Monday 12 June 2023

தன்னைத் தானே களங்கப்படுத்தும் மனிதர்கள்.

 தன்னைத் தானே

களங்கப்படுத்தும் மனிதர்கள்.
எப்படி மது அருந்துவது, புகை பிடிப்பது உடலுக்குக் கெடுதலோ, அதே போன்று தான் மற்றவர்களின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைக் கொள்வதும்.
அந்தப் பொறாமை குணம் சுற்றி உள்ளவர்களை அழிக்கும் வல்லமை படைத்தது.
இந்தப் பொறாமை குணம் உள்ளவர்கள், தான் வளர்வது பற்றிக் கூட அதிகம் சிந்திக்காமல், அடுத்தவர்கள் வளர்ச்சியைப் பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள்.
இவர்களுக்கு அடுத்தவர் சிறப்பாக இருப்பதைப் பொறுக்கவும் முடியாது.
தன் வளர்ச்சி, தன் குடும்ப வளர்ச்சி என்று சிந்தித்தாலும் முன்னேற, வளம் பெற, நலம் பெற, வளர்ச்சி பெற வாய்ப்பும் கிட்டும், வழியும் பிறக்கும்.
அதைவிட்டு, அடுத்தவர் வாழ்கிறாரே என்று வயிற்றெரிச்சல் கொள்வதால் என்ன பயன்.
ஒருவரின் பொறாமை குணம் என்றும் அவரின் முன்னேற்றத்தை முழுவீச்சில் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடும்.
இந்த குணம் இருந்தால் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றியே சிந்திக்கத் தோன்றும். பொறாமைக் குணம் உள்ளவர்களுக்கு துன்பம் தான் அதன் பரிசாகக் கிடைக்கும்.
அதேபோல அடுத்தவரின் வளர்ச்சியைக் கண்டு, அதனால் அவருக்கு அவப் பெயரைச் செய்வதும் மிகவும் தவறான செயல். எதிரியை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தன்னைத் தானே களங்கப்படுத்திக் கொள்வார்கள்.
நமது வாழ்வில் இப்படிப்பட்ட பொறாமை குணம் கொண்ட நபர்கள் எங்கும் நிறைந்து காணப்படுவார்கள், இவர்களைக் கடக்காமல் இருக்க முடியாது. குறிப்பாக அலுவலக இடங்களில் இவர்களைத் தான் பெரும்பாலும் நாம் சந்திக்க நேரிடும். அப்போது அவர்களைக் கண்டுகொள்ளக் கூடாது. நாம் நமது வேலையை சரியாகச் செய்யும் போது நம்மை அதிகாரிகளும்,
சக பணியாளர்களும் பாராட்டச் செய்வார்கள்.
அலுவலகத்தில் மற்றவர்களைக் கவர்ந்தவராக இருப்பீர்கள். ஆனால் இதை நினைத்து கடுப்பாகும் முதல் நபர் உங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர் அவராகத் தான் இருப்பார்.உங்களுக்கு வேலை தொடர்பான பிரச்னைகள், சந்தேகங்களுக்கு அந்த நபர் உதவ மாட்டார். உங்களுக்குத் துணை நிற்க மாட்டார்.
இந்த நேரத்தில் முற்றிலும் அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள். நல்ல நட்பு வட்டாரத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். எப்போதும் போல உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்து கொண்டிருங்கள். உங்களுக்கு நீங்களே ஊக்கம் கொடுத்துக் கொண்டு முன்னேற முயற்சி செய்யுங்கள். ஆம், எந்தச் சூழலுக்குள்ளும் நீந்தக் கற்றுக் கொண்டு கரையேறுவதே வெற்றியின் நுட்பம்.

No comments:

Post a Comment