Monday 30 May 2022

நல்ல சிந்தனைகள்.

 நல்ல சிந்தனைகள்.

எண்ணங்கள் மனிதர்களை
ஆக்கிரமிக்கும் வல்லமை பெற்றவை. எந்த அளவுக்கு ஒருவருக்கு உயர்வான எண்ணங்கள் வாய்க்கிறதோ
அந்த அளவுக்கு அவரிடமுள்ள
தாழ்வான எண்ணங்கள் அகலுகின்றன.
எண்ணங்களைப் பற்றிய மதிப்பீடு அதனை மதிப்பிடும் நபர்களைப் பொறுத்து மாறுபடக்கூடியது.
எது உயர்ந்த எண்ணம், எது தாழ்ந்த எண்ணம் என்ற புரிதல் ஒவ்வொருவருக்கும் வாய்க்க வேண்டியது அவசியம்.
ஒருசிலர் தாம் எண்ணியிருப்பதே சிறந்தது என்று வாழும் காலம் வரை எண்ணிக் கொண்டிருப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்கு தமது
எண்ணங்களுக்கு மாற்றாக மற்றொன்று இருப்பதே தெரிவதில்லை.
அதே நேரம் சிலர், உயர்வான எண்ணம் எது என்று தெரிந்தபிறகும், தாம் எண்ணிக்கொண்டிருப்பதே சரி என்று வாதிடுவர். அதற்குக் காரணம் அவர்கள் பாரபட்ச மனதுடையவர்களாக இருப்பார்கள்.
ஒரு இடத்தை வெளிச்சம் அடையும் வரை அந்த இடம் இருட்டாகவே இருக்கும், அது போன்றதே மனிதர்கள் மனத்தில் உயர்வான எண்ணங்கள் நிறையும் வரை அது தாழ்வான எண்ணங்களின் கூடாரமாகவே இருக்கும். உயர்வான எண்ணங்களை அளவிடமுடியாது என்றாலும் ஒருவர் பிறரை நடத்தும் பாங்கு இதன் பாற்பட்டே அமையும்.
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறான புதிது புதிதான சேர்க்கை, தனிநபர் மனத்திலும் நல்ல சிந்தனைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கும். இவ்வாறான நல்ல சிந்தனைகளின் வரவு உயர்வான எண்ணங்களையும் பிறப்பித்துக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு மனிதர்கள் தாங்கள் நடத்தப்படும் விதங்களிலிருந்தும் தமது எண்ணங்களுக்கான ஊற்றை அடைகின்றனர்.
நல்ல சிந்தனைகளும், எண்ணங்களும் அவ்வளவு எளிதில் கைகூடாது. ஆனால், அதற்கான வழிமுறைகளை அறிந்து அதனை உருவாக்க எந்த அளவுக்கு தனிநபர்களும், நிறுவனங்களும் முயல்கிறனரோ அந்த அளவுக்கே குடும்பங்களின் அல்லது நிறுவனங்களின் வெற்றி அமையும்.

No comments:

Post a Comment