Tuesday 31 January 2023

நலன்களைத் தரும் உண்மை.

 நலன்களைத் தரும் உண்மை.

பொய் சொல்வது எவ்வளவு தவறு என்று நினைக்கின்றோமோ, அதை விடப் பொய் என்று தெரிந்தும் நம்புவது மிகப் பெரிய தப்புத் தானே.
அதுபோல தவறு என்று தெரிந்தும் அதையே தொடர்ந்து செய்வதும் எவ்வளவு தப்பு.
ஆனால் அன்றாட வாழ்வில் அதைத்தான் நாம் செய்து கொண்டே இருக்கின்றோம்.
இப்படித் தான் பேராசையில் பல பொய்களை உண்மை என்று நம்பி ஏமாந்து கொண்டு இருக்கின்றோம், ப‌ண‌த்தையும் இழ‌ந்து கொண்டு வருகின்றோம்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனின் அப்பா ஆசையாக ஒரு செர்ரி மரத்தை வளர்த்து வந்தாராம்.
ஒருநாள் வாஷிங்டனுக்குப் புதிய கோடாலி ஒன்று கிடைக்க, அதைக் கொண்டு கண்ணில் படுகிற மரம், செடிகளை எல்லாம் வெட்டி எறிந்து இருக்கிறார்.
அவர் வெட்டித் தள்ளியதில் அப்பா வளர்த்த செர்ரி மரமும் ஒன்று. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து வாஷிங்டனின் அப்பாவுக்கு அதிர்ச்சி.
மரத்தை யார் வெட்டியது என அவர் எல்லோரிடமும் கேட்க, வாஷிங்டன், தனது தவறை தைரியமாக ஒப்புக் கொண்டாராம்.
உண்மை தெரிந்து கோபத்தில் ஏதேனும் செய்து விடுவாரோ என எல்லோரும் நடுங்கிக் கொண்டு இருந்தார்கள்.
வாஷிங்டனின் அப்பாவோ, அமைதியாகி இருந்தார். மகனை அழைத்து, ‘நான் கோபக்காரன்னு தெரிஞ்சும், நீ உண்மையை சொன்னே பார்த்தியா.அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சது.
செர்ரி மரம் வெட்டப் படாம இருந்து இருந்தா எனக்குக் கிடைத்து இருக்கிற மகிழ்ச்சியை விட, நீ உண்மை பேசியது எனக்குப் பெரிய மகிழ்ச்சி.” என்று மகனின் நேர்மையைப் பாராட்டினாராம்.
வாஷிங்டனின் மனத்தில் இது ஆழமாகப் பதிந்து போனது.
அதன் பிறகு,
தன் வாழ்நாளில் எந்தச் சூழலிலும் எத்தனை பெரிய செயலுக்கும் பொய் சொல்வதில்லை என்கிற தன் கொள்கையில் உறுதியாக இருந்து இருக்கிறார்.
*பொய் சொல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை;*
அது நாம் அறியாமலேயே நமக்கு எல்லா நலன்களையும் கொடுக்கும்.

No comments:

Post a Comment