Tuesday 10 January 2023

வாழ்க்கையின் மெய்யியல்.

 வாழ்க்கையின் மெய்யியல்.

மனித வாழ்க்கை என்பது இன்பம் மட்டுமே நிரம்பிய மலர்ப் பாதை அல்ல.
தடைகளும், இடையூறுகளும், இழப்புகளும், சோதனைகளும் நிரம்பியது தான்.
சிலருக்கு வாழ்க்கையில் எல்லா இன்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைவேறுகிறது. சிலருக்கோ அடுத்தடுத்து துன்பங்கள் தொடருகிறது.
எவ்வளவு தான் நாம் உண்மையுடன் உழைத்தாலும், முன்னேறினாலும் வாழ்வில் பல ஏற்றத் தாழ்வுகளை, துன்பங்களை,, சோதனைகளை கடந்து தான் சிகரங்களாய் அடைய வேண்டி இருக்கிறது.
துன்பங்கள், சோதனைகள் வரும் போது அதைத் தாங்கி, வெற்றிகரமாக வென்று முன்னேறுகிறவர்கள் தான் சிகரத்தை அடைகிறார்கள்.
ஒரு சமையல் கலைஞரின் மகள் வாழ்வில் எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் சோதனைகளையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
“ஒரு நாள் தளர்ந்த மனதுடன் தன் தந்தையிடம் வந்தாள். தன் வாழ்வில் தான் படும் இல்லல்களைச் சொல்லி அழுதார்.
அவரது தந்தை அவளைத் தேற்றி, தன் சமையல் கூடத்திற்குள் அவளை அழைத்துச் சென்று ஒரு பாத்திரத்தில் செம்முள்ளங்கிகளை (கேரட்) இட்டு வேக வைத்தார்.
மற்றொரு பாத்திரத்தில் கோழி முட்டைகளை இட்டு வேக வைத்தார். சிறிது நேரம் கழித்து அவற்றை அடுப்பிலிருந்து இறக்கி இரண்டையும் தன் மகளிடம் காட்டி,
“என் அன்பு மகளே, முட்டையின் உட்பகுதி திரவமாய் இருந்தது. வெப்பத்தை எதிர்கொண்டதும் இறுகி விட்டது. செம்முள்ளங்கியின் உட்புறம் திடமாய் இருந்தது. வெப்பத்தை எதிர் கொண்டதும் இளகி விட்டது.
சோதனைகள் இந்த வெப்பம் போலத்தான்.. சோதனை வரும் போது செம்முள்ளங்கி போல இளகி விடாதே. முட்டை போல் திடமாகி விடு” என்று ஆலோசனை கூறினார்.
மகளுக்கு சமையலும் புரிந்தது. வாழ்க்கையின் மெய்யியலும் புரிந்தது.
யாருடைய வாழ்க்கையில் இடர்பாடு இல்லை. வாழ்க்கைப் பாதை என்பதே கரடுமுரடு நிறைந்ததாகத் தான் இருக்கும். எல்லோர் வாழ்விலும் சோதனைகளும், வேதனைகளும் வந்து கொண்டு தான் இருக்கும். அதற்காக நாம் துவண்டு போய் விடக் கூடாது.
வாழ்க்கையில் நிகழும் துன்பங்கள், துயரங்களை நேசியுங்கள். அதில் ஒவ்வொன்றிலும் நீங்கள் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டு இருப்பீர்கள். வேதனைகள், சோதனைகளைத் தயக்கம் இன்றி தைரியமாக சந்திக்கத் தயாராகுங்கள்.
நினைவில் கொள்ளுங்கள். சோதனைகளையும், வேதனைகளையும்
எதிர்கொள்பவர்கள் தான், சாதனையாளர்களாகிறார்கள்.
ஏற்பட்ட இடர்களை மறந்து ,நமக்கான கடமைகளை நிறைவேற்ற வாழ்க்கையை மகிழ்வுடன் தொடருங்கள்.
வெற்றி உங்கள் பக்கம தேடி வரும்.

No comments:

Post a Comment