Wednesday 8 March 2023

ஏமாற்றம் துரோகம் இதனை வெல்லும் சொற்கள்.

 ஏமாற்றம் துரோகம் இதனை

வெல்லும் சொற்கள்.
மனித வாழ்கையைப் புரட்டிப் போட்ட ஒரு சில சொற்கள் உண்டு.
யாரெல்லாம் இவைகளை உச்சரித்து உணர்ந்து இருந்தார்களோ, அவர்கள் தாங்கள் வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறார்கள். இது வரலாறு மட்டுமல்ல
நிகழ்கால உண்மையும் கூட.
மனிதன் தனக்கு முன் வரும் எல்லா நிகழ்வுகளையும் இந்தச் சொற்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கவே இந்த அற்புத சொற்கள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டன.
இவைகளைப் பயன்படுத்தியவர்கள் வாழ்க்கையைப் பொருள்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தார்கள்.
🔹உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள்.
🔹உலகை மாற்றி அமைத்த அறிவியல் மேதைகள்.
🔹செல்வத்தை வான் மழையென கொட்டச் செய்த தொழில் மேதைகள்.
🔹உடல் நோயை ஒழித்த மருத்துவ மேதைகள்.
எனப் பலரும் ஒவ்வொரு தருணத்திலும் இந்தச் சொற்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி கண்டார்கள்.
ஆனால், நம்முடைய வாழ்க்கையிலும், நமக்கு வேதனைகளும், சோதனைகளும் வரும்போது, நம்மில் பெரும்பாலோர் இந்த வார்த்தையைப் பயன் படுத்துவது இல்லை.
உண்மையில் நாம் கலங்கும்போது இந்த சொற்களைப் பயன்படுத்தி இருக்கின்றோமா.
நாம் தோற்று நிற்கும் போது ஏன் இந்த நிலை எனக் கேட்கிறோமா.
நம்மை மற்றவர்கள் ஏமாற்றி விட்டாதாக, நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாதாக நாம் புலம்பும் போது இந்த நிலை ஏன் என்று கேட்பதில்லை.
நாளைய நமது பாதைகளின் இலக்குகளை நாம் தீர்மானிக்கத் தவறுகிறோம், பின் பூட்டிய வீட்டின் கதவின் முன் நிற்பது போல் நாம் செய்வைதயறியாது மலைத்து நிற்கிறோம்.
உண்மையில் வரலாற்றின் பக்கங்களிலும்,நிகழ் கால வெற்றிகளையும் கொண்டு வந்த ஒரே ஆதாரம் நிறைந்த சொற்கள்தான் இவைகள்.
ஏன். எதற்கு. எப்படி.
என்று கேள்வி கேட்க வேண்டும் என்று ஏதன்சு நாட்டு இளஞர்களைத் தட்டி எழுப்பினார் சாக்கரடீஸ்.
எதையும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கச் சொன்னார்கள் நம் முன்னோர்கள்.
இதே சிந்தனையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தூண்டுகிறார் வள்ளுவர்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு . (- 423)
யார் எதைச் சொன்னாலும் அதன் உண்மைப்பொருள் அறிவதே அறிவாகும்.
*ஏன். எதற்கு. எப்படி. என்ற கேள்விகளை விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் ,தலைவர்கள் கேட்டதால்தான், மனித குலம் ஆயிரம் ஆயிரம் கண்டுபிடிப்புகளைப் பெற்றன.*
*கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப்போனதும் மெய்ப்பொருள் காண்பதால் மட்டும்தான்.*
*மீண்டும், உங்கள் முன் எந்த கேள்விக்கும், சோதனையான தருணத்திற்கும் மலைத்துப் போய் நின்று விடாதீர்கள், மாறாக உரக்க உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.*
*''ஏன். எப்படி. எவ்வாறு. எதனால். ''என்ற இந்த சொற்களைப் பயன்படுத்தி உங்களை நீங்களே கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.*
*கேள்வி கேட்பது மூலமாகத்தான் நம்மை நாமே வளர்த்துக் கொள்ள முடியும். கேள்வி கேட்பது நம்முடைய பிறப்புரிமையாக இருக்க வேண்டும்.*

No comments:

Post a Comment