Tuesday 27 June 2023

திசை திருப்பும் கலை.

 திசை திருப்பும் கலை.

சிறு கல்லைத் தூக்கியெறிந்தால் கண்ணாடி சிதறி விடும். அதைப் போல் மனதில் சிறு சலனம் ஏற்பட்டால் எடுத்த செயல் தோல்வியில் தான் முடியும்.
சூரியன் மிகமிக வலிமை வாய்ந்தது. எங்கோ இருக்கிறது. ஆனால், ஒருவராலும் அதன் அருகில் போக முடியாது. ஆனால், அந்தப் பெரிய சூரியனைக் கிணற்று நீரில் காண முடியும். கிணற்றுக்குள் அதன் பிம்பத்தைக் காண முடியும்.
சலனம் இல்லாத கிணற்றில் சூரியனின் பிம்பம் மிகத் தெளிவாகத் தெரியும். அதற்குக் காரணம் கிணற்றில் சலனம் இல்லை. அதனால் சூரியனின் பிம்பம் மிகத் தெளிவாகத் தெரிகிறது, அது போலத்தான் நம் உள்ளமும்.
எந்தவிதச் சலனமும் இல்லாமல் இருந்தால் தான், நாம் எண்ணிய குறிக்கோள்களை எளிதில் அடைய முடியும்.
ஓட்டப்பந்தயம் ஒன்றில் இருவர் மட்டுமே பங்கேற்றனர். தொடக்கத்தில் இருவரும் சமமாக ஓடினர். ஒரு கட்டத்தில் ஒருவர் களைப்படைந்தார். ஆனால், பந்தயத்தில் தோற்பதை அவர் விரும்பவில்லை.
அதனால் மற்றவரை திசைதிருப்பும் விதமாக தங்கக் குமளி (ஆப்பிள்) ஒன்றை உருட்டி விட்டார். அதை எடுக்க விரும்பிய மற்றவர் கவனம் தடுமாறியது.
இதற்கிடையில் தங்கக் குமளியை உருட்டி விட்டவர் வேகமாக ஓடி எளிதில் இலக்கை அடைந்தார். மனித வாழ்வும் ஓட்டப்பந்தயம் போலத்தான், சலனத்திற்கு இடம் கொடுத்தால், நம் எதிர்கால முன்னேற்றம் தடைபடும். அதனால் நிர்ணயித்த இலக்கை அடைய முடியாது.
நம்முடைய மனதிலும் கூட சில நேரங்களில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றி நம்மைக் குழப்பி விடும்.அப்போது நாம் சலனப்படாமல் பொறுமையுடன் இருந்தால் மனம் தெளிவடைந்து அமைதி ஏற்படும்.

No comments:

Post a Comment