Tuesday 24 January 2023

தாழ்வாக எண்ண வேண்டாம்.

 தாழ்வாக எண்ண வேண்டாம்.

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பர்கள் என்று, தேவையற்று நாமே நமக்குள் நினைத்துக் கொள்ளும் ஒரு கண்ணோட்டம் மிகவும் தவறானது.
நம்மைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை விட, மற்றவர்கள் கண்ணோட்டத்திற்கு, நாம் பெரிதாக மதிப்பளிக்கத் தொடங்கும் போதே ,நாம் மனதளவில் நம்மைத் தாழ்த்திக் கொள்ளத் துவங்கி விடுகின்றோம்.
நாம் செய்யும் செயல்களையும், அதன் விளைவுகளையும் மறந்து, அடுத்தவர்களின் எண்ணத்திற்கு அதிக மதிப்புக் கொடுப்பதால், நம் செயல்கள் முழுதாக நடைபெறாமல், அதனால் மனம் புழுங்குவது வழக்கமாகி விட்டது.
முன்னேற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியை இந்த எண்ணம் சாகடித்து விடும். முளையிலேயே முயற்சி சாகடிக்கப்படுவதால், முன்னேற்றம் எங்கிருந்து வரும்.
இந்த அச்சத்திலேயே பலர் மற்ற தகுதிகளை, திறமைகளைக் கைவிட்டு விடுகின்றனர். இந்த அச்சம் இருந்தால், படைப்புத் திறனோ, முன்னேற வேண்டும் என்கிற உந்துதலோ இருக்காது.
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாது; புரியாது. முதலில், இந்த எண்ணத்திலிருந்து வெளியில் வர வேண்டும். இப்படிப்பட்ட எண்ணத்தில் இருப்பது, இருளில் இருப்பதற்குச் சமம்.
வெளியில் வந்து விட வேண்டும் என்று முனைவது முதல் படி,. மற்ற தடைகளை வரிசையாகக் களைய வேண்டும்.
மனதில் ஆழப் பதிந்துள்ள எதிர்மறை எண்ணம், தாழ்வு மனப்பான்மை, அச்சம், தயக்கம், ஒப்பீடு என்று அனைத்தில் இருந்தும் வெளிவர முயற்சி செய்ய வேண்டும்.
வெற்றியை நோக்கி செல்லும் பயணத்தில், பிறர் கருத்துகளையும், மன நிறைவுகளையும் நிறைவுபடுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
பிறர் உங்களைக் குறை கூறும் போது, சோர்ந்து போகாதீர்கள்; பிறர் இப்படி இருக்கின்றனரே என்று, உள்ளுக்குள் பொறுமாதீர்கள். இருக்கும் நிலையை ஏற்றுக் கொள்ளுங்கள்; தீர்வு காணுங்கள்.
"இந்த உலகம் உங்களைப் பார்க்கிற பார்வை ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே தான் இருக்கும்.
சிலருக்கு, இன்று உங்களைப் பிடிக்கும். நாளையே அவர்களுக்கு உங்களைப் பிடிக்காமலும் போகலாம்.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தால் நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ முடியாது.

No comments:

Post a Comment