Wednesday 1 March 2023

எண்ணங்களின் வலிமை.

 எண்ணங்களின் வலிமை.

உதவி செய்ய வேண்டும் என்று மனதார நினைப்பதே மிகப் பெரிய உதவிதான். நான் மிதி வண்டியில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த காலத்தில், தெருவோரம் மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவரை தினமும் பார்ப்பேன். ஒரு காபியோ, சிற்றுண்டியோ என்னால் முடிந்த அளவு வாய்ப்பு கிட்டும் பொழுதெல்லாம் உதவி செய்வேன்.
ஒரு சமயம் அவர் அணிந்திருந்த ஆடை கிழிந்து போயிருந்ததை பார்க்க நேர்ந்தது. இரண்டு மூன்று நாட்களாகவே அந்த மனிதர் கிழிந்த துணிகளோடுதான் அலைந்து கொண்டிருந்தார். அவருக்கு புதுத் துணி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால், ஆடை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு என்னிடமோ பணமில்லை. தினக் கூலி எனக்கு. சம்பளப் பணத்தை செலவு செய்தால் வீட்டில் ரணகளமாகி விடும்.
சரி முதலாளியிடம் கடனாகக் கேட்டுப் பார்க்கலாம் என்று முடிவு செய்து கொண்டு வேலைக்குப் போனேன்.
அன்றைய தினம் பார்த்து முதலாளி வரவேயில்லை. அன்றைக்கு முழுவதும் இதே சிந்தனைதான். கவலையோடு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் பொழுதுதான் பார்த்தேன், அந்த மனிதர் புதுத் துணிமணிகள் அணிந்திருந்தார். யாரோ புண்ணியவான் வாங்கிக் கொடுத்திருந்தார். இதுதான் நல்ல எண்ணங்களின் வலிமை.
எனவே உதவி செய்ய வேண்டும் என்ற அழுத்தமான எண்ணம் நமக்கு இருந்தாலே கூட போதும், அந்தக் காரியம் நிச்சயமாக நடக்கும். இந்த அனுபவத்தை என் வாழ்நாளில் பலமுறை நான் அடைந்திருக்கிறேன். இங்கே பிரச்சனை என்னவென்றால் இந்த உதவிதான் செய்ய வேண்டும், அந்த உதவிதான் செய்ய வேண்டும், அப்படிச் செய்தால்தான் நமக்கு அது கிடைக்கும், இது கிடைக்கும் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்வதுதான் சிக்கலாகி விடுகிறது.
பிறகு நமக்கு இயலவில்லை எனும் பொழுது கடவுளைக் குறை கூறுவது நம் வாடிக்கையாகி விட்டது. நம்மால் முடிந்த உதவி உணவோ, பொருட்களோ, பணமோ ஏதாவது உதவி செய்யலாம். கீழே விழுந்தவரைப் போய் தூக்கி விடுவது கூட உதவிதான். அது உடல் உதவி. எதுவுமே முடியவில்லையா நாலு வார்த்தை அன்பாகப் பேசி உங்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்கிறேன் என்று சொல்வது கூட சிறந்த உதவிதான். அதுவும் முடியவில்லையா அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது அனைத்திலும் சிறப்பு.

No comments:

Post a Comment