Wednesday 27 April 2022

நல்லவனாக வாழ்வது எளிது, ஆனால் "நல்லவன்" என்று பேர் எடுத்து வாழ்வது சற்று கடினம்.

 நல்லவனாக வாழ்வது எளிது, ஆனால் "நல்லவன்" என்று பேர் எடுத்து வாழ்வது சற்று கடினம்.

பழங்காலத்தில் எல்லாம் கிரேக்க தேசத்தில் ஒரு பழக்கம் காணப்பட்டது. அதாவது யாரையாவது நாடு கடத்த வேண்டும் என்று அந்த மக்கள் விரும்பினால், அவருடைய பெயரை ஒரு மட்பாண்டத்தில் எழுதி அதை ஒரு குறிப்பிட்ட பொது இடத்தில் போட்டு விடுவார்கள். அவ்வளவுதான் இது மாதிரி பல பேர் போட்டுக்கொண்டே இருப்பார்கள். எல்லாம் குவிந்த உடன் அந்த சில்லுகளில் யாருடைய பெயர் அதிகமாக இருக்கிறதோ அந்த நபரை ஒரு பத்து ஆண்டுகள் நாடு கடத்தி விடுவார்கள். அது அங்கே உள்ள வழக்கம்,
ஒரு நாள் அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு ஆள் நின்றுக்கொண்டிருந்தான். அவன் கையிலே ஒரு சில்லு வைத்துக் கொண்டிருந்தான். யாருடைய பெயரையாவது எழுதி அந்த இடத்தில் போட வேண்டும் என்று ஆசை. ஆனால் அவன் படிக்காதவன். அதனால் எழுதத் தெரியவில்லை. யாராவது அந்த வழியாக வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.
ஒரு பெரியவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் ஓடினான் கையிலிருந்த மட்பாண்ட சில்லைக் கொடுத்தான். ஐயா இதிலே ஒரு பெயர் எழுதிக் கொடுங்கள்
என்றார். அந்தப் பெரியவர் அதை கையில் வாங்கிக் கொண்டார்.
யாருடைய பெயரை எழுத வேண்டும் என்றார்.
இவன் அரிஸ்டாட்டில் என்று எழுதுங்கள் என்றான். அதைக் கேட்டதும் அந்தப் பெரியவருக்கு அதிர்ச்சி.? ஏன் தெரியுமா அவர்தான் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். இருந்தாலும் தான் தான் அது என்பதைக் காட்டிக் கொள்ளாமல் அந்த நபரிடம் கேட்டார்.
அதுசரி அரிஸ்டாட்டில் உனக்கு என்ன கெடுதல் செய்தார்? அவர் பெயரை எழுதச் சொல்கிறாய்? என்று கேட்டார்
அவர் எனக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. அவரை நான் பார்த்ததுகூட இல்லை என்றான்.
எதற்காக அவரை நாடு கடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டார்.
அரிஸ்டாட்டில் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அவர் ரொம்ப நல்லவர். அவர் ஒரு பெரிய அறிவாளி அவர் ஒரு பெரிய வள்ளல் பேரறிஞர். இப்படி எல்லோரும் சொல்வதைக் கேட்டு எனக்கு அலுத்துப் போய்விட்டது என்றான். அதனால் அவரை வெறுக்கிறேன் என்று கூறினான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் நல்லவனாக இருப்பதில் தவறு ஏதும் இல்லை. எந்தத் தொல்லையும் இல்லை. ஆனால் நம்மை நல்லவன் நல்லவன் என்று அடுத்தவர்கள் எப்போது சொல்ல ஆரம்பிக்கிறார்களோ அன்றிலிருந்து தான் நமக்கு இடைஞ்சல் ஆரம்பமாகிறது.
எனவே இதிலிருந்து நமக்குப் புரிவது என்னவென்றால் நல்லவனாக வாழ்வது எளிது; ஆனால் "நல்லவன்" என்று பேர் எடுத்து வாழ்வது சற்று கடினம்.

No comments:

Post a Comment