Wednesday 29 March 2023

சீராக வாழ வேண்டும்.

 சீராக வாழ வேண்டும்.

*‘‘விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி
செல்லும் உடல் கேட்டேன்’’*
- என்றான் மகாகவி பாரதி.
மனம் சொல்ல வேண்டுமாம்; உடல் ஆட வேண்டுமாம், மனம் ‘போ’ என்றால், உடல் போக வேண்டும். ‘ஐயோ, எல்லோரும் போகிறார்கள் நாம் போக முடியவில்லையே’ என்று மனது ஏங்க, உடம்பு போக முடியாமல் தள்ளாட, அந்த நிலைமை வருமானால், மனித வாழ்க்கையில் என்ன சுகம் இருக்கிறது அதனால்தான், ‘மனதை அடக்கி உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று நான் அடிக்கடி போதிக்கிறேன்.
நான் ஒரு போதகாசிரியன் அல்ல; உபந்நியாசியும் அல்ல; உலகை முற்றிலும் உணர்ந்தவனுமல்ல; துறந்தவனுமல்ல; என்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் பலவற்றையே இதுகாறும் நான் உங்களுக்குத் தொகுத்துத் தந்திருக்கிறேன். ஏனென்றால், வாழ்க்கையை இந்திய மக்கள் சுகமாக நடத்த வேண்டும். மலேசியாவிலேயோ, சிங்கப்பூரிலோ, மற்ற நாடுகளிலேயோ பார்க்கும்போது, இந்தியாவில் இருக்கின்ற அளவுக்கு நோயாளிகள் அங்கே இல்லை.
இங்கே உடல் நோயாளிகளைவிட, மனநோயாளிகள் அதிகம், கவலைப்படுபவர்கள் அதிகம். கஷ்டப்படுபவர்கள் அதிகம். வறுமைக் கஷ்டம் என்றால், ஏதாவதொரு பரிகாரம் தேட முடியும். ‘இனம் தெரியாத ஒரு துயரம் உங்களுக்குள்ளேயே மண்டிக்கிடக்கிறதே, என்ன செய்வேன்’ என்று அழுகிறவர்கள் அதிகம். அந்தத் துயரத்தாலே உடம்பு ஆட்டி வைக்கப்பட்டு மனதைக் கெடுத்துக் கொண்டவர்கள் அதிகம். இவர்களெல்லாம் ஒரு கட்டத்தில் சீராக வாழ வேண்டும்; துணிந்து வாழ வேண்டும்.
துணிச்சலோடு, எதையும் எதிர்த்து நிற்கின்ற தன்மையோடு, ‘‘வந்தோம்; பிறந்தோம்; வாழ்வோம்; சாவோம்!’’ என்று முடிவு கட்டிக்கொண்டு, வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாகும்.
‘வருவதைக் கண்டு மயங்காதே போவதைக் கண்டு கலங்காதே!’ பெரிய பதவி வருமானால், ‘எனக்கு மேல் எவன் பெரியவன்’ என்று திமிர் பிடித்து அலையாதே. பதவி போய் விடுமானால், ‘ஐயோ போய் விட்டதே!’ என்று அழாதே. வருவதும் போவதும் ஆண்டவனுடைய போக்குவரத்துச் சாலை விதி. ஆண்டவன் அதிலே டிராபிக் கமிஷனர். அவன் போட்ட உத்தரவின்படியே தான் சில விஷயங்கள் வருகின்றன; சில விஷயங்கள் போகின்றன.
ஆறு வயதிலேயே குழந்தைகள் இறந்துபோகின்றன; பதினாறு வயதிலேயும் இறந்து போகின்றன; போகின்ற குழந்தைகளுக்காக நாம் அழ முடிகிறதே தவிர, திரும்பிக் கொண்டு வரமுடிவதில்லை. நூறு வயது வரையில் சில பேர் வாழ்கிறார்கள்; ஏன் வாழ்கிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை.
எல்லாம், எல்லாக் கதைகளும் எங்கே போய் முடிகின்றன எவனோ ஒருவன் இருக்கிறான்; ஏதோ ஒரு சக்தி இயங்குகிறது; அந்தச் சக்தியினுடைய கரங்களில் இருந்து அத்தனையும் புறப்படுகின்றன; திரும்ப அந்தக் கால்களிலேயே அவை போய்ச் சேர்ந்துவிடுகின்றன.
அந்த லயத்தை உணர்ந்துகொண்ட பின்னாலே, உடல் மறத்து, உள்ளம் மறத்துப் போய், ‘நாம் பிறந்தது ஆண்டவனை எண்ண, அடுத்தவருக்கு உதவ, நியாயமாக வாழ என்கிற எண்ணம் பிறந்து விடுகின்றது. அந்த நியாயத்தை மதித்து, ‘உன்னையே நீ அறிந்து’ உலகையும் அறிந்து, எல்லோருக்கும் வேண்டியவனாகவும், எல்லோருக்கும் நல்லவனாகவும், எல்லோரையும் புரிந்து கொண்டவனாகவும், எல்லோராலும் புரிந்து கொள்ளப் பட்டவனாகவும் வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.எல்லாம் வல்ல இறைவன், எல்லோர்க்கும் அருள்வானாக.
*கவியரசு கண்ணதாசன்*
*அர்த்தமுள்ள இந்துமதம்*

No comments:

Post a Comment