Friday 27 January 2023

இலக்கினை அடைவோம்.

 இலக்கினை அடைவோம்.

ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து பில்லுக்குப் பணம் கொடுக்கும் போது உங்களது பர்சை காணவில்லை.
ஐயோ பெரிய அசிங்கம் என்ன செய்யப் போகிறோம் என்று நினைக்கும்போது யாரோ ஒருவர் உங்களுக்குச் சம்பந்தமில்லாதவர் வந்து உங்களது பில்லுக்குப் பணம் கட்டினால் இத்தருணத்தில் இவர் கடவுள்.
சுட்டெரிக்கும் வெயிலில் நடக்க முடியாமல் நடந்து செல்லும் மனிதன் தண்ணீர் தாகம் எடுத்து தொண்டை அடைக்கும் நேரத்தில் ஒருவர் தனக்கு வைத்திருந்த தண்ணீரை உனக்குக் கொடுத்தால் அந்தத் தருணத்தில் அவர் கடவுள.
ரோட்டில் அடிபட்டு இரத்தம் சொட்டச்சொட்ட உயிரை இழக்கப் போகும் மனிதன் தன்னை யாராவது தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்தால் உயிர் பிழைக்கலாம் என்ற நிலையில் யாரோ ஒருவர் தன் சகோதரனைப்போல தூக்கிச் சென்று அவன் உயிரைக் காப்பாற்ற உதவும் இந்த மனிதன் கடவுள்.
எங்கே தான் என்ற அகங்காரம் அடித்து நொறுக்கப்படுகிறதோ எந்த சூழ்நிலையில் மனிதன் தன் நிலையை உணர்ந்து நம்மால் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று புலம்புகிறானோ அந்தத் தருணத்தில் அவனுக்குத் தரப்படும் சந்தர்ப்பங்களிலிருந்து பொருள்களிலிருந்து எல்லாமே கடவுள் தான். இதுவே “இறை”.
வறியவன் ஒருவனுக்கு உணவு கொடுப்பதிலும்,
கல்வி பெற இயலாத பிஞ்சு உள்ளத்திற்கு கல்வி அளிக்கும்போதும்,
முதுமையில் தட்டுத் தடுமாறி வாழ்வின் கடைசி முடிவு எங்கே என்று தேடும் வயோதிகர்களுக்கு உதவி செய்யும் போதும்,
இல்லை என்று வருந்தும் வயிற்றுக்கு சோறு போடும் போதும்
மனிதனுள் கடவுள் சஞ்சரிக்கின்றான்.
*படைத்தவன் இருக்கான் பார்த்துக் கொள்வான்
பயணத்தைத் தொடர்ந்து விடு...*
என்ற கவிஞரின் வார்த்தையைப் போல.
இறைவன் இருக்கிறான் என்று நம்பிக்கையுடன் பயணத்தை தொடர்வோம். நாம் எட்டவேண்டிய இலட்சியத்தினை அடைவோம்.

No comments:

Post a Comment