Monday 11 April 2022

பலரும் பலவிதமாகக் கூறுவார்கள்.

 பலரும் பலவிதமாகக் கூறுவார்கள்.

சுயமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.
தந்தையும் மகனும் ஒரு கழுதையை ஓட்டிக் கொண்டு கடைவீதி வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்த ஒருவர் கழுதை சும்மாதானே செல்கிறது. யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே என்றார். அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார்.
கொஞ்ச தூரம் போனதும் எதிரே வந்த ஒருவர், ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு, நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா? எனக் கேட்டார். உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான்.
தந்தையும் அவ்வாறே செய்தார். இப்படியாக இன்னும் கொஞ்ச தூரம் பயணித்த பிறகு, இன்னொருத்தர் பார்த்து தந்தையைக் கடிந்து கொண்டார். ஏனய்யா இப்படி சின்னப் பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா? என்று கேட்டார்.
தந்தையும் மகனும் யோசித்தனர் இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது எனப் பலவாறாக யோசித்து முடிவில் இரண்டு பேருமே ஏறிச் செல்வோம் எனக் கழுதையின் முதுகில் ஏறிக் கொண்டனர்.
இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர், அடக் கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள். இவர்களுக்கு இரக்கமே இல்லையா? என்று கூறினார்கள்.
மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும் கழுதையை விட்டு இறங்கியதோடு இல்லாமல், இருவருமாகச் சேர்ந்து கழுதையைத் தூக்கி தோளில் சுமந்தபடியே நடக்கத் தொடங்கினர்.
இதைகண்டதும் அங்கிருந்தவர்கள், இப்படியுமா முட்டாள்கள் இருப்பார்கள் எனக் கூச்சலிட்டு நகைக்கவும் அரண்டு போன கழுதை கீழே குதித்து அவர்களையும் கீழே தள்ளி விட்டு ஓட்டமெடுத்தது.
இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் ஓடிப் போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர்.
ஆம் நண்பர்களே
மற்றவர்களுக்காக வாழக் கூடாது. ஒரு செயலை எப்படிச் செய்ய வேண்டும் என அறிந்து கொண்டு அதன்படி செய்ய வேண்டும்.
Bsraja Raja and 1 other
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment