெருமான், தன் ஞானக் கண்ணால் பார்த்த பொழுது, "சுகேது" மிகவும் உத்தமன் என்றும், முன் ஜென்ம கர்மவினையால் அரக்கர் குலத்தில் பிறந்தவன் என்பதையும், அசுரர் குடும்பத்தில் பிறந்தாலும் சதா சர்வ காலமும் சிவபெருமானையே வழிபட்டு வருவதால் மற்ற அசுரர்கள் சுகேதுவையும், அவன் குடும்பத்தையும் துன்புறுத்தி வருவதாக அறிந்தார்.
இந்த சுகேதுவையும், அவன் குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தார்.
யாகம் மூலமாகத்தான் சுகேதுவின் தோஷத்தை போக்கி, முக்தி கொடுக்க முடியும் என்பதை உணர்ந்த அகத்தியர், தேவயாகம், பிரம்மயாகம், பூதயாகம், பிதுர்யாகம், மானுடயாகம் என்ற ஐந்து யாகங்களை செய்ய நினைத்தார். அதே சமயம் இந்த யாகத்தை செய்யவிடாமல் அரக்கர்கள் கூட்டம் வரும். இதை எப்படித் தடுப்பது என்று நினைக்கும் பொழுது, உமையவளே அகத்தியன் முன் தோன்றினாள்!
"அகத்தியரே! உங்களது யாகம் பற்றி நான் முக்கண்ணன் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை நேரிடையாகக் கண்டதில்லை, அந்த பாக்கியத்தை அருள வேண்டும்" என்று கருணையோடு வேண்டினாள்.
உமாதேவியே இப்படியொரு வேண்டுகோளை தன்னிடம் வைத்த பொழுது அகஸ்தியர் அகமகிழ்ந்து போனார்.
"தாயே! தேவர்களுக்கும், என்னுடைய மானிட சிஷ்யர்களுக்குமே இதுவரை யாகம் செய்து, அவர்களது தோஷத்தைப் போக்கிய நான், இன்று முதன் முறையாக நல்ல உள்ளம் கொண்டு, அன்றாடம் சிவபெருமானையே வணங்கிவரும் "சுகேது" என்னும் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவனுக்கும், அவனது குடும்பத்தினருக்கும் பஞ்சயாகம் ஒன்றைச் செய்ய விரும்புகிறேன். தாங்கள் சம்மதித்தால், தாங்கள் எங்கு செய்யச் சொல்கிறீர்களோ, அந்த இடத்திலே செய்ய விரும்புகிறேன்" என்றார் அகத்தியர்.
"என்ன அகத்தியரே! அரக்கனுக்கு தோஷம் போக யாகமா? அதுவும் உங்கள் கையாலா?, இதென்ன ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி செய்து கொண்டே போனால் எல்லா அரக்கர்களும் உங்கள் காலடியில் வந்து விழுந்து விடுவார்களே" என்றாள் உமையாள்.
"பகைவனுக்கே அருள்கின்ற தாங்களே இப்படிச் சொல்லலாமா? எல்லா அரக்கர்களையும் நல்லவர்களாக ஆக்கிக் காட்டுவோம்" என்றார்.
"இல்லை, அகத்தியா! கெடுதல்கள் நடக்க நடக்கத்தான் இறைபக்தி வளரும். உன்னால் எல்லா அரக்கர்களும் சொர்க்கம் அடைந்துவிட்டால், தேவலோகம் தாங்காது. கெடுதல் செய்பவர்கள் அப்படியே அவர்களுது தொழிலை தப்பாது செய்யட்டும், கெடுதல் இருந்தால்தானே நன்மைக்கும் நல்லவர்களுக்கும் மரியாதை கிடைக்கும். எனவே அரக்கர்களைக் கெடுத்துவிடாதே!" என்றாள் சூசகமாக.
​"தாயே! தாங்கள் சொல்வதை நானும் அறிந்தவன்தான். என்னிடம் புகலிடம் கேட்டு வந்த இந்த சுகேது, அவனது குடும்பத்தினர்க்கும் சாப விமோசனம் செய்ய தாங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லையே!"
"அகத்தியா! நீ எதை செய்தாலும் என்ன சொன்னாலும் அதற்கு ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். உன்னை எதிர்த்து பேச முடியுமா? இல்லை உனக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முடியுமா? இதில் எனக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கிறதா என்ன?" என்ற உமையவள் "இப்போது உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்" என்றாள்.
"தாங்கள் என்னுடைய யாகத்தைப் பார்ப்பதாக விரும்பினீர்கள் அல்லவா? அதனால் இந்த சுகேதுவுக்கு ஐந்துவகை யாகங்களும் செய்யப் போகிறேன். தாங்கள் இந்த யாகம் வெற்றி பெற முக்கண்ணன் துணையோடு உதவ வேண்டும்" என்றார் அகத்தியப் பெருமான்.
எப்படி?
