Tuesday 17 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சிறந்த அமைச்சர் பாராட்டுக்குரிய செயல்பாடு..
கொரோனோ வைரஸ் பாதிப்புகள் மீதான நடவடிக்கைகள் பற்றி கேரள சர்வதேச ஊடகவியலாளர் கூறுகிறார்,"ஐரோப்பா அமெரிக்கா நாடுகளுடன் ஒப்பிடும்போதுகூட இந்தியாவில் , குறிப்பாக தமிழகம் கேரளம் கர்நாடகம் ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாகவே உள்ளன.
அதற்கான காரணங்கள் பல. ஒன்று, இங்குள்ள அரசு மருத்துவசேவை மிகப்பெரிய அமைப்பு. தனியார் மருத்துவசேவையும் மிகப்பெரியது. மருத்துவர்கள், துணைமருத்துவ ஊழியர்கள் மாபெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அனேகமாக இந்த அளவுக்கு மருத்துவ ஊழியர்கள் உலகின் எப்பகுதியிலும் இல்லை. அவர்களும் தொடர்ச்சியாக நிறைய நோயாளிகளை சந்தித்த அனுபவம் கொண்டவர்கள். அதற்கெல்லாம் அப்பால் ஓர் அர்ப்பணிப்பு இங்கே உள்ளது – கேரளத்தின் வெவ்வேறு வைரஸ் தொற்றுக்களின் போது ஒரு ஊழியர் கூட பொறுப்பை விட்டு அஞ்சி ஓடவில்லை. ஐரோப்பாவின் மிகமுக்கியமான பிரச்சினையே மருத்துவ ஊழியர்கள் அஞ்சி நின்றுவிடுவதுதான்.
இறுதியாக ஒன்று, ஐரோப்பா போன்ற நாடுகளைப்போல அன்றி இங்கே மருத்துவத்துறை சட்டச்சிக்கல்களுக்குள் பின்னிக் கிடக்கவில்லை. நோயாளிகளின் உரிமை , காப்பீட்டு நிறுவனன்களின் வணிகம் என்னும் இரு அடிப்படைகளில் ஐரோப்பிய, அமெரிக்க மருத்துவத்துறை சிக்கி செயலிழந்திருக்கிறது. எந்த முடிவையும் மருத்துவர்கள் எளிதாக எடுத்துவிடமுடியாது. ஒவ்வொன்றும் வருங்காலங்களில் நீதிமன்றங்களில் விளக்கப்பட வேண்டும் என்னும் அச்சுறுத்தல் உள்ளது. ஆகவே தொடர்ச்சியான தாமதமும் தயக்கமும் பெரும் சிக்கலாக அங்குள்ள மருத்துவசூழலை ஆட்கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மருத்துவர் மீதான நம்பிக்கை ஆழமாக நிலைகொள்கிறது. மருத்துவம் ஓர் எல்லையில் வணிகம் என ஆனால்கூட இன்னொரு எல்லையில் அது இங்கே சேவையாகவே நிலைகொள்கிறது. ஆகவே உண்மையில் ஐரோப்பிய நோயாளிகளேகூட சென்னையிலோ பெங்களூரிலோ ஹைதராபாதிலோ திருவனந்தபுரத்திலோ கொரோனோ வைரஸ்க்கு மேலும் சிறந்த சிகிழ்ச்சையை விரைவாகப் பெறமுடியும்– இதுவே உண்மை நிலை.
நோயாளிகளை அடையாளம்காண்பது, தனிமைப்படுத்துவது, சிகிழ்ச்சை செய்வது ஆகியவற்றில் மிகத்தரமான பொறுப்பான சேவையை இந்திய மருத்துவமனைகள் வழங்கிவருகின்றன. அரசு மருத்துவக்கல்லூரிகளின் சேவையை, அவற்றின் நிதிப்பற்றாக்குறை நெரிசல் ஆகியவற்றை கருத்தில்கொள்ளாமல் நோக்கினால்கூட, ஒருகுறையும் சொல்லமுடியாத நிலையே உள்ளது.
ஆனால்,இங்கே அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அரசு செயலற்றிருக்கிறது என்று எதிர்ப்பாளர்களும் ஊடகங்களும் கூச்சலிடுவார்கள். அரசு மக்களை சாகவிடுகிறது என்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அரசே மக்களை கொல்கிறது என்ற நிலைவரை செல்வார்கள். எந்த நடைமுறையையும் சென்று பார்க்கமாட்டார்கள். எந்த தரவுகளையும் காணமாட்டார்கள். எல்லாவற்றையும் திரிப்பார்கள். அவர்களின் சாதி, மத, அரசியல் நிலைபாடுகளை ஒட்டி அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை முன்னரே சொல்லிவிடமுடியும்.
