Saturday 19 June 2021

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.
தற்பெருமையும் பெரியவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொள்வதும் எத்தனை தவறானவை என்பதை மகாபாரதக் கதை ஒன்று மிக அழகாக விளக்குகிறது. மகாபாரதப் போர் நடந்துகொண்டிருந்த காலம். சூரியாஸ்தமனம் ஆகிவிட்டால் போரை நிறுத்திவிடுவது அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த வழக்கம்.
சூரியாஸ்தமனம் ஆகிவிட்டதால் அன்றைய போர் முடிவுக்கு வந்துவிட்டது. பாண்டவர்கள் ஒவ்வொருவராகப் போர்க்களத்தை விட்டுப் பாசறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். தர்மபுத்திரர், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் திரும்பிவிட்டார்கள். ஆனால் அர்ச்சுனனை இன்னும் காணோம். இருள் விழத் தொடங்கிவிட்டது. அர்ச்சுனனின் வரவை எதிர்பார்த்துப் பாசறை வாயிலில் தலைவிரி கோலமாகக் காத்திருக்கிறாள் பாஞ்சாலி.
அர்ச்சுனனின் நிழலுருவம் மெல்ல மெல்லப் பாசறை நோக்கி நடந்துவருவது தெரிகிறது. அவனை அடையாளம் கண்டுகொண்ட தர்மபுத்திரர் அவன் அருகே வந்ததும் ஆவலோடு கேட்கிறார்:
`இன்றாவது கர்ணனைக்
கொன்றாயா அர்ச்சுனா?’
கெளரவர் அணியில் இருக்கிற மாவீரனான கர்ணனைக் கொல்ல வேண்டும். அதுதானே பாண்டவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது? ஒவ்வொரு நாளும் இதே கேள்வியை தர்மபுத்திரர் கேட்பதும் நாளை கொல்கிறேன் என அர்ச்சுனன் பதில் சொல்வதும் வழக்கமானதுதான். அன்றும் அர்ச்சுனன் அதே பதிலைச் சொல்கிறான்: `நாளை கொன்றுவிடுவேன் அண்ணா!’
அன்று தர்மபுத்திரர் நாக்கில் சனி. `நாளையா? அப்படியானால் இன்று கொல்லவில்லையா நீ? உன் கையில் இருக்கும் காண்டீபம் என்ன வில்லா இல்லை புல்லா?’ உணர்ச்சி வசப்படடுச் சீறுகிறார் தர்மபுத்திரர். அவர் அவசரத்தில் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். தன் காண்டீபத்தை யாராவது பழித்தால் அவர்களைக் கொல்வது என அர்ச்சுனன் வாழ்நாள் சபதம் செய்திருக்கிறான்.
இப்போது என்ன செய்வது? பாஞ்சாலி திகைக்கிறாள். தர்மபுத்திரர் தயக்கமின்றிச் சொல்கிறார்: `நல்லது அர்ச்சுனா. உன் சபதத்தை மறந்துவிட்டேன். சரி. இன்று என்னைக் கொன்றுவிடு. நாளையாவது கர்ணனைக் கொல்!’ இதென்ன குழப்பம்! பாஞ்சாலி திகைக்கிறாள். கண்ணனை பக்தியோடு அழைக்கிறாள். காட்சி தருகிறான் கண்ணக் கடவுள். தர்மபுத்திரரைக் காப்பாற்றச் சொல்கிறாள் பாஞ்சாலி. கண்ணன் நகைத்தவாறே அர்ச்சுனனிடம் சொல்கிறான்.
`அர்ச்சுனா! சாஸ்திரப்படி உன் அண்ணனைக் கொல்லாமல் கொல்ல ஒரு வழியுண்டு. அந்த வழியில் செயல்பட்டால் அண்ணன் கொல்லப்படமாட்டார். ஆனால் உன் சபதம் நிறைவேறியதாகவும் ஆகும். நம்மில் வயதில் மூத்தோரை அவமரியாதையாக ஏகவசனத்தில் பேசினால் சாஸ்திரப்படி அவர்களைக் கொன்றதற்குச் சமானம்.’*
இதைக் கேட்ட அர்ச்சுனன் தன் அண்ணனை ஏகவசனத்தில் மரியாதை இல்லாமல் பேசுகிறான். அப்படித் தன் சபதத்தை நிறைவேற்றிக் கொள்கிறான். ஆனால் இப்போது அர்ச்சுனனுக்கு ஒரு பெருங் கவலை. அண்ணனைக் கொல்வதற்கு இணையான செயலைச் செய்துவிட்டுத் தான் உயிரோடிருக்க வேண்டுமா? அவன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறான். பாஞ்சாலி மறுபடி ‘கண்ணா கண்ணா’ எனக் கதறுகிறாள். அவளுக்குக் கண்ணனை விட்டால் வேறு கதியேது? கண்ணன் நகைத்தவாறே சொல்கிறான்.
`அர்ச்சுனா! நீ சாகவேண்டும். ஆனால் சாகக் கூடாது. அதற்கும் சாஸ்திரத்தில் ஒரு வழி இருக்கிறது. உன்னை நீயே தற்பெருமையாக ஏதேனும் புகழ்ந்து பேசிக்கொள்.
தற்பெருமை பேசுவது சாஸ்திரப்படி தற்கொலை செய்துகொள்வதற்குச் சமமானது!’* அர்ச்சுனன் கண்ணன் அறிவுரைப்படித் தன்னைத் தானே புகழ்ந்து பேசி சாஸ்திரப்படித் தற்கொலை செய்துகொண்டு தன்னைக் காத்துக் கொண்டான் என்கிறது மகாபாரதக் கிளைக்கதை.

No comments:

Post a Comment