Monday 25 April 2022

மனம் என்னும் மகா சக்தி.

 மனம் என்னும் மகா சக்தி.

மனத்தை ஒரு வேற்றுக் கிரகவாசி போல் சற்றுத் தொலைவிலிருந்து கவனித்தால் போதும். மனமாற்றத்துக்கான முதல் விதை இதுதான். மனம் ஒரு சிறந்த பணியாள்; மோசமான முதலாளி. ஆனால் அதை எப்படி நடத்துவது என்று தெரியாமல்தான் மோசமாகக் கையாண்டு வருகிறோம்.
மனத்தை நம்பலாமா
மனம் கண்ணியமானது என்று நம்பும்போது, அது தன் கேவலமான குணத்தைக் காண்பிக்கும். உறுதியானது என்று தீர்மானமாக இருக்கும்போது, அது தன் பலவீனத்தைத் தெரிவிக்கும். தெளிவானது என்று ஒரு முடிவுக்கு வருகையில், குழப்பியடிக்கும். ‘அடச்சே’ என்று அலட்சியம் காண்பிக்கையில் கூர்மையான தர்க்கத்தால், ‘அடடே’ என்று பிரம்மிக்க வைக்கும்.
நம் மனத்தைப் பற்றியே நமக்குத் தெரியாததால்தான் ‘எனக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை!’ என்று சுய வாக்குமூலம் கொடுக்கிறோம். இப்படி நம் மனத்தைப் பற்றியே சரியாக கணிக்க முடியாத நிலையில், எதிராளியைப் பற்றி எல்லாம் தெரிந்ததுபோல் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். நம்மை நினைத்தால் நமக்கே சிரிப்பு வருவது இதனால்தான்.
மனம் தரும் தகவல்கள், பல நேரம் பிழையானவை. நம் நினைவுத்திறனும் கற்பனை ஆற்றலும் பல நேரம் எளிதில் நீரோடு நீராக கலக்கக்கூடியவை. நடந்தவையும், நாம் கண்டவையும், நாம் நடந்ததாக நினைப்பவையும் யாவும் ஒன்றல்ல. இருந்தாலும் நம் மனம் தரும் தற்காலிகத் தகவல்களை நம்பி, வாழ்க்கையின் பெரிய முடிவுகளை எடுக்கிறோம். இதில் பல நேரம் நம் புலனறிவும் சேர்ந்து சதிசெய்யும்.
மனத்தின் தகவல் பிழை
‘என்னை பாத்துட்டுப் பார்க்காத மாதிரி போயிட்டா. அவ்வளவு திமிரான்னு நானும் அவங்க வீட்டுக்குப் போறதையே நிறுத்திட்டேன். திடீர் பணக்காரியான அவளுக்கே அவ்வளவு இருந்தா… பரம்பரைப் பணக்காரி எனக்கு எவ்வளவு இருக்கும்? அதனால அந்தச் சம்பந்தம் வேண்டாம்பா!’பார்வை என்பது புலன் அறிவு. எதிராளிக்குச் சற்று மாறுகண்ணாக இருந்தால்? அல்லது பதற்றத்தில் ஓடும் பெண்ணின் நெருக்கடியோ அல்லது அது சார்ந்த உணர்வோ நமக்குப் புரியாமல் இருந்தால்? வேறு ஒரு பிரச்சினைக்காக உங்களுடன் நடந்துவரும் நபரைத் தவிர்க்க, உங்களைப் பார்க்காமல் போயிருந்தால்? இப்படி நிறையக் காரணங்கள் இருக்கலாம்.
அல்லது இதற்குமுன் நீங்கள் அவசரத்தில் அவரைப் பார்க்காமல் போனதைத் தவறாக நினைத்து, அதை மனத்தில் வைத்துக்கூடத் தவிர்த்திருக்கலாம். ஒரு செயலைப் பார்க்கும் மனம், தன் தற்காலிக மனநிலைக்கு ஏற்ப பொருள் கொடுத்துக்கொள்ளும். அதனால் மனம் தரும் தகவல்களைத் தள்ளி நின்று கேள்வி கேட்டு ஆராய்வது நல்லது.
