Tuesday 29 June 2021

உயர்ந்தவர் என நினைப்பதே முட்டாள்தனம்

 உயர்ந்தவர் என நினைப்பதே முட்டாள்தனம்.

நாம் கற்ற கல்வி, தேடிய செல்வம், அடைந்த பதவி இவற்றை ஓர் சமூக‌த்தில் உயர்ந்தவர் என்று நினைப்பதே முட்டாள்தனம். முதலில் அதை மாற்றிக் கொள்வோம்...
நீங்கள் படித்தது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன். அதில் உங்கள் திறனைக் காட்டினீர்கள். அதன் விளைவாக, இந்த நிலைக்கு வந்தீர்கள். வேறொருவர் அவருடைய திறமைக்கு ஏற்றபடி சமூகத்தில் வேறு ஒரு கட்டத்திற்குப் பயணம் ஆனார்கள், அவ்வளவுதான்...
துறவி ஒருவர் பல ஆண்டுகளாக ஒரு புண்ணிய நதிக்கரையில் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டிருந்தார். உயர்குடிப் பிறந்தவர் என்ற கர்வம் அவருக்கு எப்போதும் உண்டு. தவ வாழ்வு மேற்கொண்டபோதும் முன்கோபக்காரர்...
இவரைப் பற்றித் தெரியாத, ஊருக்குப் புதிதாக வந்த சலவைத் தொழிலாளி ஒருவர், அந்த ஆற்றிற்கு வந்தார்...
அப்போது அந்தத் துறவி, ஆற்றங்கரையில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்து கொண்டிருந்தார்...
அந்த சலவைத் தொழிலாளி, அழுக்குத் துணிகளை தண்ணீரில் நனைத்து, கல்லில் அடித்துத் துவைக்கத் தொடங்கினார்...
துணியை அடித்துத் துவைத்தபோது, அதன் அழுக்கு நீர் பறந்து துறவி மீது பட்டது. கண் திறந்து பார்த்தார் துறவி, தன்னைக் களங்கப்படுத்திவிட்டதாக சலவைத் தொழிலாளி மீது கடும் கோபம் கொண்டார்...
அந்தத் தொழிலாளியைக் கண்டபடி திட்டித் தீர்த்தார். சாபமிட்டார். உடனடியாக இந்த இடத்தைவிட்டு ஓடி விடு என்று கூச்சலிட்டார்...
துணி துவைக்கும் வேலையில் முழு கவனமாக இருந்த அந்த தொழிலாளி, துறவி சொன்னதை கவனிக்கவேயில்லை...
தன் வார்த்தையை அவர் மதிக்கவில்லையென்று, கடும் கோபமடைந்த துறவி, நிதானம் இழந்தார். அந்தத் தொழிலாளியை நோக்கி ஓடினார்...
சற்றும் இரக்கம் இல்லாமல் ஒரு தடியால் அந்தத் தொழிலாளியை சரமாரியாக அடித்தார். எதிர்பார்க்காத இந்தத் தாக்குதலால், அந்தத் தொழிலாளி நிலை குலைந்தார்...
“எதற்காக என்னை இப்ப்படி அடித்தீர்கள்...? என்ன தவறு செய்தேன்...?” என்று நலிந்த குரலில் கேட்டார்...
என்ன துணிச்சல் இருந்தால், என் குடிலுக்கு அருகில் நீ வந்திருப்பாய்...? அழுக்கு நீரை என் புனித உடல் மீது படச் செய்து, என்னைக் களங்கப்படுத்தி விட்டாயே...!” என்று கத்தினார்...
தன்னைத் நொந்துகொண்ட அந்தத் தொழிலாளி, “மன்னியுங்கள்” என்று கூறிவிட்டு, அங்கு இருந்து புறப்பட்டார்...
தான் அசுத்தப்பட்டுவிட்டதாகக் கருதிய துறவி, ஆற்றில் இறங்கி குளிக்கத் தொடங்கினார்...
சற்று தொலைவில், சலவைத் தொழிலாளியும் குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்...
துறவிக்கு வியப்பு!. இவர் ஏன் குளிக்கிறார்...? என்று ஐயம் எழுந்தது அவருக்கு...
நான் குளிப்பது நியாயம்!. நீ ஏன் குளிக்கிறாய்...? என்று கேட்டார் துறவி...
நீங்கள் என்ன காரணத்திற்காக குளிக்கிறீர்களோ, அதே காரணத்திற்காகத்தான் நானும் குளிக்கிறேன் என்று அமைதியாக பதில் கூறினார்...
துறவிக்கு வியப்பு!. இழிகுலத்தில் பிறந்த உன்னைத் தொட்டுவிட்டதால் நான் குளிக்கிறேன். என்னைப் போன்ற தெய்வீக சாதுவின் கை பட்டதால் உனக்கு எந்த அசுத்தமும் சேராதே!. நீ பின் ஏன் குளிக்கிறாய்...? என்று கேட்டார்...
அமைதியான குரலில் சலவைத் தொழிலாளி பேசினார்...
அய்யா!, உங்கள் பார்வையில் நான் இழிந்த குலத்தில் பிறந்தவன். ஆனால்!, இழிந்த குலத்தவனைவிட மோசமான ஒருவர் தங்கள் மூலம் என்னைத் தொட்டுவிட்டார்...
தன்னை மறந்து என் மீது கை வைத்து அடிக்கும்படிச் செய்துவிட்ட, பொங்கி எழுந்த தங்களது உணர்ச்சி, வெறுப்பும் அசுத்தமும் கொண்டவை. அத்தகைய உணர்வுகள் கொண்ட ஒருவர் என்னைத் தீண்டிவிட்டதால் நானும் களங்கப்பட்டுவிட்டேன். அதனால் குளிக்கிறேன் என்றார்...
துறவியின் கண்களை மறைத்திருந்த திரை அறுந்து விழுந்தது...
சலவைத் தொழிலாளி சொன்னதை ஆழ்ந்து சிந்தித்தார். தன்னைவிட அந்தத் தொழிலாளி எவ்வளவு மேலானவர் என்பதை உணர்ந்தார். இருவரில், இழிந்தவனாக நடந்து கொண்டது யார்...? என்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தார்.
ஆம் நண்பர்களே.
ஆடம்பரமான ஆன்மீக வழிபாடுகளும், வேத வழியில் கடைபிடித்து வந்த தவ வாழ்வும் சொல்லித் தராத பாடத்தை, படிக்காத ஒரு சிலரின் சொற்கள் வாழ்க்கைப் பாடத்தை சொல்லிக் கொடுத்து விடுகிறது.

No comments:

Post a Comment