Friday 20 January 2023

தயக்கம் எனும் பலவீனம்.

 தயக்கம் எனும் பலவீனம்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒருமுறை ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
”ரிலேட்டிவிட்டி தியரி என்கிற உங்கள் அரிய விஞ்ஞான உண்மையை நீங்கள் கண்டுபிடிக்காமல் விட்டிருந்தால் இந்த உலகம் என்னவாகி இருக்கும் ”
ஐன்ஸ்டீன் சிரித்தபடி, “”ஒன்றும் குடி முழுகிப் போய் இருக்காது… வேறு ஒருவர் அதைக் கண்டறிந்து வெளிப்படுத்தி இருப்பார்” என்றார்.
அதிர்ச்சி அடைந்த கேள்வியாளர், “”இன்னொருவர் கண்டறிந்து வெளிப்படுத்த பல ஆண்டுகள் ஆகி விடும் அல்லவா ” என்று இழுத்தார்.
சிறிது யோசித்த ஐன்ஸ்டீன்… “”அதிகபட்சம் இன்னும் ஒரு மூன்று வாரங்கள் வேண்டுமானால் தள்ளிப்போயிருக்கும். அவ்வளவுதான்”என்றார். ஆம்… இது உண்மை. உலகில் ஒரே ஒரு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் இதைக்கண்டறிய முடியும் என்பதில்லை. காரணம் அதே கால கட்டத்தில் பல விஞ்ஞானிகள் பல பகுதிகளில் அத்தகைய சிந்தனைத் தாக்கத்துடன் அதே கோட்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.
யார் முந்தப் போகிறார்கள் என்பதற்குத்தான் உலகம் காத்திருந்தது. ஒரு பந்தயம் போல.
வேறு ஜெர்மானிய விஞ்ஞானியும் ரிலேட்டிவிட்டி தியரியின் பல கூறுகளை ஆய்வு செய்திருந்தார்.
கிட்டத்தட்ட முடிவையும் கண்டறிந்து விட்டார். ஆனால், வகுத்து, தொகுத்து, ஆராய்ச்சிக் கட்டுரையாக்க தாமதம் செய்து விட்டார். எழுத்தில் வடிப்பதில் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருந்துவிட்டதால் புகழ் முழுவதையும், ஐன்ஸ்டீன் அள்ளிக் கொண்டார். ஐன்ஸ்டீன் அவரையும் அவரது ஆராய்ச்சியையும் மனதில் வைத்துக் கொண்டுதான் அதிகபட்சம் மூன்று வாரங்கள் என்று பதில் கூறியதாகக் கருதுகிறார்கள்.
பலர் இப்படித்தான் பெரும்புகழையும், பொருளையும் சின்னச் சின்ன சோம்பேறித்தனத்தால் இழந்து போய் விட்டார்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம். பின்னர் செய்து முடிக்கலாம் என்று கொஞ்சம் தள்ளி வைத்தவர்களை உலகம் மொத்தமாகத் தள்ளி வைத்து விடுகிறது.
காரணம் இது ஒரு ஓடுகளம்.
இங்கே தயங்கி நிற்பவர்கள் தள்ளப்படுவார்கள்.

No comments:

Post a Comment