Tuesday 19 April 2022

இயல்பாக இருப்போம்.

 இயல்பாக இருப்போம்.

தவம் என்பது மன ஒழுக்கம். வைராக்கியம், இந்த உலகம் தவத்தில் சிறந்தோருக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில், இந்த உலகத்தைக் காப்பாற்றுவோரே அவர்கள் தான். தபஸ்விகள் இல்லையெனில்
மனிதர்கள் இல்லை. மனிதர்கள் இல்லையெனில் இந்த உலகம்
வெறும் மிருகக் கொல்லை. மனிதர்களில் சிறந்தவரே இங்கு தெய்வம் எனப் போற்றப்படுவர்.
தவ வலிமைக்கு அடிப்படைக் காரணம் புத்தி. புத்தியை சரியாக யார் அணுகுகிறார்களோ, புத்தியோடு தன்னை சரியாக யார் உற்றுப் பார்க்கிறார்களோ, அவர்களுக்கு புலனடக்கம் உடனே வந்து விடுகிறது. புலனடக்கத்தைப் பின்பற்றிப் போனால் தவத்தின் உச்சக் கட்டத்தை வெகு எளிதாக
அடையலாம்.
தவம் என்பது ஒரு முகப்பட்ட சிந்தனை.
படிப்பின் துணை கொண்டுஒருமுகப்படுத்திய மனதால் ஒரு விஷயத்தைச் சிந்திக்கிற போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தோன்றி விடுகிறது. எதைப் பற்றியும் எளிதாய் ஒரு முடிவுக்கு வர முடிகிறது.
ஆனால் ஒருமுகப்பட்ட மனம் என்பது எளிதல்ல. அதற்கு கடும் பயிற்சி அவசியம். வைராக்கியம் அவசியம். ஒழுக்கம் அவசியம். ஒழுக்கம் என்பது மிகக் கடினமான விஷயம்.
புலன்கள் செய்யும் தொந்தரவைப் புறக்கணித்து, மனதைச் சிதற விடாமல் இறுக்கி, மாதக் கணக்கில், வருடக்கணக்கில் உபவாசங்கள் இருந்து, மௌனவிரதம் இருந்து புத்தியைக் கூர்மையாக்கி, மூளையின் மடிப்புக்களை அதிகமாக்கி, படிக்கின்ற சகலத்தையும் நினைவுக்குள் வைத்திருக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது.
ஒரு நாளைக்கு நான்கு முறை பிராணயாமம் செய்வதால் புத்தி இன்னும் வலுக்கிறது.
ஒருமாதம் பாதிக்கு மேல் பச்சைக் காய்கறியே உண்பதால் உடம்பு தகடு போல் இருக்கிறது.
தினமும் பல காதங்கள் நடப்பது மனதுக்கு சந்துஷ்டியும், உடம்புக்கு வலுவையும் தருகின்றது. பெண்ணாசையோ மண்ணாசையோ
பொன்னாசையோ
இல்லாத வாழ்வே உன்னதமான வாழ்க்கை. அதுவே தவ வாழ்வு.
ஏனெனில் இவைகளைச் சம்பாதிப்பது மிக எளிது. சம்பாதித்த மறுகணமே இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற பயம் வந்து விடுகிறது.
ஒரு ஆசை பயத்தைக் கொடுக்குமானால், அந்த ஆசையை எதற்காக சுவீகரிக்க வேண்டும்.
ஆசை அச்சத்தைத் தருகிறது. அச்சம் பொய்யைக் கவிழ்க்கிறது. பொய் என்பது இடைவிடாத தொந்தரவு அது இயல்பாய் இருக்கவிடாது.
தன் இயல்பு கெட்டு விட்டால் கடைசி வரை தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றியுள்ள உலகம் பற்றியும் தெரியவராது.

No comments:

Post a Comment