Wednesday 13 April 2022

கோலாகலமாக நம்ம மதுரையில் சித்திரைத் திருவிழா

 .கோலாகலமாக நம்ம மதுரையில் சித்திரைத் திருவிழா நடந்து கொண்டு இருக்கிறது. இதை மீனாட்சியம்மன் திருவிழா என்றும் சொல்லலாம்.இந்ததிருவிழாவின் நாயகி உறைந்திருக்கும் அந்த மீனாட்சியம்மன் கோவிலைப் பற்றிய வரலாற்று நிகழ்வு உங்களுக்காக:::

அந்த காலத்தில் கிட்டத்தட்ட 170 வருடங்களுக்கு முன் என வைத்துக்கொள்வோமே....
அப்போது இக்கோவில் இருந்தது மிகபரிதாப நிலையில்...எல்லாம் இருள் மயம் ..எங்கும்..எப்போதும்... அங்கங்குள்ள தூண்களில் விளக்குகளில் சிலதான் எரியும்... எரிந்த சிலவும் மின்மினி போலக் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும்..அவ்வளவுதான்..பகலிலேயே கோவிலுக்குள் வர பயப்படுவர் என்றால் இரவு கேட்கணுமோ!! நமக்கெல்லாம் வாழ்க்கையில் இருள் (போல கஷ்டம்)வந்தால் வெளிச்சத்தைத் தேடி கோவிலுக்கு போவோம்.. அந்த கோவிலே இருளில் மூழ்கியிருந்தால்!! அந்த இருளில் வீரநடை போட்டு தைரியமாக உலா வந்தன..நட்வாக்காலி, பாம்பரணை பெருச்சாளி சுண்டெலி போன்றவை..தனியாகக் கூட இன்றி கூட்டம் கூட்டமா வந்து கும்மியடித்து கும்மாளமிட்டும் கான்ஃபரன்ஸ்கள் நடத்தியும் வந்தன. வழிபாட்டிற்கு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் இந்த பூச்சி கடிகளுக்கு ஆளாகவே இந்த விஷத்தை முறியடிக்க கோவில் வாசலிலேயே வேப்பிலையும் கையுமாக மந்திரவாதிகள் டேரா போட்டிருப்பார்களாம்..தருமி காலத்தில் பாண்டிய மன்னன் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கும் புலவருக்கு ஆயிரம் பொற்காசு என அறிவித்தமாதிரி அப்போது மதுரையை ஆண்ட கலெக்டர் ஸ்பென்ஸன் துரை என்பார் இப்பூச்சிகளைக்கொன்று வந்தோர்க்கு பரிசெல்லாம் அறிவித்திருந்தாராம். நல்லவேளை..நக்கீரன் போன்றோர் யாரும் கலெக்டர் ஆபீஸில் அன்று குறுக்கிட இல்லாததல் பூச்சிகளைக் கொன்று வந்து காட்டியோர்க்கெல்லாம் பரிசு மழை தான்.
கோவிலில் பூச்சித்தொல்லை போதாதென்று தரையைத்தாண்டியும் வருவோமென்று தரைகள் தாண்டி கோபுரங்களிலும் மரங்கள் முளைத்திருந்தன. தள வரிசை இருந்தும் இல்லாதவாயின. தட்டோடுகள் வெடித்து த(க)ண்ணீர் விட்டுக்கொண்டிருந்தன. மண்டபங்கள். எல்லாம் கால்சாய்ந்து புத்தூர் மாவுக்கட்டு போல ஏதேனும் போட்டுவிடுங்களேன் என கண்ணீர் வடித்து பரிதாபமாகக் கெஞ்சிய நிலையிலிருந்தன. அறிவித்தபடி பரிசு கொடுத்து விஷப்பூச்சிகளை ஓரளவு குறைத்தது, மந்திரவாதிகளை கோவில் வாசலில் அமர விட்டது தாண்டி கலெக்டர் மேற்கொண்டு ஏதும் செய்யவில்லை. அந்நிலையில் 1858ல் ஜவுளி வியாபாரம் பண்ணி பணம் சம்பாதிக்க வந்தனர் ஓர் அபூர்வ சகோதரர் இருவர். (அன்னையே தான் அனுப்பியிருக்க வேணும்) அவர்கள் தான் வயிநாகரம் நாகப்ப மற்றும் வெங்கடாசல செட்டியார்கள். அன்னையைக் கும்பிட கோவிலுக்குச் சென்ற அவர்களிருவரும் கோவில் இருந்த நிலையைப் பார்த்து திடுக்கிட்டுப் போயினர். கதி கலங்கினர்..நிலை குலைந்தனர். ஆயினும் அப்படியே விட்டுவிடாமல் கலெக்டரே ஏதும் செய்யா நிலையில் தாம் மட்டும் ஏன் என்றெல்லாம் தற்போதுள்ள குடிமகன்கள் போல் எண்ணாமல் கோவிலைச் சீர் படுத்தும் முயற்சியில் முழுமூச்சுடனும் வீச்சுடனும் இறங்கினர். நாகப்ப செட்டியார் தலைமையில் ஓர் ஐவர் குழு (வேலை செய்யும்) அமைக்கப்பட்டு மேலே சொல்லப்பபட்ட மேலேயும் கீழேயும் இருக்கும் குறைகள் ஒவ்வொன்றாய்க் களையப்பட்டு கோவில் புதுப்பொலிவு கண்டது. அதற்காக அந்த குழு செலவு செய்தது ...1870களில்...சுமார் 25 லட்சங்கள்.(இப்போதைய மதிப்பிற்கு எவ்வளவு சைபர்கள் சேர்க்கணுமோ). திருப்பணிகள் நிறைவடைந்து 06/02/1878ல் மகா கும்பாபிஷேக வைபவமும் சிறப்பா
அரங்கேறிற்று. பின்னர்
1968ல் நடந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில் மேலே சொல்லப்பட்ட செட்டியார்களது பேரர்களான ராமநாதன் மற்றும் பாலகவி வயிநாகரம் தங்களது பாட்டனார்கள் கோவிலில் எந்தெந்த மராமத்து வேலைகளை மேற்கொண்டார்கள் மற்றும் அவை ஒவ்வொன்றிற்குமான செலவுகள் விவரத்தை தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள். எனவே இவையேதும் யூகத்தில் வந்தவையல்ல..உண்மை.. உண்மை..மற்றும் உண்மையே....
அதற்குப்பின்னர் படிப்படியா முன்னேறிஇந்நாட்களில் நாம் பார்த்து வியக்கும் அதீத பொலிவுடன் காணப்படுகிறது கோவில்.
வரலாறு முக்யம் மக்களே... மறந்துவிடவேண்டாம்...அடுத்த முறை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்கையில் இந்த அபூர்வ சகோதரர்களான நாகப்ப மற்றும் வயிநாகர வெங்கடாசல செட்டியார்களை நன்றியுடன் நினைவு கூர்ந்துவிட்டு அன்னையையும் ஸ்வாமியையும் தரிசிப்போமாக.!!!
--++++மதுரை மாநகர நினைவலைகள் பற்றிய ..ஓர் புத்தகத்தில் நான் படித்ததிலிருந்து தொகுத்தது. ---++--+
நன்றி: N Venkataraman

No comments:

Post a Comment