Wednesday 13 October 2021

தமிழகத்தின் இரண்டாவது பணக்காரர் பள்ளத்தூர்காரர்!

 தமிழகத்தின் இரண்டாவது பணக்காரர் பள்ளத்தூர்காரர்!

ஃபோர்ப்ஸ்(Forbes) இதழ், 2021ஆம் ஆண்டுக்கான 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதலிடத்திலுள்ளார். இந்த 100 பணக்காரர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர்கள் இடம்பிடித்துள்ளனர். அதில் முதல் இடத்தை சிவ நாடாரும் இரண்டாவது இடத்தை முருகப்பா குழுமமும் பிடித்துள்ளனர்.
செட்டிநாட்டின், பள்ளத்தூரை சேர்ந்த அ.மு.முருகப்ப செட்டியாரால் கி.பி.1900ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "முருகப்பா குழுமம்", கடந்த 121ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது, இன்று இந்திய பணக்காரார்கள் பட்டியலில் 41வது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. சொத்து மதிப்பு 4.7 பில்லியன் அமெரிக்க டாலர் .
தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டங்கள், தண்ணீர், சர்க்கரை, நெட்லான் கொசுவலை, உரம், சைக்கிள், ஸ்டீல் குழாய்கள், கார் பாகங்கள், கியர்கள், அப்ரேஸிவ்ஸ் என்னும் தேய்ப்புப் பொருட்கள், நிதி ஆலோசனை, இன்ஷூரன்ஸ் போன்ற 28 வகை வகையான தொழில்கள். பாரி, டி.ஐ. சைக்கிள், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட்ஸ், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ், கார்பொரண்டம், சாந்தி கியர்ஸ் போன்ற பிரபல நிறுவனங்கள். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், குஜராத், உத்தராகண்ட் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சீனா, ரஷ்யா, தெற்கு ஆப்பிரிக்கா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமீரகம் போன்ற நாடுகளிலும் தொழிற்சாலைகள். 234 நகரங்களில் 55,000-க்கும் அதிகமான ஊழியர்கள்.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு கல்வி நிறுவனமும் பேங்க் லோம்பார்ட் ஓடியர் அண்ட் கோ என்னும் ஸ்விஸ் வங்கியும் இணைந்து, ஒவ்வொரு வருடமும் உலகின் மிகச் சிறந்த குடும்ப பிசினஸைத் தேர்ந்தெடுத்து, ஐஎம்டி லோம்பார்ட் ஓடியர் சர்வதேச குடும்ப பிஸினஸ் விருது என்னும் மகுடம் சூட்டுகிறார்கள். அதில் கடந்த 2001ஆம் ஆண்டில், உலகின் நம்பர் 1 குடும்ப பிசினஸாக "முருகப்பா குழுமம்" பரிசு பெற்றது.
இவை அனைத்தையும் தாண்டி இன்னும் மகத்தான பெருமைகள் சில உண்டு; அகமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் பாலின் கார்க் அவர்களின் கணிப்புப்படி, குடும்ப பிசினஸ்களின் ஆயுட்காலம் 60 வருடங்கள்தாம். இதைத்தான் “பிசினஸை முதல் தலைமுறை வளர்க்கும்; இரண்டாம் தலைமுறை அனுபவிக்கும்; மூன்றாம் தலைமுறை அழிக்கும்” என்று சொல்வார்கள். இந்த விதிகளை உடைத்து, ஐந்து தலைமுறைகளாக, ஒரே குடும்பமாக, ஒற்றுமையாக, லாபகரமாக பிசினஸ் குழுமத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்களே, இது, உலக மேனேஜ்மென்ட் மேதைகள் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சிலாகிக்கும் சமாச்சாரம்.
- செட்டிநாட்டு மக்கள் முகநூல் பக்கம்

No comments:

Post a Comment