Wednesday 11 May 2022

கேள்வியும் சிந்தனையும்.

 கேள்வியும் சிந்தனையும்.

ஒரு ஜென் துறவியும், அவருடைய சீடர்களும் ஓரிடத்திலிருந்து வேறிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து சென்ற வழியில் ஒரு முயல் மிக வேகமாகக் கடந்து சென்றது. அந்த முயலைத் துரத்தியபடி ஒரு நரி ஓடியது.
நடந்த துறவி நின்றார். சீடர்களைத் திரும்பிப் பார்த்தார். ‘சீடர்களே! முயலும், அதைப் பின் தொடர்ந்து நரியும் ஓடுவதைப் பார்த்தீர்களா? முயலை நரி பிடித்து விடுமா?என்று கேட்டார்.
குருவே! முயல் வேகமாக ஓடும் என்பது உண்மை தான். ஆனால், நரி முயலை விட வேகமாக ஓடும் ஆற்றலைப் பெற்றது. அதனால் நிச்சயம் இந்த நரி அந்த முயலைப் பிடித்துவிடும். இதில் கேள்விக்கு இடமேது?’ என்று சிரித்துச் சீடர்கள் தங்கள் அறிவின் ஆழத்தை வெளிப்படுத்தினர்..
சீடர்கள் சிரித்ததைப் பார்த்துக் குருவும் வாய்விட்டுச் சிரித்தார். ‘கேள்விக்கு இதில் இடமிருப்பதை உணர்ந்ததனால் தான் நான் உங்களுக்குக் குருவாக இருக்கிறேன். சிந்திக்க இதில் இடமில்லை என்று நினைப்பதனால் தான் இன்னமும் நீங்கள் சீடர்களாகவே இருக்கிறீர்கள்’ என்றார் குரு.
கேள்விக்கும், சிந்தனைக்கும் இதில் எங்கே இடம்?’ என்று சீடர்கள் மீண்டும் ஒரே குரலில் கேட்டனர்.
‘கேள்விகளால் நடத்தும் வேள்விகளால் தான் உலகத்தின் உண்மைகள் ஒவ்வொன்றும் புலப்படும். என் கேள்விகளுக்கு முதலில் நீங்கள் பதில் சொல்ல முயலுங்கள் என்ற துறவி ‘முயலும், நரியும் ஏன் ஓடுகின்றன? என்று கேள்விக் கணையைத் தொடுத்தார்..
நரியிடமிருந்து தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயல் ஓடுகிறது. அந்த முயலைக் கவ்விப் பிடித்து உணவாக்கிக் கொள்ள நரி ஓடுகிறது என்று சீடர்கள் தெளிவாகப் பதில் தந்தனர்.
உயிர் முக்கியமா? உணவு முக்கியமா? என்று அடுத்த கணையை வீசினார் குரு.
‘இது என்ன கேள்வி? இன்றில்லாமற் போனால் உணவை நாளை நாம் பெறக்கூடும். ஆனால், இருக்கும் உயிரை இழந்து விட்டால் திரும்பவும் அதை நாம் பெற முடியாதே! இழந்தால் பெறக்கூடிய உணவை விடவும், திரும்பப் பெறமுடியாத உயிர் தான் உலகத்தின் உயிரினங்கள் அனைத்துக்கும் முக்கியம்’ என்று ஒருவன் சொல்ல, மற்றவர் அனைவரும் அதை அழுத்தமாக அமோதித்தனர்..
சீடர்களே! இப்போது சிந்தியுங்கள். இழந்தால் பெறமுடியாத உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உந்துதலுடன் முயல் ஓடுகிறது. பசிக்கு இரை தேடும் உந்துதலுடன் நரி ஓடுகிறது. உணவின் உந்துதலை விட உயிரின் உந்துதல் பெரிதல்லவா! அதனால் அதிகபட்ச உந்துதலுடன் ஓடிக் கொண்டிருக்கும் முயலை நரியால் பிடிக்க முடியாது’என்றார் குரு..
அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே முயல் ஒரு புதருக்குள் மறைந்து விட்டது. நரி எங்கே முயல் மறைந்தது என்றறியாமல் ஏமாற்றத்துடன் அங்குமிங்கும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தது.
உந்துதலின் அளவு தான் ஒவ்வொரு மனிதனின் உயரத்தின் அடித்தளம். இதை உணர்த்துவது தான் இந்த ஜென் கதையின் நோக்கம்.

No comments:

Post a Comment