"இந்த யாகம் முடியும் வரை அரக்கர்களால் எந்தவிதத் தொந்தரவும் வரக்கூடாது. தாங்கள் தான் முன்னின்று காத்தருள வேண்டும். அதே சமயம் முக்கண் உருவெடுத்தும் காட்சி தரவேண்டும். ஏனெனில் இந்த பஞ்சயாகம் செய்துவிட்டு, சத்ரு சம்ஹார யாகம் ஒன்றை முருகப்பெருமான் துணையோடு செய்யப் போகிறேன்" என்றார்.
"அதென்ன சத்ரு சம்ஹார யாகம்?"
"முதன் முறையாக நானே என் கையால் செய்யப் போகும் யாகம். போட்டி, பொறாமை, எதிர்ப்பு, கொடுமை இது போன்ற தொல்லைகளால் நாள்தோறும் அவதிப்படுபவர்கள், அந்த தொல்லையிலிருந்து அகல, முருகப் பெருமானே எனக்கிட்ட கட்டளை அது. முறையோடு செய்யப் போகிறேன்" என்றார்.
"மிக்க மகிழ்ச்சி அகத்தியரே!, இதை செய்யத் தகுந்து இடம் இனிமேல் "பஞ்சேஷ்டி" என்று அழைக்கப்படும். அங்குதான், சிவபெருமான் சுயம்புவாக காட்சி அளித்திருக்கிறார். காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள இந்த
அருமையான
இடம், பிற்காலத்தில் பெரும் புண்ணிய ஸ்தலமாக மாறவும் போகிறது" என்றாள் உமையவள், மிகவும் ஆனந்தமாக.
"தாயே, தாங்கள் என் பொருட்டு அருள்பாலிக்க முன் வந்தது மிகவும் மகிழ்ச்சி. தாங்கள் ஆனந்தமாக இதைச் சொன்னதும்என் யாகத்திற்கு துணை நிற்கப் போவதால், தங்களை இன்று முதல் "ஆனந்தவல்லித் தாயார்" என்று அழைக்க விரும்புகிறேன். தங்களுக்கு சம்மதம் தானே?"என்றார் அகத்தியர்.
"அப்படியே ஆகட்டும்" என்று ஆசிர்வதித்தாள், ஆனந்தவல்லித் தாயார்.
மிகச் சிறப்பாக அகஸ்தியர் நடத்திய அந்த யாகத்தை தடைசெய்ய வந்த அரக்கர்களை, ஆனந்தவல்லித் தாயார் தன் இடது காலை முன் வைத்து, தன் முக்கண்ணினால் சம்ஹாரம் செய்தாள். அகஸ்தியர் ஐந்து யாகத்தையும், கடைசியாக சத்ரு சம்ஹார யாகத்தையும் வெற்றிகரமாக முடித்தார். சுகேதுவும் அவனது குடும்பத்தினர்களும், சாப விமோசனம் பெற்றனர். உமையவளும் ஆனந்தவல்லித் தாயாராக அருள் பொங்க, இடது காலை முன்வைத்து மகிழ்ச்சியாக காட்சி தருகிறாள்.
இந்த கோவில் சென்னையிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் கல்கத்தா நெடுஞ்சாலையில், ரெட்ஹில்ஸ் பக்கத்தில் அமைந்திருக்கிறது.மிக பழமையான கோவில், ராஜகோபுரத்தில் வைணவப் பெருமையை காட்டும் தசாவதார காட்சிகள் அழகுப் பட ஒரு பக்கமும், அதற்கு நேர் எதிரில் சைவப் பெருமையைக் குறிக்கும் தெய்வக் காட்சிகளும் சரிக்கு சரிசமமாக வடிக்கப்பட்டிருக்கிறது.
நவக்ரகங்கள் இங்கு நேர் வரிசையாக இருப்பதையும், அதில், சனீச்வரனுக்கு காக்கை வாகனத்திற்குப் பதிலாக கருடவாகனம் இருப்பதையும் காணலாம். இது சற்று வித்யாசமாக இருக்கும்.
கோயிலுக்கு இடதுபுறம் மிகப் பெரிய குளம் இருக்கிறது. இது அகஸ்தியர் உமிழ்நீரால் தோன்றியது என புராணங்கள் கூறுகின்றது. ஆனால் அகத்தியர் ஜீவநாடியில் இது பற்றி கேட்ட பொழுது, யாகம் முடித்த கையை அலம்புவதற்கு அகத்தியர் கமண்டலத்திலிருந்து, கங்கை அவளே நீராக வந்து, அகத்தியர் கையை அலம்ப, உருவெடுத்ததாக வந்திருக்கிறது.
சத்ரு சம்ஹார யாகம் செய்ய, இதைவிட மிகச்சிறந்த கோவில் வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. இது சென்னை நகரவாசிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து சிவபக்தர்களுக்கும் ஒரு வரப்ரசாதமான புண்ணிய ஸ்தலம்.
"யாருக்கு விதி இருக்கிறதோ, யார் கர்மாவில் அதற்கு அனுமதி இருக்கிறதோ, அவர்கள இங்கு வரட்டும், வந்தெனது அருள் பெறட்டும்" என்றார் அகத்தியர்.

No comments:

Post a Comment