Friday 15 October 2021

ஏமாற்றும் கலை.

ஏமாற்றும் கலை.
ஒரு அரசன் தன் நாட்டில் மிகப் பெரிய கோயில் ஒன்றைக் கட்டினான். அதன் கோபுரத்தை பொன்னால் வேய்ந்தான்.
அத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்குக் குடமுழுக்கு செய்ய நாள் குறிக்கப்பட்டது.
அரசனுக்கு ஒரு அவா (ஆசை) எழுந்தது, ‘இத்தனை பெரிய பொன்னால் வேய்ந்த கோயிலுக்கு வெறும் நீரை ஊற்றியா குடமுழுக்கு செய்வது?’
எனவே முழுக்க முழுக்க பாலை ஊற்றிக் குடமுழுக்குச் செய்யலாம் என்று எண்ணினான்.
உடனே நாடு முழுவதும் தண்டோரா போடச் செய்தான்:
“அரசர் கட்டியுள்ள பெருங்கோயிலுக்குக் குடமுழுக்கு செய்வதற்கு நிறைய பால் தேவை, நாட்டு மக்கள் அனைவரும் குடும்பத்திற்கு ஒரு செம்பு பால் கொண்டு வந்து தர வேண்டும்… டும் டும் டும்…”
மக்கள் பாலைக் கொண்டு வந்து கொட்டுவதற்காக அரண்மனை வாயில்முன் இரண்டு பெரிய ஆளுயர குண்டாக்கள் வைக்கப்பட்டன.
அவற்றைக் காவல் காக்க வீரர்களும், பால் கொடுப்போரைக் கணக்கெடுக்க அரசு அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர்.
குண்டாக்கள் உயரமாக இருந்ததால் மக்கள் அவற்றுள் பாலை ஊற்ற வாகாய் இரண்டு ஏணிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
மக்களும் அரசனது ஆணையை ஏற்று குடும்பத்திற்கு ஒருவராக வந்து ஒரு சொம்பு பாலைக் குண்டாவினுள் ஊற்றிச் சென்றனர்.
சோமு என்ற ஒருவன் சிந்தித்தான், ‘அனைவரும் பாலைக் கொட்டுகின்றனர், நான் சொம்பில் நீரைக் கொண்டு போய்க் கொட்டினால் என்ன? குண்டா நிறைய பாலில் ஒரு சொம்பு நீர் கலந்தால் தெரிந்துவிடுமா என்ன? குண்டாவோ உயரமாக இருக்கிறது, காவல் புரியும் வீரர்கள் தரையில்தான் நிற்கின்றனர், நான் ஊற்றுகிறேன் என்று ஒலியை வைத்துத் தெரிந்துகொள்வார்களே அன்றி, பாலை ஊற்றுகின்றேனா நீரை ஊற்றுகின்றேனா என்று எப்படித் தெரியும்…’
இவ்வாறு எண்ணி அவன் ஒரு சொம்பில் நீரைக் கொண்டு சென்று ஊற்றிவிட்டு வந்தான்.
குடமுழுக்கிற்காகக் குறித்த நாளன்று வேள்வி முதலிய சடங்குகளையெல்லாம் முடித்துக்கொண்டு கோபுரங்களில் பொழிய குண்டாக்களில் இருக்கும் பாலைக் கொண்டு வரும்படி அரசன் ஆணையிட்டான்.
வீரர்கள் கொண்டு வந்த குண்டாவிற்குள் ஒரு குடத்தைவிட்டு மொண்ட போது அதில் கலப்படமில்லாத தூய…
நீர் இருந்தது!
ஆம், இரண்டு குண்டாக்களிலும் முழுக்க முழுக்க நீர்தான் இருந்தது!
நாட்டு மக்கள் அனைவரும் சோமுவைப் போலவே எண்ணிவிட்டிருந்தனர்.
’அனைவரும் பாலை ஊற்றப் போகின்றனர், நான் ஒருவன்/ஒருத்தி நீரை ஊற்றினால் என்ன ஆகிவிடப் போகிறது’ என்று அனைவரும் நீரையே ஊற்றியிருந்தனர்!
நாம் எப்படியோ.. நமது சமூகமும் அப்படியே
தனிமனித ஒழுக்கமே சமூகத்தின் ஒழுக்கம்.

No comments:

Post a Comment