Monday 11 April 2022

ஸ்ரீராம நவமி........(10-04-2022)

 ஸ்ரீராம நவமி........(10-04-2022)

பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் ஸ்ரீ ராமனின் பிறந்த நாள்.
இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு ராம நவமி திருவிழா நாளைய தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மாகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஸ்ரீராம அவதாரமும், ஸ்ரீகிருஷ்ண அவதாரமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜென்மாஷ்டமியாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது போல ஸ்ரீராம நவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இறைவன் ஸ்ரீராமருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். அத்தோடு எண்ணற்ற கோயில்களும் உண்டு.தமிழகத்தில் உள்ள பெருமாள் ஆலயங்களில் ராம நவமி பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.
ராம அவதாரம் ஏன்?...
அரக்கன் ராவணனின் கொடுமைகளால் துன்பமுற்ற தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தார்கள். மகாவிஷ்ணு அவர்களிடம், " கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் அயோத்தி மன்னன் தசரதன் பெற்ற வரப்பயன் காரணமாக அவனுக்கு மைந்தனாக நாம் அவதரிக்கப் போகிறோம். அந்த நேரத்தில் ராவணனை அழித்து, உங்கள் துன்பம் துடைப்போம் என்று கூறினார் மகாவிஷ்ணு.
அயோத்தி மன்னன் மகன்...
அயோத்தி மன்னனாகிய தசரதனுக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால், ரிஷ்யசிருங்க முனிவர் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அந்த யாகத்தின் பயனாக, தசரதச் சக்கரவர்த்தி நான்கு மைந்தர்களைப் பெற்றெடுத்தார். அவர்களுள் முதல் மைந்தனாக அவதரித்தார் ஸ்ரீ ராமன். அடுத்ததாக பரதன், சத்துருக்கன், லட்சுமணன் ஆகியோர் அவதரித்தனர்.
ஸ்ரீ ராம நவமித் திருநாள்...
ஸ்ரீ ராமன் அவதரித்த நன்னாளே ' ஸ்ரீ ராம நவமித் திருநாள். மகிமை தரும் ராம நவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையைச் சுத்தம் செய்து, அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்துக்குப் பூச் சூடி, நைவேத்தியங்களைப் படைத்து, ஸ்ரீ ராம நாமம் சொல்லிப் பூஜிக்க வேண்டும்.
இராம நாமம் சொல்லுங்க.....
"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மமும் மரணமு மின்றித் தீருமே
இன்மையே ராமவென் றிரன் டெழுத்தினால்"
என்பது கம்பரின் வாக்கு. ராம நவமியில் மகிமைமிகு ராம நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதால் இல்லத்தில் நற்காரியங்களும், செல்வ வளமும் வளர்ந்தோங்கும். நாம் செய்த பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் கூடும்.
ராம நவமியில் தானம் கொடுங்கள்....
ராம நவமியில் ராமனுக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமாகும். ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன்பின், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின்போதும், ராமபிரான் நீர்மோரையும், பானகத்தையும் தாக சாந்திக்காக அருந்தினார். அதன் நினைவாகவே, நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீ ராம நவமி அன்று நிவேதனப் பொருட்களாகப் படைக்கப்படுகின்றன.
இதைத்தவிர, பொங்கல், பருப்பு வடை போன்றவற்றையும் நிவேதனம் செய்து, பகிர்ந்து உண்பார்கள். ஸ்ரீ ராமன் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் வழங்குவதையும், விசிறி தானம் செய்வதையும் வழக்கமாக அமைத்தனர்.
ராமனின் அருள் கிடைக்கும்......
பெரிய அளவில் நைவேத்தியம் படைக்க முடியாவிட்டாலும் ராமர் பட்டாபிஷேக படத்தின் முன்பாக வாழைப்பழம், பால் போன்ற எளிய பொருட்களை அர்ப்பணித்தும், ஸ்ரீ ராம நாமம் சொல்லியும் ஸ்ரீ ராமனை வணங்கி அருள் பெறலாம்.
ஆலயத்திலும் சரி, இல்லத்திலும் சரி, பூஜையின்போது, ராமபிரானை வணங்கியபிறகு, பூஜையில் கலந்துகொள்ளும் பெரியோர்களையும், ராம பக்தர்களையும்கூட வணங்கி அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும்.
அனுமன் அருள் கிடைக்கும்...
ராம நவமியன்று, ராம நாமம் உச்சரிக்கப்படும் இடங்களிலும், இராமாயணம் படிக்கப்படும் இடங்களிலும் அங்குள்ள அடியவர்கள் மீது ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருள் செய்து ஆனந்திப்பாராம். எனவே, அடியவர்களை வணங்குவதன்மூலம் அனுமனின் அருளையும் பெறலாம்.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.....
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே....
என, எந்நாட்டவர்க்கும் இறைவனாம் ஈசனே, ஸ்ரீ ராமரைப் போற்றிப் புகழ்ந்து, உமையாளுக்கு உபதேசம் செய்து மகிழ்ந்த மந்திரம் ராம நாம மந்திரமாகும்.
அதாவது, " அழகிய முகத்தவளே, ஸ்ரீ ராம ராம ராம என்று, மனதுக்கு இனியவனாகிய ராமனிடத்தில் நான் ஆனந்தம் அனுபவிக்கிறேன். அந்த ராம நாமம், சஹஸ்ர நாமத்துக்கு சமமானது " என்று பார்வதிதேவியிடம் இராம நாமத்தின் மகிமையைச் சிவபெருமான் கூறி மகிழ்ந்தாராம்.
ஆகவே, நாமும் ஸ்ரீ ராம நாமம் கூறி உயர்வடைவோமாக.
எட்டு நாட்கள் விழா....
ராம நவமியை வட இந்தியாவில் தொடர்ந்து எட்டு நாட்கள் விழாவாகக் கொண்டாடுகின்றார்கள். நாமும், ஸ்ரீ ராம நவமிக்கு முன் ஒன்பது நாட்கள் வீட்டில் பூஜை செய்து, பெரியவர்கள் மூலமாக ராமாயணம் படித்து, கடைசி ஸ்ரீ ராம நவமி நாளான பத்தாம் நாளன்று இராமாயண பாராயணத்தை நிறைவு செய்வதால் நம் பாவங்கள் அகன்று, மோட்சப்பேறு கிடைக்கும் என்பது நிச்சயம்.
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
நன்றி ஆன்மீக களஞ்சியம்

No comments:

Post a Comment