அரசு ஒன்றும் செய்யவில்லை என்று கூச்சலிட்டுக்கொண்டே இருப்பார்கள் .காழ்ப்பையும் கசப்பையும் கொட்டுவார்கள். ஐயத்தையும் அச்சத்தையும் பெருக்குவார்கள். ஊடகங்கள் அவர்களுக்கே சாதகமானவையாக இருக்கும். ஏனென்றால் எதிர்மறையான செய்திகளுக்கே செய்தி மதிப்பு அதிகம். மக்கள் சாகிறார்கள், அரசு வேடிக்கை பார்க்கிறது என்று கூச்சலிட்டால் மக்கள் கொதிப்பார்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். அரசின் திட்டங்களையும் செயல்முறையையும் விளக்கினால் அது செய்தியே அல்ல, பிரச்சாரம் என்று தோன்றும்.
இந்தக் காழ்ப்புப் பிரச்சாரத்தைக் காணும் மக்கள் உண்மையை அறிய மருத்துவமனைகளுக்குச் செல்லப்போவதில்லை, என்ன நிகழ்கிறது என்று பார்க்கப்போவது இல்லை.
கேரளத்தின் செய்தி ஊடகங்களின் அவதூறு – திரிபுப் பிரச்சாரத்தை முறியடிக்கவே பிணராயி விஜயன் மிகையான அச்சத்தையும் கெடுபிடியையும் உருவாக்குகிறார்.
அவ்வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேர்மையான, சமநிலையான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்.
மருத்துவமனைகளை தயார்ப்படுத்துவதையே தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறார். எட்டுமுறை தமிழகத்தின் மருத்துவநடவடிக்கைகளை வந்து பார்த்தேன். திருப்திகரமான செயல்பாடு. நிபுணர்கள் சொல்வதை கேட்டுக்கொள்கிறார். சிறந்த அமைச்சர், பாராட்டுக்குரிய செயல்பாடு” என்று நமது சுகாதாரத்துறை அமைச்சரை பாராட்டியுள்ளார்.
அவருக்கு நமது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கூறுகிறார்,“இங்கே சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் அரசு செயலற்றுவிட்டது என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள். விரைவிலேயே விஜயபாஸ்கரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவார்கள்.
இந்த ஊடகவீணர்கள் நாடுவது செய்திப்பரபரப்பை. அதற்காக சில ஆயிரம்பேர் செத்துக்குவிந்தால் அது ஒரு லாட்டரி என நினைக்கிறார்கள். அதில் சன் டிவி, கலைஞர் டிவி, புதிய தலைமுறை முதல் மனுஷ்யபுத்திரனின் உயிர்மை வரை ஒரே நிலைபாடுதான். அரசு ஒன்றுமே செய்யவில்லை என்ற ஊளை மட்டுமே. அதற்கு எந்த ஆதாரமும் தரவும் தேவையில்லை. இறுதியில் சில ஆயிரம்பேர் சாகவேண்டும், அதைக்கொண்டு அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்கவேண்டும், அரசியலில் வெல்லவேண்டும், ஒரு செய்திக்கொண்டாட்டம் வழியாக தாங்களும் சற்றே சம்பாதிக்கவேண்டும்.
அடிப்படை பொறுப்பு இல்லை, எளிய மனிதாபிமானம்கூட இல்லை. எங்கும் எதிலும் தங்கள் ஒற்றை அரசியலை, அதிகார வேட்கையின் நாணமற்ற இளிப்பை அன்றி எதையுமே இவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை.இன்னும் சில மாதங்களில் தொலைக்காட்சிகளில் அமர்ந்து நஞ்சுகக்கும் இந்த கீழ்மகன்கள் மருத்துவ ஊழியர்களை இழிவுசெய்வார்கள், அவர்களின் சேவைகளை சிறுமைப்படுத்துவார்கள். நிரந்தரமான ஒரு கசப்பில் மக்களை வைத்திருப்பதே தங்களுக்கு உகந்தது என நினைப்பவர்கள். இவர்களிடமிருந்து நமக்கு இப்போதைக்கு விடுதலை இல்லை. உண்மையான கொடூரமான வைரஸ்கள் இவர்களே..என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment