Thursday 12 May 2022

இயல்பாக இயற்கையாக .

 இயல்பாக இயற்கையாக .

ஒருவன் வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருந்தான்.
நம்ம ஊரு தொடர்வண்டி எப்போது சரியான நேரத்துக்கு வந்தது.?அப்படிப் படுத்திருக்கும் போது எங்கோ ஒலிபெருக்கியில் யாரோ பேசுவது இவன் காதில் கேட்டது.
தொடர் வண்டிக்காகக் காத்திருக்கும் நேரத்துக்கு அந்த சொற்பொழிவைக் கேட்டு வரலாம். அப்போது வண்டி வர நேரம் சரியாக இருக்கும் என்ற முடிவெடுத்து அந்தப் பேச்சைக் கேட்கச் சென்றான்.
சொற்பொழிவைக் கேட்டவன் தன் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டான். அவன் மனதில் நினைத்துக் கொண்டான்.
"பொருளே இல்லாம இவ்வளவு நேரம் பேசும் இந்தச் சொற்பொழிவாளன் உயிரோடு இருக்கிறான்.
ஒன்றுமே புரியாவிட்டாலும் கை தட்டிப் பாராட்டும் இத்தனை மக்களும் உயிரோடு இருக்கிறார்கள்".
நான் மட்டும் ஏன் வாழக் கூடாது என்று தன்னம்பிக்கையோடு வீடு நோக்கி நடந்து செல்கிறான்.
வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் துன்பம், துயரம் இவை போன்றவைகள் வரவே செய்யும்.
இது இயற்கை. இயற்கையில் மேடு பள்ளங்கள் இருப்பது போல, மனிதனுக்கும் இன்ப, துன்பங்கள் இரண்டுமே மாறி மாறி வருவது இயற்கை.
இவற்றிலிருந்து எப்படி புத்திசாலித்தனமாக, சமயோசிதத்துடன், துக்கத்தை உள் வாங்காமல், இயற்கையாக, இயல்பாக நமது மனத்தை மாற்றி வெளியே வர வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
மேலும் அந்தத் துன்பத்தையே ஒரு அனுபவப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் வெற்றிப் பெற என்ன செய்ய வேண்டும்
என்று சிந்திக்க வேண்டும்.
நல்ல செயல்களைச் செய்து, வெற்றிப் பாதையை நோக்கிச் சென்று வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment