Monday 23 January 2023

வலிகளின் வலிமை.

 வலிகளின் வலிமை.

ஒரு கூட்டுக்குள் நம்மைச் சிறைப் பிடித்து வைத்து விட்டது இயற்கை. இனி என்ன செய்யப் போகிறோம்.
எதிர்காலம் பற்றி ஏகப்பட்ட பயம். ஆனால் இனி மேல் தான் இருக்கிறது உண்மையான போராட்டமே.
ஒரு புழு தன்னை ஒரு கூண்டுக்குள் குறுக்கிக் கொண்டு மெல்ல மெல்ல தன்னையே அழித்துக் கொண்டு தவமாய் தவம் இருந்து தன்னை உணர முயற்சிக்கிறது.
அது சுருங்கிச் சுருங்கி அனைத்தையும் இழந்து எதற்கும் தயார் என இறைவனிடம் சரணைடைந்து நிற்கையில் அதற்கு சிறகு முளைக்கிறது.
சிறகு முளைத்ததும் அது தன்னை உணர்ந்து கொண்டு கூண்டுக்குள் இருந்து விடுபடப் போராடுகிறது.
நீண்ட வலிமிகு வேதனை காலத்திற்குப் பிறகு விடுதலை பெற்று வண்ணச் சிறகுகளுடன் நீல வானத்தில் பறந்து மகிழ்கிறது.
இந்த புழுவினைப் போலவே இன்று நாமும் கூட்டிற்குள் சிறைப்பட்டு இருக்கிறோம். ஒரு கட்டத்தில் நமக்கும் சிறகு முளைக்கும்.
அன்று வலியுடன் போராடி மீண்டால் இந்த வாழ்க்கையில் இருந்து நாம் விடுதலை பெறலாம்.
இனி நமது வாழ்க்கை வலி மிக்கதாகவே இருக்கும். ஆனாலும் அதைக் கடந்து சென்றால் வானம் வசப்படும்.
கொஞ்சம் பொறுமை காப்பது அவசியம். ஒரு புழுவை விடவா நாம் கேவலமாகப் போய் விட்டோம்.
ஒரு புழுவிற்கே சிறகையும் ஆற்றலையும் அளித்த இறைவன் நமக்கு ஏதும் தராமலா இருப்பார்.
அந்தப் புழுவைப் போல் அத்தனையையும் எதிர் கொண்டு நமது தகுதியை நிரூபித்தால் மட்டுமே நமது வாழ்வும் வண்ண மயமாய் மாறும்.
இது சத்தியம்.இதுவே நிச்சயம். கவலை வேண்டாம். பொறுமையும் இறைவனின் மீது நம்பிக்கையும் இருந்தால் வாழ்வு நிச்சயம் சிறக்கும்.
வாழ்க்கையில் வலிகள் சாதாரணம். வலிகளே நம்மை வலிமை மிக்கதாக்குகின்றன.அவை வாழ்வில் நமக்கு புதிய வழிகளை காண்பிக்கின்றன.
வாழ்வை உடலளவில் தைரியமாய் எதிர் கொள்வது வீரம்.
மனதளவில் தைரியமாய் எதிர் கொள்வதற்குப் பெயர் தீரம்.
சிலர் வீரராய் இருப்பார்கள் ஆனால் தீரம் இருப்பதில்லை.
வேறு சிலருக்குத் தீரம் இருக்கும் அளவிற்கு வீரம் இருப்பதில்லை.
வீரமும் தீரமும் இணைந்த மனிதர்களே மாமனிதர்கள். இந்த வாழ்வில் மனிதனாய் வாழ்ந்து மடிவதை விட மாமனிதனாய் வாழ முயல்வோம்.
ஆம்.நம்மால் முடியும்.

No comments:

Post a Comment