Monday 18 April 2022

ஸ்ரீ வாகீசசிவன்

 ஸ்ரீ வாகீசசிவன்

"மூவுலகின் மேன்மைக்காகச் சுமேரு மலையின் உச்சியிலே சிறந்த யோக பந்த நிலையில் அமர்ந்திருப்பவரும் சூரிய சந்திரர்களை இருகண்களாக உடையவரும் உமையுடன் கூடியவரும், சடை முடி தரித்தவருமான சதாசிவனை நான் வணங்குகிறேன்" - என்பது இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் வரலாறு கூறும் உதயேந்திரம் செப்பேட்டின் தொடக்கப் பகுதியாகும்.
சதாசிவ மூர்த்தத்திற்கே முதலிடம் கொடுத்து வழிபட்ட இப்பல்லவ மன்னன் தஞ்சைக்கருகிலுள்ள கண்டியூர் பகுதியிலும், நியமத்திலும் "ஆயிரத்தளி" என்ற பெயரில் ஆயிரம் சிவலிங்கங்களை வைத்துக்கோயில் எடுத்தான். அக்கோயிலில் சதாசிவ வடிவினை வாகீஸ்வரராகவும், உமா பரமேஸ்வரியை வாகீஸ்வரியாகவும் மூர்த்தங்களாக்கி வழிபட்டான்.
இம்மூர்த்தங்கள் பெரும்பாலும் நான்கு தலையுடன் கூடியதாகவும், சிலவற்றில் ஒருதலையுடனும் காணப் பெறுகின்றன. சதுராணனன் எனப்படும் இம்மூர்த்தி தாமரை மலரின் மேல் அமர்ந்த நிலையில் மேலிரு கரங்களில் திரிசூலமும், அக்கமாலையும் ஏந்தியிருப்பார்; கீழிரு கரங்களில் வலக்கரத்தில் தாமரைமொட்டையும், தொடைமேல் இருத்திய இடக்கரத்தில் சுவடியையும் ஏந்தியிருப்பார். இத்தகைய திருவுருங்களைக் கண்டியூர், தஞ்சை, செந்தலை, வீரசிங்கம் பேட்டை, திருவையாறு, திருநெய்த்தானம் ஆகிய இடங்களில் காணலாம். கண்டியூர்க் கோயிலில் உள்ள சிற்றுருவச் சிற்பப் படைப்பொன்றில் நான்முகனாகப் பத்மத்தில் அமர்ந்துள்ள வாகீச சிவனாரை நான்முகனும், திருமாலும் போற்றி நிற்கும் காட்சி உள்ளது.
அரிய இச் சிவவடிவினைத் திருஞானசம்பந்தர் "பதுமநன்மலரது மருவிய சிவன்" - என்றும், , அப்பர் அடிகள் "தாமரை ஆதனத்தான்", "புண்டரீகப் புதுமலர் ஆதனத்தார்", "தங்கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்" - என்றெல்லாமும் குறிப்பிடுவதுபோல் மணிவாசகர் “தாமரைச்சைவன்" என்று " போற்றுவார். லகுலீச பாசுபதசைவர்களின் செல்வாக்கால் செழித்த நந்திபுரம் பகுதியிலன்றி இவ்வடிவங்களை வேறு எங்கும் காணல் அரிது.
குடவாயில் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் 'அரிய சிவமூர்த்தங்கள்' என்னும் தலைப்பில் வரைந்த கட்டுரையில் இருந்து ஒரு பகுதி.

No comments:

Post a Comment