Monday 20 March 2023

எது நல்லது கெட்டது.

 எது நல்லது கெட்டது.

நம்மில் பெரும்பாலோனோர் எதற்கெடுத்தாலும் அடுத்தவரிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அப்படி அடிக்கடி ஆலோசனை கேட்பதால் அவர்களின் சுயமாக சிந்திக்கும் திறன் குறைந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் தன்னம்பிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது.
முன்னேற்றம் என்பது சுயமாக இருக்க வேண்டும். அதாவது சொந்தமாக ஆலோசிக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும்.
அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். தவறில்லை. ஆனால்!, அதனை அப்படியே நகலெடுத்தது போலக் கடைப்பிடித்தல் கூடாது.
அந்த ஆலோசனைகளை உங்கள் மனதில் ஊறப் போட வேண்டும். அதில் எதை எடுத்துக் கொள்ளலாம், எதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஆலோசிக்க வேண்டும்.
சில ஆலோசனைகள் உங்கள் வாழ்க்கைக்கும், உங்கள் மனநிலைக்கும், உங்கள் நடவடிக்கைக்கும், உங்கள் பழகும் விதத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும்.
அவற்றைத் துணிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு சில ஆலோசனைகள் நல்லதாகவும், கடைப்பிடிக்க வேண்டியதாகவும் இருக்கலாம்.
ஆனாலும்!, உங்கள் மனோபாவத்திற்குப் பொருந்தாததாக இருக்கும். எனவே அவற்றை ஒதுக்கித் தள்ளி விட வேண்டும்.
எல்லோரையும் ஒரே நேரத்தில் நிறைவடையச் செய்தல் என்பது இயலாத செயல். 'எடுப்பார் கைப்பிள்ளையாக' இருக்காமல் நாமாகவே நல்லது எது, கெட்டது எது என்பதை சுயமாகச் சிந்தித்து ஒரு செயலில் இறங்க வேண்டும்..
உங்கள் சுயத்தைத் தொலைக்காமல் நீங்கள், நீங்களாக இருங்கள். தைரியமாக உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அல்லது கூற முயற்சி செய்யுங்கள்.
மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என்று நினைத்தால் நம் கருத்தை என்றுமே கூற முடியாது!, நம் கருத்தை முன் வைப்பதன் மூலமே மேலும் மாற்றுக் கருத்துகளை நம் தவறுகளை நாம் இனம் காண முடியும், அப்போது தான் நம் எண்ணங்களை, தவறுகளை சரி செய்து நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் அல்ல, மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை கேட்டுக் கொள்ளுங்கள். ஆனால்!, முடிவு எடுப்பது என்னவோ நீங்களாகத் தான் இருக்க வேண்டும்.
எதையும் சுயமாக சிந்தியுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

No comments:

Post a Comment