Wednesday 27 October 2021

கூடல் அழகனின் ஆடல் கலைகள் திருவிளையாடல் 60

 கூடல் அழகனின் ஆடல் கலைகள்

திருவிளையாடல்.60
60. பரியை நரி ஆக்கியது
சிவனை நினைத்த வாதவூரர்
பாண்டியன் கொடுத்த
பல்வகைப் பொருளுடன் ,
தன்மனை சேர்ந்தார்
மாணிக்க வாசகர்.
மற்றவர் பேசிடக்
கோபம் கொண்டார்
தவவழி இருந்து
சிவனைப் பணிந்தார்
நரியாய் மாறிய குதிரைகள்
பிற்பகல் முடிந்து
மாலை வந்தது.
இரவு கடந்து
நள்ளிர வானதும்
குதிரைகள் எல்லாம்
நரியாய் மாறின!
ஊளை யிட்டு
தப்பி யோடின.
ஊளையிட்டு துயரைவிளைத்த நரிகள்
உண்மையில் நின்ற
குதிரைகள் எல்லாம்
கடித்துக் குதறி
ரத்தம் குடித்தன.
நரிகள் எல்லாம்
குதிரையின் குடலைப்
பிடுங்கித் தின்றதைக்
காவலர் பார்த்தனர் .
சந்து பொந்துகள்
புகுந்தவை எல்லாம்
காவலர் விரட்ட
வெளியே ஓடின.
நொண்டி நோய்நொடி
குருட்டுக் கிழநரி
குளங்கள் தெருக்கள்
ஆலயம் திரிந்தன.
வீடுகள் புகுந்து
துயரை விளைத்து,
புறா கிளி கோழி
நாசம் செய்தன.
கோட்டை வாசல்
திறக்கப் பட்டதும்,
நரிகள் எல்லாம்
காட்டில் மறைந்தன.
கோபம் கொண்ட
பாண்டிய மன்னன்
விடிந்ததும் காவலர்
சபைக்குச் சென்றனர்.
குதிரைகள் எல்லாம்
நரியாய் மாறி,
இருந்த குதிரையும்
நாசம் செய்ததை ,
மன்னவன் கேட்டுக்
கோபம் கொண்டான்.
வாதவூரரிடம் பரிகள் நரியானது கூறிய பாண்டியன்
வாதவூரர் ஏதும் அறியா
இறைவன் நினைவில்,
தனை மறந்தங்கே
அவையில் நின்றார்
சினத்துடன் நோக்கிய
பாண்டியன் பார்த்து,
"குற்றம் என்ன? "
என்றே கேட்டார்.
"பரிகள் நரியாய்
மாறிய தன்றி
ஊளை யிட்டு
நாசம் செய்ததை.
அறியாயோ? "என
அவர்முகம் பார்த்தான்.
கோபத் துடனே
காவலர் அழைத்தான்.
வாதவூரரைத் தண்டிக்கச் சொல்லுதல்
"இழுத்துச் சென்று
எடுத்த பொருள்களை த்
தண்டனை கொடுத்துத்
திரும்பப் பெறுங்கள்!"
என்றே சொல்லிட
இழுத்துச் சென்றனர் .
உச்சி வெய்யிலில்
நிற்க வைத்தனர்.
வெயிலில் நிற்கவைத்துக் கல்லையேற்றுதல்
சூரியன் பார்க்கக்
கல்லை நெற்றியில்
ஏற்றி வைத்தபின்
கைகள் இரண்டிலும்,
கல்லை வைத்தனர் .
துன்பம் தாங்கா
வாத வூரார்
கீழே வீழ்ந்தார்.
வைகையில் வெள்ளம் வரச்செய்து இறைவன் காத்தல்
சிவனைப் பணிந்தார்
சோர்ந்து விழுந்தார் .
வறட்சி ஏற்பட
வானம் பார்த்தார்,
இறைவன் அவர்நிலை
கண்டு இறங்கினான்.
வைகையில் வெள்ளம்
வந்திடச் செய்தான்.
வைகை ஆறு
பெருக்கெடுத் தோட,
கரைகளை உடைத்து
மரங்களைப் பறித்து,
ஊருக்குள் வந்து
தெருக்களைச் சூழ்ந்தது .
வீடுகள் குடிசைகள்
புரட்டிச் சென்றது.
புலம்பித் தவித்த மக்கள்
மன்னவன் செங்கோல்
தவறி விட்டானோ?
தென்னவன் சிவனின்
திருவிளை யாடலோ?
என்றே மக்கள்
புலம்பித் தவித்தனர்.
உடைமைகள் காக்க
ஓடினர் எங்கும்.
விடுதலைபெற்ற வாதவூரர்
தண்டனை கொடுத்திட
வந்த காவலர்
வாத வூரார்
விட்டுச் சென்றனர்.
விடுதலை பெற்ற
வாத வூரர் ,
கோவில் சென்று
சிவனைப் பணிந்தார்.
--தொடரும்....
இலக்கு பழனியப்பன் பி. அழகாபுரி

No comments:

Post a Comment