Saturday 9 April 2022

வார்த்தைச் சிக்கனம்

 வார்த்தைச் சிக்கனம்

**********-**********
குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த தமிழ் திரையுலகுக்கு ‘உலகமயமாக்கல்’ என்ற தாதுபுஷ்டி லேகியத்தை வழங்கி தெம்பூட்டியவர் கண்ணதாசன்.
“மதன மோக ரூப சுந்தரி” என்ற ரீதியில் இருந்த பாடல்களை “பொன்மகள் வந்தாள்” பாணியில் மாற்றிய வார்த்தை சித்தன் அவர்.
அந்த செட்டிநாட்டுச் சிங்கம் ‘கஞ்சன்’ என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வார்த்தைகளை அவரைவிட சிக்கனமாக வேறு யாரும் கையாண்டிருக்க இயலாது.
“பேசுவது கிளியா?” என்ற பாடல் நல்லதொரு உதாரணம். இரண்டிரண்டு வார்த்தைகளாய் அமைந்த சந்தத்தின் விந்தை அப்பாடல்.
“பாடுவது கவியா? - இல்லை
பாரிவள்ளல் மகனா?
சேரனுக்கு உறவா?
செந்தமிழர் நிலவா?”
இவ்வரிகள், “பாடுவது கவியா?” என்று கண்ணதாசனின் கவிநயத்தை சொல்வதன்றி, பாடுகின்ற கதாநாயகனின் கொடுத்துச் சிவந்த கொடைத்தன்மை, அவரது கேரளத்து பூர்வீகம், அவர் தமிழகத்தில் அடைந்திருந்த சொல்லவொணா செல்வாக்கு, அத்தனையும் அழகுற எடுத்தியம்பியிருந்தது. எட்டே வார்த்தைகளில் ஒருவனது சரித்திரத்தையே படம்பிடித்துக் காட்ட கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.
கண்ணதாசனின் பாணி அலாதியானது. அவருக்கு முடிச்சு போடவும் தெரியும். அவிழ்க்கவும் தெரியும். கேள்வியும் எழுப்பி பதிலும் சொல்வதில் அவர் கில்லாடி.
“நதி எங்கே போகிறது?” என்ற கேள்வியை எழுப்பிவிட்டு “கடலைத் தேடி” என்ற பதிலையும் தருவார் நம் கவிஞர்.
ஏனெனில் அவர் ஒரு “Perfectionist”. அவர் போட்ட வார்த்தைக்கு ஈடாக வேறொரு நல்ல வார்த்தை அவரால் மட்டுமே போட முடியும். நாம் போட்டால் அந்த “Imperfection” காட்டிக் கொடுத்துவிடும்.
உண்மையான கவிஞன் எப்படி இருக்க வேண்டும்? அவர் நாட்டையும் நடப்பையும் முறையே தெரிந்து வைத்திருக்க வேண்டும். சமுதாயத்தின் அன்றாட விஷயங்களில் ஐக்கியமாகி இருக்க வேண்டும். பொதுஅறிவு நிரம்பியவராக இருக்க வேண்டும். கற்பனைதிறன் வேண்டும். சமயோசித புத்தி உடையவராக இருத்தல் வேண்டும்.
இவை அத்தனை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவர் கண்ணதாசன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.
அவர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அவர் பாடல்களை நாம் அலசுகின்றோமே? அப்படியென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவரது தீர்க்கதரிசனம் பலிக்கிறது!
படித்ததில் பிடித்தது.
இந்த வரிசையில் இன்னும் ஒரு பாடல்.. திரு ஏ.எம். ராஜா அவர்களின் நினைவு தினம் இன்று, அவர் இசையமைத்து, இனிமையாய் பாடிய பாடல்.. கவியரசரின் வரிகளில் மிக அழகாக மலர்ந்த "பாட்டு பாடவா... பார்த்து பேசவா.. பாடம் சொல்லவா.. பறந்து செல்லவா""..பாடலை ரசிப்போம்!

No comments:

Post a Comment