பலமும் பலவீனமும்
என் நோக்கம் மனத்தைத் தரக்குறைவாக மதிப்பிடுவது அல்ல. மனித மனத்தின் நுட்பமான அறிவுதான், இந்த உலகம் இவ்வளவு முன்னேற வழிவகுத்துள்ளது. ஒவ்வொரு சாதனையும் மனத்தின் வெற்றிதான்.
அதேநேரம் இங்கு நிகழும் ஒவ்வொரு அவலத்துக்கும் காரணம், மனித மனம்தான். இத்தனை கொலைகள், வல்லுறவுகள், வன்முறை நிகழ்வுகள், நோய்கள், கிளர்ச்சிகளுக்குக் காரணமும் மனித மனம்தான். உலகின் அத்தனை சாத்தியக்கூறுகளுக்கும் காரணம் மனித மனம்தான். அதனால் அதன் முழு வீரியத்தை அறிவதுபோல், அதன் அத்தனை வக்கிர குணத்தையும் பலவீனங்களையும் அறிவது முக்கியம். மனத்தை உள்நோக்கிப் பார்க்கத் தொடங்கும்போது மனமும் வாழ்க்கையும் சீரடையத் தொடங்கும். இது பேருண்மை.
தியானம் வெளியில் இல்லை
மனத்தை உள்நோக்கிப் பார்க்கச் சிறந்த வழி தியானம். தியானம் என்பது ஒரு மத நம்பிக்கை சார்ந்த வழிமுறை அல்ல. அதற்கு தெய்வ நம்பிக்கை அவசியம் அல்ல. ஏதோ ஒரு நம்பிக்கை உறுதியாக இருந்தால், பற்றும் பழக்கமும் விரைவில் ஏற்படும். அதனால்தான் இறை நம்பிக்கை உலகெங்கும் போதிக்கப்படுகிறது.
இறை நம்பிக்கை இல்லாவிட்டால் வேறு ஏதோ ஒரு பெரிய நம்பிக்கை இருப்பது நல்லது. அது மனிதநேயமாக இருக்கலாம். அல்லது இயற்கையின் மீதான மதிப்பாக இருக்கலாம். அல்லது கலை, இலக்கியம், இசை மேலான ஆர்வமாக இருக்கலாம். அல்லது உங்களை நீங்கள் கரைத்துக்கொண்டு செய்யும் வேலையாக இருக்கலாம். எந்தச் செய்கையில் உங்கள் மனம் கரைந்து காணாமல் போகிறதோ, அதுதான் தியானம்.
மனத்தை அமைதிப்படுத்தி அதைக் காணாமல் போக வைப்பதன் மூலம்தான் ‘நேரம்’ எனும் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிப்போவீர்கள். உங்கள் உடல் வேறு ஒரு தாள கதியில் இயங்கத் தொடங்கும். அந்தக் கணத்தில் உடலும் இல்லாமல் மனமும் இல்லாமல் உங்களை நீங்கள் உணர்வீர்கள்.
அந்த அனுபவம்தான் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். இந்த அனுபவத்தை தரவல்ல தியான நிலை, உங்களுக்கு எந்தச் செயலில் கிடைக்கிறது என்று கண்டுகொள்வதுதான் நிஜமான அறிவு. அதைச் செய்யத்தான் நீங்கள் படைக்கப் பட்டீர்கள். அதில்தான் உங்கள் முழு ஆற்றலும் வெளிப்படும்.
தியானத்தை வெளியில் தேடி ஓடாதீர்கள். அதற்கு நீங்கள் உங்களோடு இருக்க வேண்டும். தன்னை மறந்த நிலையில்தான் உங்களையே நீங்கள் முழுமையாக உணர்வீர்கள். இதைச் சொற்களால் படித்துப் புரிந்துகொள்வது கடினம். ஆனால், செயல் அனுபவமாகப் பெறுவது ஆனந்தம்.

No comments:

Post a Comment