Tuesday 8 March 2022

உடலும் உள்ளமும் உயர்வாகட்டும்.

 உடலும் உள்ளமும் உயர்வாகட்டும்.

நம் வீடுகளில் சேரும் குப்பைகளைப் போலவே நமது மனங்களிலும் குப்பைகள் சேருகின்றன. நம் வீட்டுக் குப்பைகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். அதாவது ஈரப்பதம் உள்ள அழுகும் தன்மையுள்ள குப்பைகள்; இரண்டாவது உலர்ந்து சருகாகும் குப்பைகள்.
இதைப்போல நம் மனங்களில் சேரும் குப்பைகளையும் இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். வெறுப்பு, பொறாமை, தவறான எண்ணங்கள், உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணர்வுகள் போன்றவை அழுகும் தன்மையுள்ள குப்பைகள்; வருத்தம், வலி, காயப்பட்ட உணர்வு, எப்போதே செய்த தவறுகள் இவை உலர்ந்த குப்பைகள்.
கடந்த காலம் என்பது தூசி போல. எத்தனை நாட்கள் அவற்றை சேகரிப்பீர்கள்? தூசியை சேகரிப்பதால் என்ன நன்மை? மனதில் ஏற்படும் வலிகள், காலப்போக்கில் மறந்து அப்புறம் மரத்துப் போய்த் தழும்புகள் ஆகி விடுகின்றன. எத்தனை காலம் அந்தத் தழும்புகளை அலங்கரித்துப் பார்ப்பீர்கள்?
இவற்றிலிருந்து விடுபட்டு அல்லது உங்களை துண்டித்துக்கொண்டு நிகழ் காலத்திற்கு வர வேண்டும் – இரண்டு காரணங்களுக்காக.
முதல் காரணம் உங்கள் உடல் நலமாக இருக்க. இரண்டாவது காரணம் நம் மனநலம் நல்ல முறையில் இயங்க! மன நலம் சரியாக இருந்தாலே உடல் நலம் நன்றாக இருக்கும். 99 சதவிகித உடல் நலக்குறைவு மனதில் ஏற்படுவதுதான். உள்ளம் சுத்தமாக இருந்தால் உடலும் நோய்நொடி இல்லாமல் இருக்கும்.
நம் மனதில் ஏற்படும் பழி வாங்கும் எண்ணம், ஆறின பழைய புண்களை கீறிப் பார்ப்பது, மறந்து போன வலிகளை நினைவு படுத்திக்கொள்வது போன்ற செயல்கள் நமக்குக் கோபத்தையும், விரக்தியையும் உண்டாக்குகின்றன. இவையே நம் உடல் நலமின்மைக்குக் காரணங்கள். உடல் நலக்குறைவு உள்ளத்தில் இருந்து ஏற்படுவதால், உள்ளத்தை சுத்தம் செய்தால் உடலும் சுத்தமாகும். சுத்தமான உடம்பில் நோய் எங்கே இடம்?
வீட்டு வைத்தியத்தைப் பலரும் விரும்புவார்கள். ஏனெனில் பக்க விளைவுகள் இல்லாதது. உடல் சுத்தம் ஆக சோப் பயன்படுத்துகிறோம். உள்ளத்தின் சுத்தத்திற்கு சோப் உண்டா?
அதுதான் மன அழுக்குகளை அல்லது குப்பைகளை அகற்றுவது. இதை மிக சுலபமாக செய்ய ஒரு வீட்டு வைத்தியம் உண்டு. அது மன்னிப்பது.
சில சமூகங்களில் ஒவ்வொரு வருடமும் மன்னிப்புக் கடிதம் எழுதும் பழக்கம் உண்டு. உங்களுக்கு தீங்கு செய்தவர்களை, காயப்படுத்தியவர்களை, வலி உண்டாக்கியவர்களை மன்னித்துக் கடிதம் எழுதுவது. கடந்த காலத்திலிருந்து உங்களை முழுமையாக விடுவித்துக்கொண்டு நிகழ் காலத்தில் அமைதியும், மன ஒற்றுமையும் உருவாக எதிர்காலம் நல்ல விதமாக அமைய எழுதுவது இந்த மன்னிப்புக் கடிதம். இது நம் மனதை தூய்மை ஆக்கும்.
இன்னொரு முறை தீப ஒளியின் முன் மௌனமாக உட்கார்ந்து கொண்டு உங்களை அவமானப்படுத்தியவர்களை, தாழ்த்திப் பேசியவர்களை, உங்களைப் பற்றி அவதூறு சொன்னவர்களை, காயப்படுத்தியவர்களை மன்னித்துவிடுங்கள். இதையும் நீங்கள் மூன்று விதமாகச் செய்யலாம்:
முதலில் அவர்களுக்காக வாய் வார்த்தை மூலம் மன்னிப்பது:
இரண்டாவதாக அவர்களைப் பற்றி நல்லவிதமாகச் சிந்திப்பது;
மூன்றாவதாக அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள். அவர்களுக்கு ஒரு பரிசு அனுப்புங்கள்; அல்லது அவர்களை வெளியே அழைத்துப் போய் காபி வாங்கிக் கொடுங்கள். அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.
கடைசியாக உங்களை நீங்கள் மன்னியுங்கள். நம் மேலேயே நமக்கு பல சமயங்களில் கோபம் வருகிறது, இல்லையா? அது மட்டுமல்ல, நாம் எத்தனை பேரை அவமானப்படுத்தி இருக்கிறோம்; துன்புறுத்தி இருக்கிறோம். நாவினால் சுட்டிருக்கிறோம்; நாவினால் சுட்ட வடு ஆறுமா?
அதேபோல மரம், செடிகொடிகள், பறவைகள், மிருகங்கள் என்று எல்லாவற்றிடமும் மன்னிப்புக் கேளுங்கள்.
மன்னிப்பு நம் மனதில் இருக்கும் சுமையை களைகிறது. மனதில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் அகன்றால் தான் அங்கு புதிய எண்ணங்களுக்கு இடம் ஏற்படும். மன்னிப்பு என்பது தேவையில்லாத எப்போதோ நடந்த துயரங்களை துடைத்தெறியும் அழிப்பான். மன்னிப்பின் மூலம் பழைய கெட்ட நினைவுகள் அகன்று, புதிய பிரகாசமான எதிர்காலம் உருவாகும்.
பிறரை மன்னிப்பது அத்தனை சுலபமா? நல்ல கேள்வி! உடல்நலம் சரியில்லை என்றால் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை –விலை உயர்ந்ததாக இருந்தாலும் தயங்காமல் வாங்கி, கசப்பாக இருந்தாலும் சகித்துக் கொண்டு விழுங்குகிறோம் அல்லவா?
மன்னிப்பு என்னும் மருந்து முதலில் கசப்பாக இருந்தாலும், நம் மன நிலையில் மிகச்சிறந்த மாற்றத்தைக் கொடுக்கும் என்பதால் விலை மதிப்பில்லாத இதனை முயற்சி செய்யலாம், கொஞ்சம் கொஞ்சமாக.

No comments:

Post a Comment