Tuesday 24 May 2022

ஆழமாக நம்புங்கள்.

 ஆழமாக நம்புங்கள்.

உங்கள் இலக்குகளின் மீது முழுதாக நம்பிக்கை வையுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் உற்சாக வார்த்தைகளுக்கு மேல் உங்களுக்குள் இருக்கும் ஆழமான நம்பிக்கைதான் அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்த்திச் செல்லும்...
அதே நேரத்தில் இலக்கு குறித்த தெளிவும் வேண்டும். இலக்குகள் இல்லாத யாரும் சாதனையாளர்களாக மாறிய வரலாறு இல்லை என்பதை அழுத்திச் சொல்லலாம்.
இலக்குகளைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் அதேநேரம், அதை அடைவதற்கான முயற்சிகளைச் சோர்வில்லாமல் முன்னெடுக்க வேண்டும்.
இரண்டு பேர் ஒரு பெரிய மலைமுகட்டின் முன் நின்று கொண்டு இருக்கிறார்கள். இருவரில் முதலில் மலையின் உச்சியைத் தொடுபவருக்கு மிகப் பெரிய தொகை பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
இரண்டு பேருக்குமே மலையேற்றம் குறித்து அனுபவம் துளியும் கிடையாது. ஆனால்!, கண்முன்னே பணமுடிப்பு மின்ன, உற்சாகம் பொங்கி வழிகிறது.
இருவரில் ஒருவர் வேகவேகமாக ஓடி மலையில் ஏறத் தொடங்குகிறார். இன்னொருவரோ அமைதியாக அவர் மலை ஏறுவதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
சுற்றியிருக்கும் கூட்டம் ஆர்ப்பரித்துக் கத்துகிறது. அதுவோ பாறைகள் நிறைந்த செங்குத்தான மலை முகடு. சில அடிகள் வேகமாக முன்னேறுகிறார்.
தடுமாறிக் கீழே விழ, சுற்றியிருப்பவர்கள் அவரை ஆசுவாசப்படுத்துகிறார்கள். போட்டியில் கலந்து கொண்ட இன்னொருவரைக் காணவில்லை.
அவரோ!, நிதானமாக ஒரு கயிறும், சில ஆணிகளும் எடுத்துக் கொண்டு வந்து பாதுகாப்பாக மலையை ஏற ஆரம்பிக்கிறார்.
பிறகென்ன! வெற்றி அவருக்குத்தான். இருவருக்கும் சமமான ஒரே களம்தான். கயிறுகளையோ பாதுகாப்பு உபகரணங்களையோ பயன்படுத்தக் கூடாது என யாரும் கூறவில்லை.
ஆனால்!, அவ்வளவு பெரிய மலையை ஏறுவதற்கு அவை மட்டும் போதுமா என்ன.முதலில் அந்த மலையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.
அதோடு பாதுகாப்பாக உச்சியை அடையத் தேவையான முன்னேற்பாடுகளைக் கவனிக்கவும் வேண்டும். இதைத்தான் செய்தார் அந்த இரண்டாம் நபர்.
மலை ஏறும் பந்தயத்தைப் போலத்தான் நம் வாழ்வும் அதில் இணைந்திருக்கும். செய்வதைத் துணிந்து செய்யுங்கள். நீங்கள் செய்யும் செயலில் முழுமையான நம்பிக்கை உங்களுக்கே இல்லாத பொழுது அது எந்த தருணத்திலும் வெற்றியைத் தந்து விடாது.
வெற்றிதான் இலக்கு. அதை நோக்கித்தான் இந்த ஒட்டு மொத்த பயணமும். எந்த வேலையைத் தொடங்கும் போதும் வெற்றி பெறுவதற்காகத் தான் செய்கிறோம் என்பதை ஆழமாக நம்புங்கள்.
சிறுசிறு தோல்விகளில் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள முடியுமா எனப் பாருங்கள். தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடத்தை மீறி யாருடைய வெற்றிக் கதையும் அந்த அனுபவத்தைத் தந்துவிடாது.

No comments:

Post a Comment