Wednesday 15 March 2023

பாதுகாப்பான பொருளாதாரம்.

 பாதுகாப்பான பொருளாதாரம்.

செல்வத்துட்ச் செல்வம் செவிச்செல்வம்.
நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்.
மழலைச் செல்வம்.
என்றெல்லாம் நாம் செல்வங்களை பல உருவங்களில் பொதித்து வைத்திருக்கிறோம்.
ஒருவரை வாழ்த்தும்போதும் கூட "பதினாறு செல்வமும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க" என வாழ்த்துவதுண்டு.
எவ்வடிவில் இருந்தாலும் மனிதனின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவை அனைத்தும் செல்வங்களே.
நாம் விரும்பும் செல்வங்களை அறிவின் உதவியாலும், அறிவியலின் உதவியாலும் ஒரு குறிப்பிட்ட அளவு வரை அடைந்திருக்கிறோம். இதிலும் குறிப்பாக நோயற்ற வாழ்வு என்பது வழியற்ற நோவாகவே இருக்கிறது.
எவ்வளவோ பொருட்செல்வம் இருந்தும் பலர், தீராத வியாதிகளால் அவதிப்படுவதை நாம் அன்றாட வாழ்வில் கண்டு வருகிறோம்.
இத்தகைய சூழ்நிலையில் நாம் எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாக பொருட்செல்வம் பெற்றிருந்தாலும், அது செல்வாக்கிலா செல்வமாகிவிடுகிறது.
பாடுபட்டுப் பெற்ற செல்வங்களை, முறைப்படுத்தாமல் பல சமயங்களில் அவற்றை நாம் இழந்தும் வருகிறோம்.
அறியாமையும், பேராசையும் கடிவாளமற்ற குதிரைகளாக திசைக்கொருபுறம் இழுத்து நாம் பெற்ற செல்வங்களைச் சிதைத்து, நம்மையும் சிதைக்குள் சிக்க வைத்துவிடுகிறது. உபரி செலவுகள் நம்மை ஊதாரி ஆக்கிவிடுகிறது.
நம் செல்வத்தின் நிலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
ஒவ்வொரு மாதமும், நாம் பெறும் ஊதியத்தினை வைத்து எத்தகைய வாழ்க்கைத் தரத்தில் நாம் இன்று வாழ்கிறோமோ
அதே வாழ்கைத் தரத்தில், இந்த வருமானம் இல்லாமல் எத்தனை நாட்கள் / மாதங்கள் வாழ முடியுமோ அதே நமது வளம்.
இத்தகைய வருமானத்தை, அதாவது ஒரு தனி மனிதன் சம்பளமாகவோ, தொழிலின் வருவாயாகவோ பெரும் பணத்தை முதல் நிலை வருமானம் எனலாம். இத்தகைய வருமானத்திற்கு ஒவ்வொரு தனி மனிதனின் உடல் உழைப்பு முக்கியம்.
இத்தகைய வருமானம் தொழில் நசிவாலோ, உடல் உழைப்பு தரும் நபரின் இயலாமையிலோ இழக்க நேரிடலாம்.
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நம் வாழ்க்கைத் தரம் குறைய, நிறைய வாய்ப்பிருக்கிறது.
இதனை தவிர்க்க, நாம் இரண்டாம் நிலை வருமானத்திற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து ஏற்படுத்த வேண்டும்.
இந்த வருமானம் நமது உடல் உழைப்பின்றி வருவதாகும். நம் பரம்பரை வசதிகளை வைத்தோ, நாம் முன்னர் ஈட்டிய பொருளாதரத்தை வைத்தோ இதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
கட்டிடங்களின் மூலம், வாகனங்களின் மூலம் வாடகையாகவோ அல்லது எவ்வித உடல் உழைப்பும் இன்றி மேற்பார்வையின் மூலமே ஒரு வருமானம் வர வேண்டும். நம்மில் எத்தனை பேர் இத்தகைய வருமானத்திற்கு வழி வகை செய்துள்ளோம்.
ஒருவேளை சிறிது தேவைக்கு அதிகமாக வருமானம் நமக்கு வரப் பெற்றிருந்தால், நாம் என்ன செய்கிறோம், விலை உயர்ந்த வாகனம், சொகுசான வீடு அதுவும் நகரின் மையப் பகுதியில் அல்லது இன்னும் பல ஆடம்பரச் செலவுகள்.
வாழ்கையை அனுபவிக்க வேண்டும் தான் ஆனால், ஒட்டு மொத்த குடும்பமும் ஒரே வருவாயை நம்பி இராமல், இரண்டாம் நிலை வருமானத்திற்கும் வழி செய்தால் நம் குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பை ஏற்படுத்தலாம்.
வேலை வாய்ப்பு உறுதியின்மை நிலவும் இந்தக் காலக்கட்டத்தில் நாம் முதல் நிலை வருமானத்தை கொண்டு இரண்டாம் நிலை வருமானத்திற்கு வழிவகை செய்தல் பாதுகாப்பானது.
நமது சேமிப்பை பகுதிகளாகப் பிரித்து முதலீடு செய்யலாம். உதாரணமாக, 4 லட்சத்திற்கு ஒரு இடம் வாங்குவதற்கு பதிலாக 2 லட்சத்திற்கு 2 இடங்களாக வாங்கிப் போட்டால், எதிர்காலத்தில் தொழில் செய்ய பணம் தேவைப்படும் போது ஒன்றை மட்டும் விற்று மற்றொன்றை எதிர் காலத்திற்கான பொருளாதார பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
நிகழ்காலத்தில் இரண்டாம் நிலை வருமானத்திற்கு வழிவகை செய்துகொள்ளாமல், ஆடம்பரமாக வாழ்ந்து பிற்காலத்தில் பொருளாதார பற்றாக் குறையால் வாடும் குடும்பத்தினரை "வாழ்ந்து கெட்ட குடும்பம்" என்று சமுதாயம் அழைப்பதை நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்.
அத்தகைய நிலை நம்மில் யாருக்கும் வந்து விடக்கூடாது. தாங்கிப் பிடிக்கும் பொருளாதாரம் இருந்தால் தான் நம் வாழ்வும் அதே நிலையில் தாக்குப் பிடிக்கும் என்பதை உணர வேண்டும்.
வட்டமிட்டு செலவு செய்யுங்கள்
திட்டமிட்டு சேமியுங்கள்.

No comments:

Post a Comment